இந்திய ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையைப் பிரதிபலித்து, மாநிலக் கல்விக்கொள்கையைக் காவிமயமாக்குவதா? ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடலா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 13, 2023

Comments:0

இந்திய ஒன்றிய அரசின் தேசியக் கல்விக்கொள்கையைப் பிரதிபலித்து, மாநிலக் கல்விக்கொள்கையைக் காவிமயமாக்குவதா? ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடலா?

Reflecting the National Education Policy of the Union Government of India and saffronizing the State Education Policy? Is the Dravidian model a successor to the Aryan model?- ஒன்றிய அரசின் தேசியக் கல்விக் கொள்கையைப் பிரதிபலித்து, மாநிலக் கல்விக் கொள்கையைக் காவிமயமாக்குவதா? ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடலா?

ன்றியத்தை ஆளும் பாஜக அரசால் உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கை 2020யை அடியொற்றி, மாநிலக்கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாகக் கூறி, மாநில உயர்நிலைக்கல்விக்குழுவின் உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் பதவிவிலகியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோமெனக் கூறிவிட்டு, இப்போது அதனையே மாநிலக் கல்விக்கொள்கையின் வாயிலாக அமல்படுத்தத் துடிக்கும் திமுக அரசின் செயல்பாடு வெட்கக்கேடானது. தேசியக் கல்விக்கொள்கையில் உள்ள நல்லவைகளை எடுத்துக் கொள்வோமெனக் கூறி, அவற்றிலிருந்து எண்ணும், எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி, தகைசால் பள்ளிகள், நான் முதல்வன், நம்ம ஸ்கூல் ஃபவுண்டேசன் திட்டம் போன்ற அம்சங்களை செயலாக்கம் செய்து வந்த திமுக அரசு, இப்போது மாநிலக்கல்விக்கொள்கையையே மொத்தமாகக் காவிமயமாக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது.

பொதுப்பட்டியலிலுள்ள கல்வியை ஒன்றியப்பட்டியலில் இருப்பது போலக் கருதிக்கொண்டு ஒற்றைமயத்தையும், காவிக்கொள்கையையும் கொண்டு ஒன்றிய அரசால், எதேச்சதிகாரப்போக்கோடு உருவாக்கப்பட்ட தேசியக் கல்விக்கொள்கைக்கு மாற்றெனக் கூறி, மாநிலக் கல்விக்கொள்கையை உருவாக்க கடந்தாண்டு சூன் 1 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு.

இந்நிலையில், அக்குழுவிலிருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் அவர்கள் விலகியிருப்பதோடு, தேசியக் கல்விக்கொள்கைக்குச் சாதகமாக மாநிலக் கல்விக்கொள்கை உருவாக்கப்படுவதாகவும், அக்குழுவில் சுதந்திரமாகப் பணி செய்வதற்குப் பெரும் இடையூறும். அதிகாரிகளின் மிதமிஞ்சிய தலையீடும் இருப்பதாகவும் கூறியிருப்பதன் மூலம் வெளிவரவிருக்கும் அக்கல்விக்குழுவின் வரைவறிக்கை மீதான நம்பகத்தன்மையே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மாநிலத் தன்னாட்சியென வாய்கிழியப்பேசும் திமுக அரசு, மாநில அரசின் தன்னுரிமையைக் காவு கொடுத்து, ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்தத் துணைபோவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனமில்லையா? சனாதானத்திற்கு எதிரானது திராவிடமென முழங்கும் முதல்வர் ஸ்டாலின், கல்வியைக் காவிமயமாக்க எப்படித் துணைபோகிறார்? இதுதான் எல்லோருக்குமான ஆட்சியா? இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு முன்வைக்கும் ஆரிய மாடலை அடியொற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்ப்பா முதல்வரே? இதுதான் ஆரியத்தைத் திராவிடம் எதிர்க்கிற இலட்சணமா? பாஜக அரசு சொல்வதையெல்லாம் கேட்டு நடைமுறைப்படுத்துவதுதான் திமுகவின் பாஜக எதிர்ப்பரசியலா? சனநாயக விரோதம்! எவ்வளவு காலம் இன்னும் மக்களை ஏமாற்றப் போகிறீர்கள்? ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும், நிர்வாகச் செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும், மக்களுக்கும் மட்டுமல்ல; அறிஞர் அண்ணாவுக்கே செய்யும் கொடுந்துரோகம்.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு இனியாவது தனது தவறைத் திருத்திக் கொண்டு, நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தேசியக் கல்விக்கொள்கையையும், அதன் அம்சங்களையும் முற்றாக நிராகரித்து, தனித்துவமிக்க மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews