மருத்துவ படிப்பு: நாடு முழுவதும் பொது கலந்தாய்வு முறை - தேசிய மருத்துவ ஆணையம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 10, 2023

Comments:0

மருத்துவ படிப்பு: நாடு முழுவதும் பொது கலந்தாய்வு முறை - தேசிய மருத்துவ ஆணையம்

மருத்துவ படிப்பு: நாடு முழுவதும் பொது கலந்தாய்வு முறை - தேசிய மருத்துவ ஆணையம் - Medical Education: Nationwide Public Consultation - National Medical Commission

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறையில் கலந்தாய்வு நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் உள்ள இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

நீட் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த தேர்வர்களின் அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலை (All India Merit List of the qualified candidates ) தேசிய தேர்வு முகமை வெளியிடும். இந்த அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலைக் கொண்டு - அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு(All India Quota Seats); மத்திய தொகுப்பு இடங்கள் (Central Pool Quota); மாநில தொகுப்பு இடங்கள் (State Government Quota Seats); தனியார் கல்லூரிகளில் உள்ள மாநில/நிர்வாக/ வெளிநாட வாழ் இந்தியர்கள் தொகுப்பு இடங்கள் (State/Management/NRI Quota Seats in Private Medical Colleges); மத்திய கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்கழகம்/நிகர்நிலைப் பல்கலைக்கழகம்;எய்ம்ஸ்/ஜிப்மர் பல்கலைக்கழகம் ஆகிய பிரிவுகளின் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதில், 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 100% இடங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள், எய்ம்ஸ்/ஜிப்மர், தன்னாட்சி பொருந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனரகம் நடத்தும்.

மாநில அரசு மருத்துவக் கல்லூரிக்கான 85% மாநில ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை அந்தந்த மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட அதிகாரம் கொண்டவர்களின் (Competent Authority) பரிந்துரையின் படி அமையும். அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலின் படி, மாநில அளவில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்.

மத்திய சுகாதார சேவைகள் தலைமை இயக்குனரகம்/மருத்துவ கலந்தாய்வு குழு மேற்கொள்ளும் கலந்தாய்வில் ( 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு, மத்திய பல்கலைக்கழகம்) மத்திய அரசின் இடஒதுக்கீடு முறை பொருந்தும். அதேபோன்று, 85% மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடு நடைமுறை பொருந்தும். மேலும், அந்தந்த மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு வகைகளுக்கான இடங்களில் அந்தந்த மாநிலங்களில் நிலவும் இடஒதுக்கீடுச் சட்டங்கள் பொருந்தும். இந்நிலையில், நாடு முழுவதும் மையப்படுத்தப்பட்ட பொது கலந்தாய்வு முறை நடத்தும் விதிமுறையை (Graduate Medical Education Regulations, 2023) தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.

மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் வெளியிடும் அறிவிப்பின் படியே நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படியே, 15% அகில இந்திய மருத்துவ ஒதுக்கீடு இடங்களுக்கு மத்திய அரசும், இதர மாநில இடஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசும் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு நடைமுறையை எளிமைப்படுத்தவும், அதிகமான மருத்துவ இடங்கள் வீணாகாமல் தடுக்கவும் இந்த பொது கலந்தாய்வு நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2019 தேசிய மருத்துவ வாரியச் சட்டத்தின் கீழ், மாநிலங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர்க்கைக்கு கலந்தாய்வை அந்தந்த மாநில அரசு அதிகாரிகள் தனியே நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள தற்போதைய விதிமுறை மாநில அரசின் உரிமையை பறிப்பதாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில அரசு சட்டம் இயற்றிய நிலையில், தற்போது கலந்தாய்வு உரிமையும் பறிபோகும் சூழல் எழுந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews