காலை உணவு திட்டத்தில் தகுதி இல்லாதவர்களை சேர்க்க வற்புறுத்தல்: தரக்குறைவாக பேசுவதாகவும் கவுன்சிலர்கள் மீது புகார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 27, 2023

Comments:0

காலை உணவு திட்டத்தில் தகுதி இல்லாதவர்களை சேர்க்க வற்புறுத்தல்: தரக்குறைவாக பேசுவதாகவும் கவுன்சிலர்கள் மீது புகார்



Insisting on inclusion of ineligibles in the breakfast scheme: Councilors accused of bad language - காலை உணவு திட்டத்தில் தகுதி இல்லாதவர்களை சேர்க்க வற்புறுத்தல்: தரக்குறைவாக பேசுவதாகவும் கவுன்சிலர்கள் மீது புகார்

கள்ளக்குறிச்சி: தொடக்கப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான ஆள்சேர்ப்புக்கு தகுதியற்ற மகளிரை சேர்க்க வலியுறுத்தி அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தரக்குறைவாக பேசுவதாக மகளிர் திட்ட பணியாளர்கள் வேதனையுடன் புகார் தெரிவித்து உள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும், மகளிர் திட்டம் மூலம் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான பணியாளர் தேர்வு செய்யும் பணிகளும் முடிந்து, திட்டத்துக்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு பள்ளிக்கு 3 பணியாளர்கள் என அறிவித்து, அந்தப் பணியாளர்கள் 10-ம் வகுப்பு முடித்து, அந்தந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் 3 ஆண்டுகளாக உறுப்பினராக இருக்க வேண்டும்; காலை உணவு செயல்படுத்தப்படும் பள்ளியில் பயிலும் மாணவரின் பெற்றோராகவும் அவர்கள் இருத்தல் வேண்டும் என்ற அரசு வழிகாட்டுதலின்படி ஆள் சேர்ப்பு நடந்து வருகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 638 மையங்களில் காலை உணவு செயல்படுத்தும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. அதற்காக மகளிர் திட்டம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியும் வழங்கப்படுகிறது.

இதில் சில மையங்களுக்கு ஆள் தேர்வு செய்வதில் இழுபறி நீடிப்பதாக மகளிர் திட்டப் பணி பொறுப்பாளர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியது:

உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நெய்வானை, அத்திப்பாக்கம், காட்டுஎடையார், காட்டுச் செல்லூர், கிளியூர் நத்தாமூர், புகைப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் இருந்து கவுன்சிலர்களால் பரிந்துரைக்கப்பட்ட நபர்களுக்கு அரசு வழிகாட்டுதலில் கூறியபடி தகுதிகள் இல்லை. இதனால் அவர்களை பணியமர்த்த முடியவில்லை. இதனால் மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள மையங்களுக்கு ஆட் சேர்ப்பு நடைபெறவில்லை. இதனிடையே இப்பகுதியில் உள்ள ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மகளிர் திட்டப் பணி பொறுப்பாளர்களை தரக் குறைவாக பேசுவதோடு, மிகவும் கீழ் தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதால், பணி செய்யவே அச்சமாக இருப்பதாக மகளிர் திட்டப் பணியாளர்கள், மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதேநேரத்தில் மாற்று ஏற்பாடாக, அரசு வழிகாட்டுதலில் உள்ள தகுதிகள் கொண்ட நபர்கள் எவரும் இல்லை என அந்த ஊராட்சியில் இயங்கும் தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற்று வந்தால், கவுன்சிலர்கள் பரிந்துரைக்கும் நபர்களை சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என மகளிர் திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் கவுன்சிலர்கள் காதில் வாங்க மறுக்கின்றனர்.

என்ன செய்வதென்றே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து மகளிர் திட்டப் பணி பொறுப்பாளர்கள், உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் புகார் கூறினர். இதுதொடர்பாக, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் சுந்தரராஜனிடம் கேட்டபோது, விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews