பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க அன்புமணி கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 28, 2023

Comments:0

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க அன்புமணி கோரிக்கை

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை Anbumani requested the government to take a quick decision regarding the job status of part-time specialist teachers

பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பணி நிலைப்பு தொடர்பாக 12 ஆண்டுகால கோரிக்கை குறித்து அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;

தமிழக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்றுத் தருவதற்காகப் பணியமர்த்தப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுவதைப் போன்று அவர்களுக்கும் மே மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மிச்சாதாரணமான கோரிக்கையைக் கூட நிறைவேற்றுவதற்கு அரசு முன்வரவில்லை. பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு பலமுறை வாக்களித்தும் கூட அவை வாக்குறுதியாகவே உள்ளன. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று கடந்த 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் அப்போதைய பள்ளிக் கல்வி அமைச்சர் அறிவித்திருந்தார்.

ஆனால், அந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. பல ஆண்டுகளாகத் தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இந்த ஆண்டாவது தங்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த மாதம் சென்னையில் அவர்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தினர்.

அப்போது அவரது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு உறுதியளித்ததால் தங்களின் கனவுகள் நனவாகும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வரை அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை.

பணியமர்த்தப்படும் போது அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறி விட்டது. பகுதி நேர சிறப்பாசிரியர்கள் வாரத்திற்கு 3 அரை நாட்கள் மட்டும் பணியாற்றினால் போதுமானது; அதிகபட்சமாக 4 பள்ளிகளில் பணியாற்றலாம்; ஒரு பள்ளிக்கு ரூ.5,000 வீதம் 4 பள்ளிகளுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம் ஈட்ட முடியும் என்று அரசு அறிவித்ததால் தான் அவர்கள் இப்பணியில் சேர்ந்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டிருந்தால் அவர்களுக்கு இப்போது ரூ.40,000 ஊதியம் கிடைத்திருக்கும். ஆனால், ஒரு பள்ளியில் மட்டுமே பணியாற்ற அனுமதிக்கப்படுவதால் ரூ.10,000 மட்டுமே கிடைக்கிறது. இது அவர்களுக்கு போதுமானது அல்ல. சிறப்பாசிரியர்களுக்கான மாத ஊதியம் ரூ.10,000 என்பது கூட உடனடியாக கிடைத்துவிடவில்லை. கடந்த காலங்களில் பாமக-வின் வலியுறுத்தலை அடுத்து, அவர்களின் ஊதியம் 2014ம் ஆண்டில் ரூ.7,000 ஆகவும்,பின்னர் ரூ.7,700 ஆகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டது. அதன்பின் கடந்த இரு ஆண்டுகளாக அவர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று திமுக தேர்தல் அறிக்கையில் 181-ஆம் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியும் இரு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. 12 ஆண்டுகளாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணி செய்து வரும் அவர்களின் நிலை மிகவும் பரிதாபமானது.

பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்நிலையையும், அவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து பணி நிலைப்பு உள்ளிட்ட அவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews