'கனவு ஆசிரியர்' தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 15، 2023

Comments:0

'கனவு ஆசிரியர்' தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை!

'கனவு ஆசிரியர்' தேர்வு நடைமுறையில் மாற்றம் தேவை! - 'Dream teacher' selection procedure needs to be changed!


மேனிலைக்கல்வி தேர்வு மதிப்பெண்கள் முக்கியமில்லை. மருத்துவக் கல்விக்குத் தேசிய அளவிலான தகுதி நுழைவுத் தேர்வு மட்டுமே போதுமானது என்று வலியுறுத்துவது போல் அண்மையில் பள்ளிக்கல்வித் துறையால் முன்னெடுக்கப்படும் கனவு ஆசிரியர் தேர்வு நோக்கப்படுகிறது. பணி அனுபவம், மாணவர் அடைவுநிலை, பள்ளி வளர்ச்சியில் போதிய பங்களிப்புகள், சமுதாய ஈடுபாடு முதலான விருதுக்கான உரிய உகந்த தகுதிக் குறியீட்டுக் காரணிகள் முற்றிலும் புறந்தள்ளப்பட்டு வெறுமனே நடத்தப்படும் பல்வேறு கட்ட தேர்வுகளில் மட்டும் போதுமான அடைவு பெற்றால் போதும் என்கிற நிலை அபாயகரமானது. ஆசிரியரின் பணித்திறன் சார்ந்த திறத்தை வெற்று அறிதிறன் சார்ந்த வினாக்கள் மட்டுமே தீர்மானித்து விடமுடியுமா என்ன? இந்த புறவயத்தன்மையில் முழுக்க முழுக்க அகவயத்தன்மை அல்லவா மிளிர்கிறது! ஓரிரு தேர்வுகள் மூலமாக ஒப்பற்ற ஆசிரியர் பெருமக்களின் திறமைகள் மற்றும் தொண்டு முழுமையும் அளவிட முடியும் என்று கல்வித்துறை கருதுவதில் நியாயமுண்டோ?

இஃதொரு தவறான முன்னுதாரணமும் வழிகாட்டுதலும் ஆகும். இணைய வழியில் கலந்து கொள்வோர் பட்டியலைப் பெற்று விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு அதே இணைய வழியில் முதல் கட்ட தேர்வுகளைப் பல்வேறு குழப்பங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் இருவேறு நாள்களில் இருவேறு 35 மதிப்பெண்களுக்கான 22 கொள்குறி வகை வினாக்கள் அடங்கிய வினாத்தாள் மூலமாக நடத்தி ஒரு குறிப்பிட்ட சாராரைத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளது அறியத்தக்கது. இவர்கள் இரண்டாம் கட்ட தேர்வை எதிர்கொள்ள உரிய பாடத்திட்டங்கள் மாதிரிகளாகக் கொடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள தேசியக் கல்விக் கொள்கையில் ஆசிரியர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பணித்திறன் சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு அவற்றின் அடிப்படையில் ஆண்டுதோறும் ஊதிய உயர்வுகள் மற்றும் அவ்வப்போது பதவி உயர்வுகள் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாகப் பின்வரும் NEP வரைவு வழி அறியப்படுகிறது.

"தேசிய ஆசிரியர் பணித் தர மதிப்பீடு (National Professional Standards for Teachers) என்பது மாநிலங்களால் ஏற்கப்பட்டுப் பதவிக்காலம், பணித்தொழில் வளர்ச்சி முயற்சிகள், ஊதிய அதிகாிப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் பிற அங்கீகாிப்புகள் உள்ளடங்கிய ஆசிாியர் செய்பணி மேலாண்மையின் எல்லாக் கூறுகளையும் தீர்மானிக்கப்படக் கூடும். பதவி உயர்வுகளும் ஊதிய அதிகாிப்பும் பதவிக்காலம் அல்லது பணிமூப்பு நீட்சி அடிப்படையில் நிகழாமல் அத்தகைய தர மதிப்பீட்டில் அடிப்படையில் மட்டுமே நிகழும்." (தேசியக் கல்விக் கொள்கை - தமிழ் 5.20 ப.50) இத்தகைய சூழலில், தேசியக் கல்விக் கொள்கையை, சனாதனக் கருத்தாக்கங்களை வெளிப்படையாக அன்றி புறவாசல் வழியாக உலகத்தின் கண்களைக் கட்டிவிட்டு நிகழ்த்திய பொக்ரான் அணுகுண்டு சோதனை போல மெல்ல மெல்ல ஒட்டகத்தைக் கூடாரத்திற்குள் நுழைக்கும் முயற்சிகள் குறித்து மாநில கல்விக் கொள்கை முன்வரைவு தயாரிப்புக் குழுவிலிருந்து அண்மையில் விலகி வெளியேறிய பேராசிரியர் ஒருவரின் கூற்றுகள் மெய்ப்பிப்பதை எளிதில் எடுத்துக் கொள்ள முடியாது. எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு கற்றல் கற்பித்தல் சார்ந்த வழிகாட்டு நடைமுறைகள் கூட இதன் ஒரு பகுதியோ என்ற அச்சம் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருக்கு எழாமல் இல்லை.

அந்த வகையில், கனவு ஆசிரியர் தேர்வையும் இவற்றுடன் ஒப்பிட்டு உற்றுநோக்க வேண்டியுள்ளது. அண்மைக்காலமாகவே, பள்ளிக்கல்வித் துறையில் சனாதன ஆதரவுக்கரம் நீட்டிய கடந்த ஆட்சியால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களால் பள்ளி நடைமுறைகளில் ஆசிரியர்கள் மத்தியில் மிக நுட்பமாகவும் நுணுக்கமாகவும் ஆசிரியர் விரோத கருத்தியலை நூல் விட்டுப் பார்ப்பதும் இதுகுறித்து சுதாரித்துக் கொண்டு பரவலான எதிர்ப்புகள் ஆசிரியர்கள் உள்ளடங்கிய பல்வேறு ஆசிரியர் இயக்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பன்முனைகளிலிருந்து பூதாகரமாகக் கிளம்பும் போது அவற்றைப் பின்வாங்குவதும் தொடர்கதையாகி வருவதை எளிதில் புறந்தள்ளுவதற்கில்லை.

இணையவழியிலான இத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படியோ பதிலளித்து எதிர்பார்க்கப்படும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் கனவு ஆசிரியர் ஆகிவிடுவார்கள் அப்படித்தானே? ஆசிரியர் அல்லாத பொது வெளியில் உள்ளவர்கள் இந்த நடைமுறை உரியதா? உகந்ததா? என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியை மதிப்பெண்களால் அளவிடுவது என்பது வற்றாத கங்கையாற்று நீரைக் கமண்டலத்தில் அடைப்பதற்கு ஒப்பாகும். இத்தேர்வு நடைமுறை குறைந்த பணிக்காலம் நிறைந்த பணியில் இளையோருக்கும் அதிக பணிக்காலம் நிரம்பிய பணியனுபவம் மிக்க மூத்தோருக்கும் இடையே நிகழும் ஒரு செயற்கையான செம்மைப்படாதப் போட்டியாகும். இதில் பின்னடைவைச் சந்திப்பவர்கள் நிச்சயம் மன உளைச்சலுக்கும் தம்மைப் பற்றிய தாழ்வுணர்ச்சிக்கும் ஆளாக நேரிடும். அதுமட்டுமின்றி, இந்த துல்லிய உளவியல் சார்ந்த தாக்குதல்களால் நிலைகுலைந்த ஆசிரியர்கள் தம் செம்மைப்பணியில் சுணக்கமும் விரக்தியும் அடைவது தவிர்க்க முடியாததாகி விடும். இது கல்வியை, பிஞ்சுக் குழந்தைகளின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்கள் ஒன்றும் உணர்ச்சிகளற்ற கற்சிலைகள் அல்லர். அதுபோல் முற்றும் துறந்த முனிவர்களும் கிடையாது. எல்லோரையும் போல நிணமும் குருதியும் உணர்வும் கொண்ட சக மனிதப் பிறவிகள் தாம். வெறும் எழுத்துத் தேர்வு அடிப்படையிலான மதிப்பீட்டு முறைகள் குறித்து கல்வியாளர்கள் மற்றும் உளவியலாளர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் உலகளவில் நிலவி வருகின்றன. தேர்வும் அதன் விளைவாக நிகழும் தேர்ச்சியும் தேர்வரின் உடல் வயது மற்றும் நினைவாற்றல் திறன் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டவை. இதை யாரும் மறுக்க முடியாது.

நல்ல நிலத்தில் மண்டி வளரும் களைச் செடியை முளையிலேயே கிள்ளியெறிந்து விடுவது தான் நல்ல விளைச்சலுக்கு அடிப்படை ஆகும். இப்போது வளர விட்டு விட்டு அது பெரிய நச்சை உதிர்க்கும் மரமாகப் பயமுறுத்தும் போது கையறு நிலையில் குய்யோமுறையோ என்று கூச்சலிடுவது என்பது வீண் வேலை. இது தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு ஈடானது. வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் ஆசிரியர்களுள் சிறந்த கனவு ஆசிரியர்களை அவர் தம் பணிபுரியும் பள்ளிகளுக்கு நேரில் சென்று பலதரப்பட்ட ஆய்வுகள் மேற்கொண்டு கற்பித்தலில் புதுமை மற்றும் புத்தாக்கம், மாணவர் எளிய முறையில் இனிதாகக் கற்க கற்றலில் பயன்படுத்தப்பட்ட நவீனத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடுகள், பள்ளி வளர்ச்சியில் ஆற்றிய பங்குகள், சமுதாய மேம்பாட்டிற்கு ஆற்றிய தொண்டுகள், தனிமனித ஒழுக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் நேர்வும் தேர்வும் அனைவராலும் ஏற்கத்தக்க ஒன்றாக அமையும்.

இதில் நிச்சயமாக திறமைமிக்க ஆசிரியர் விடுபாடுகள், உள் நோக்க சார்புகள், நம்பகத்தன்மையின்மை நிலைகள், அவநம்பிக்கைகள் முதலிய எதிர்மறை கூறுகள் இடம்பெறுவது பெருமளவு தவிர்க்கப்படும். எனவே, இதுகுறித்து தமிழக அரசு கனிவுடன் நன்கு ஆராய்ந்து திண்ணையில் உட்கார்ந்து இருந்தவனுக்கு திடுதிப்பென்று கல்யாணமாம் என்று சொல்வது போல ஏதோ ஓரிரு தேர்வுகள் எழுதித் தேர்ச்சிப் பெறுவோருக்குக் கனவு ஆசிரியர் விருது வழங்கி மலினப்படுத்தாமல் முறையாக, தக்க தகுதி வாய்ந்த, வெற்று விளம்பரம் மீது மோகம் கொண்டு அலையாத, மாணவர்கள் மீது உண்மையான அன்பும் அக்கறையும் ஆர்வமும் ஈடுபாடும் நிறைந்த ஆசிரியர்களுக்கு வழங்க முற்படுவதே சாலச்சிறந்தது என்பது அனைவரின் வேண்டுகோளாகும்.

எழுத்தாளர் மணி கணேசன்

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة