நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்பு - நூலகப் படிப்பும் தொழிற்கல்வி படிப்பு போன்றதுதான்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 31, 2023

Comments:0

நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்பு - நூலகப் படிப்பும் தொழிற்கல்வி படிப்பு போன்றதுதான்!



Library and Information Science Course - A library course is like a vocational course! - நூலகப் படிப்பும் தொழிற்கல்வி படிப்பு போன்றதுதான்!

கல்லூரியில் சேர எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்திலிருக்கும் இளைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அளவற்றவை. இத்தகைய சூழலில், பி.ஏ, பி.காம், பி.எஸ்ஸி. படித்துவிட்டு வேறு ஏதாவது தொழில் கல்வி இருக்கிறதா? என யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் தகவல் அறிவியல் படிப்பு

பி.இ படித்தால் பொறியாளர், எம்.பி.பி.எஸ் படித்தால் டாக்டர் என்பதைப்போல எம்.எல்.ஐ.எஸ்ஸி (M.L.I.Sc) எனப்படும் முதுநிலை நூலகவியல் படிப்பை முடித்தால் நூலகர் ஆகிவிடலாம். இளநிலைப் பட்டம் (பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி. உள்பட) பெற்ற மாணவர்கள் இதில் சேரத் தகுதியுடையவர்கள். ஒரு படிப்பை முடிக்கும்போது, அதற்கான வேலைவாய்ப்பு காத்திருக்கும் நிலையில், அப்படிப்பைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனம். கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்து ஏதாவது ஒரு முதுநிலைப்பட்டம் அல்லது பி.எட். பட்டம் பெற்று, அதற்குப் பிறகு, போட்டித் தேர்வுகள் மூலம்தான் ஒருவர் வேலைக்குச் செல்ல முடியும். ஆனால், பட்டப்படிப்பு முடித்து இரண்டாண்டுகள் எம்.எல்.ஐ.எஸ்ஸி. பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எதிர்காலத்தில் ஏராளமான நூலகர் பணியிடம் காத்திருக்கிறது என்பது பலரும் அறியாத தகவல்.

தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகத் துறைகளிலும் சில கல்லூரிகளிலும் போதிக்கப்படும் நூலக மற்றும் தகவல் அறிவியல் படிப்பு நடைமுறையில் மாணவர்களை நூலகராக்குவதுடன், தகவல் அறிவியல் விஞ்ஞானிகளாகவும் அவர்களை மாற்றுகிறது. இன்று உலகமெங்கும் தகவல் புரட்சியின் காரணமாகத் தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. டிஜிட்டல் மீடியா எனப்படும் மின்னணு ஊடகத்தின் விளைவாக இணையம், சிடி-ரோம், மின் இதழ், மின் புத்தகம் என்கிற புதிய வடிவங்களில் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.

எனவே மரபு வழிபட்ட புத்தகங்கள், பத்திரிகைகள் போன்றவற்றைச் சேமிக்கும் இடம் நூலகம் என்ற கருத்து மாறி, டிஜிட்டல் நூலகம், வெர்ச்சுவல் நூலகம் என கணினிமயம் ஆக்கப்பட்ட புதியவகை நூலகங்களாக நாடு முழுவதும் பரவி வருகிறது. இத்தகு சூழலில், நூலகர் பணியும் நவீனமாகிவிட்டது.

கணினிமயமாக்கப்பட்ட, குளிரூட்டப்பட்ட நூலகங்களில் நூலகர்கள் தகவல் மேலாதிக்கம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், நூலகர் பணி இளைய தலைமுறை யினருக்கு ஈர்ப்பை ஏற்படுத்துவது உறுதி. சான்றிதழ் படிப்பு

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்கள் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் 3 மாத சான்றிதழ் படிப்பில் (C.L.I.Sc.) சேரலாம். இந்தப் படிப்பை முடிப்பவர்கள் அத் தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள முடியும். தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் நூலகங்களில் நூலகராகப் பணியாற்ற இந்தத் தகுதியே போதுமானது. குறைந்தபட்சம் ரூ. 7,500 அடிப்படை ஊதியம் கிடைக்கும். இன்று தமிழகத்திலுள்ள ஏறத்தாழ 1000 கிளை நூலகங்களில் நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதைப் பணி மூப்பு அடிப்படையில் நிரப்பும் போது வேலைவாய்ப்பு கிடைக்கும்.

M.L.I.Sc. - படித்தவர்களுக்கு ஏதாவது ஒரு பொறியியல் கல்லூரி அல்லது பாலிடெக்னிக் கல்லூரி அல்லது கல்வியியல் கல்லூரி போன்றவைகளில் குறைந்த பட்சம் உதவி நூலகர் பணி கிடைப்பது உறுதி.

அப்பணியில் சேர்ந்து சில ஆண்டுகள் அனுபவத்துடன், முனைவர் பட்டமும் பெற்றிருந்தால், ஏதாவது ஒரு பெரிய கல்லூரியில் யுஜிசி நிர்ணயித்த ஊதிய விகிதத்தில் நூலகராக முடியும். கல்லூரிகளில் மட்டும்தான் நூலகங்கள் உள்ளன எனப் பலரும் தவறாகக் கருதுகின்றனர். தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்களின் தலைமை அலுவலகங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், நவோதயா பள்ளிகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், சமூக அறிவியல் உயராய்வு மையங்கள், ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகம், சட்டப் பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நூலகங்கள் உள்ளன. பல்கலைக்கழகங்களைப் பொருத்தவரையில் நூலகர்கள், ஆசிரியர்களுக்கு இணையாகக் கருதப்படுவதால், ஊதிய வேறுபாடு எதுவுமில்லை.

பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் ஆகிய மூவருக்கும் அடுத்ததாக நூலகர் இடம் பெற்றுள்ளதை காமன்வெல்த் பல்கலைக்கழகக் கைக் குறிப்பேட்டில் காணலாம். இதன் மூலம், உயர் கல்விச் சூழலில் நூலகர் பணியின் முக்கியத்துவத்தை உணர முடியும்.

இதுகுறித்து கல்லூரி நூலகர் பணியில் 23 ஆண்டுகள் அனுபவம் உள்ள நூலகர் ஒருவர் கூறியது: "நூலகர் பணி என்பது வெறுமனே புத்தகங்களை கொடுத்து வாங்குவது மட்டுமல்ல. உயர் கல்வியின் மேம்பாட்டுக்கு உதவி செய்வதும்தான். மேலும், நம் நாடு பல்வேறு நிலைகளில் அறிவியலில் முன்னேற்றம் காண உதவுவதும் நூலகர்கள்தான். அதனால் தான் நூலகர் பணி, போராசிரியர் அல்லது ஆய்வாளரின் பணியுடன் ஒப்பிட்டு நோக்கத் தக்கதாக உள்ளது. தமிழகமெங்கும் பரவியுள்ள சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள நூலகத்தில் பணியாற்ற நூலகர் பலர் தேவைப்படுகின்றனர். பல்துறை அறிவும், கணினித் துறையில் ஆர்வமிக்க இளைஞர்கள் துணிந்து நூலகப் படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன் எதிர்காலத்தில் தமது அறிவை வளர்த்துக் கொள்ளவும், சவால்களை   எதிர்கொள்ளும் மனப்பான்மையும் மிகுந்துள்ள பட்டம் பெற்ற மாணவர்கள் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் கல்வி மூலம் புதிய சிகரங்களை அடைய முடியும்' என்றார்.

தொழில்நுட்ப வளர்ச்சியில் நூலகம்

உலகம் என்பது முன்பு, புத்தகங்கள், உலக வரைபடங்கள் போன்றவற்றைச் சேகரித்து வைத்திருக்கும் இடம் என்பதாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால், நூலகம் என்பது புத்தகங்கள், வரைபடங்கள் மட்டுமல்லாது, ஒலி நாடாக்கள், காணொளி பதிவுகள், ஒலி-ஒளி குறுவட்டுகள், மின்னூல் குறுவட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வெளிப்பாடுகளையும் சேகரித்து வைக்கும் இடமாகத் திகழ்கின்றன.

அத்துடன் கடந்த ஒரு தலைமுறைக்கு முன்பாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இணையம் என்பதும் நூலகங்களில் இடம் பிடித்துவிட்டது. இணையம் வழியாக தகவல்களைத் தேடிக் கண்டு பிடிக்கப்படும் இடமாகவும் நூலகங்கள் செயல்படுகின்றன.

இன்று நூலகம் என்பது, அரசால் மட்டுமே நடத்தப்படுவதில்லை. எல்லா இடங்களிலும் அமைக்கப்படுகின்றன. வாழ்க்கையின் அவசியங்களுள் இதுவும் ஒன்றாக மாறிவிட்டதால், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்விச் சாலைகளில் கண்டிப்பாக நிறுவப்படுகின்றன. அதுமட்டுமல்லாது, பத்திரிகைகள், இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களிலும், தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட பல ஊடக நிலையங்களிலும் நூலகங்கள் அவசியமாகிவிட்டன.

செய்திகள், தகவல்கள் தேவைப்படும் பெரிய, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், வழக்கறிஞர்களின் கூடங்கள், நீதிமன்றங்கள், வெளிநாட்டுத் தூதரகங்கள், அருங்காட்சியகங்கள் போன்ற இடங்களிலும் நூலகங்கள் செயல்படுத்தப் படுகின்றன.

தற்போது பல தனி நபர்களும், கூட்டமைப்புகளும், தங்களது சொந்த முயற்சியால் நூலகங்களைத் துவங்கி நடத்தி வருகின்றன. இவை தவிர, வணிக நோக்கிலும் நூலகங்கள் நடத்தப்படுகின்றன. எத்தனை மின்னணு ஊடகங்கள் வந்தாலும் அச்சிட்ட புத்தகங்களின் தேவை குறையாது என்பதற்கு இப்படி பெரிய அளவில் வளர்ந்துவரும் நூலகத் துறையும், புதிதாக உருவாக்கப்படும் நூலகங்களும் சாட்சிகளாக இருக்கின்றன.

நூலகங்களில், நூலகர் என்ற நபரின் தலைமையில் பல பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூலக உதவியாளர்கள், உதவி நூலகர், துணை நூலகர், நூல்களை வரிசைப்படுத்துபவர், நூல்களைத் தெரிவு செய்பவர், தொழில்நுட்ப உதவியாளர், நூலக இயக்குநர் என்பது உள்ளிட்ட பல பதவிகளில் பல நபர்களின் பங்களிப்பு உள்ளது.

என்றாலும் நூலகர் என்பவரும், நூலகங்களில் பணிபுரிபவர்களும், ஏதோ கடமைக்கும், சம்பளத்திற்கும் பணிபுரிபவர்களாக இருப்பதில்லை. அது ஓர் ஆத்மார்த்தமான பணி.

அரசு நடத்தும் நூலகங்கள் உட்பட பல்வேறு நூலகங்களில் பணி புரிவதற்காக மட்டுமல்லாது, அநேகமாக தற்போது தனிநபர்கள் தங்கள் வீடுகளிலேயே தொடங்கும் நூலகங்களைப் பராமரிப்பதற்கும், நூல்களை வரிசைப்படுத்தி வைப்பதற்கும் நூலக அறிவியல் என்ற படிப்பைப் படித்து வைத்திருப்பது நல்லது. தற்போதைய +2விற்குப் பிறகு ஆறுமாத காலம் நடத்தப்படும் நூலக அறிவியல் சான்றிதழ் படிப்பைப் படிக்கலாம். அல்லது ஏதேனும் ஒரு பட்டம் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்து நூலக அறிவியலில் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஒரே ஆண்டில் கிடைக்கும் ஒரே பட்டப்படிப்பு நூலக அறிவியலாகத்தான் இருக்கும். இதன் தொடர்ச்சியாக ஓர் ஆண்டு படிப்பான முதுநிலை பட்டப்படிப்பையும் முடிக்கலாம்.

இந்த மூன்று நிலைகளையும் தற்போது அஞ்சல் வழியிலும் படிக்க முடிகிறது. மதுரை காமராசர் பல்கலைக் கழகம், அண்ணாமலை பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்கள் அஞ்சல் வழியில் இந்த நூலக அறிவியல் படிப்புகளை வழங்குகின்றன. அதன் பிறகு தொடர்ந்து நூலக அறிவியலில் எம்.ஃபில்., பிஎச்.டி., பி.லிட்., படிப்புகளும் உள்ளன.

நூலகர் என்பவர், நூலகத்தை நாடிவரும் ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கானவை கிடைப்பதற்கு உதவிபுரிபவராக இருக்கின்றார். செய்திகள், தகவல்கள், தொழில்நுட்பம் போன்றவற்றில் தன்னை அன்றைய நாள்வரைக்கும் இற்றைப்படுத்தியுள்ளவராக விளங்குகின்றார். தனது பணியிடத்தில் உள்ள நூல்கள், குறுவட்டுகள் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் பயன்படுத்தும் வழிமுறைகளை எடுத்துச் சொல்பவராகப் பணியாற்றுகிறார்.

இப்படி நூலகத்தில் பணி புரிய விருப்பம் இல்லையென்றால், நூலகம் தொடர்பாக சுய தொழிலைத் துவங்கலாம். வாடகை நூலகம் துவங்கலாம் நூல்களை வந்து வாங்கிச் செல்லுபவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வாடகையாகப் பெற்றுக் கொண்டு படிக்கக் கொடுத்து வாங்கலாம். வீடுகளுக்குக் கொண்டு சென்று புத்தகங்களைக் கொடுத்து வாங்கலாம். சேவை மனப்பான்மை உள்ளவர்கள் நடமாடும் நூலகத்தை உருவாக்கி, கிராமத்து மக்கள் பயன்பெரும் வகையில் செயல்படுத்தலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews