அரசு பள்ளிகளில் CBSE +1 மாணவர் சேர்க்கை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் பாடங்கள் புறக்கணிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 27, 2023

Comments:0

அரசு பள்ளிகளில் CBSE +1 மாணவர் சேர்க்கை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் பாடங்கள் புறக்கணிப்பு

அரசு பள்ளிகளில் CBSE +1 மாணவர் சேர்க்கை: தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் பாடங்கள் புறக்கணிப்பு CBSE +1 Admission in Government Schools: Tamil, Malayalam, Telugu Language Subjects Ignored

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பிளஸ்-1 மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 5 பாடங்கள் மட்டுமே தேர்வு செய்யலாம் என்பதால் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிப்பாடம் புறக்கணிக்கப்படும் அபாயம் உள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் தமிழ் பாடத்தை மேல்நிலைப் பள்ளிகளில் புதுச்சேரி அரசு உறுதிப்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரிக்கு என்று தனி கல்வி வாரியம் கிடையாது. புதுச்சேரி, காரைக்கால் மாணவர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர்.

முதல்கட்டமாக 1 முதல் 5-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகமானது. தற்போது 6 முதல் 9, 11 -ம் வகுப்புகளில் நடப்பாண்டு சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. புதுச்சேரியில் 127 பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகிறது. தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது என்று கல்வித்துறை உறுதி அளித்திருந்தது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் விண்ணப்பம் விநியோகத்தை கல்வித்துறை தொடங்கியது.

இதில் அறிவியல் பாடப்பிரிவுகளாக இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், மனையியல், உளவியல், உடற்கல்வி, கணினி அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும், கலை பாடப்பிரிவில் வணிக படிப்பு, கணக்கு பதிவியல், பொருளியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், தகவல் பயிற்சி, வெப் அப்ளிகேஷன், உடற்கல்வி, நூலக அறிவியல், சட்டப் படிப்பு, தமிழ் ஆகிய பாடப்பிரிவுகளும் இடம் பெற்றுள்ளன. தொழிற்கல்வி பாடப்பிரிவுகளாக தட்டச்சு, தகவல் பயிற்சி, டெக்டைல் டிசைன், சுருக்கெழுத்து தமிழ்/ ஆங்கிலம், உடற்கல்வி, வெப் அப்ளிகேஷன், சட்ட படிப்பு, அலுவலக செயல்முறை - பயிற்சி, புட் நியூட்ரிஷியன், தமிழ் ஆகிய பாடப்பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

ஏற்கெனவே மாணவர்கள் தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ்-1-ல் 6 பாடங்களைப் பயின்று வந்தனர். இதனால் நான்கு முக்கிய பாடப்பிரிவுகளுடன் ஆங்கிலம், தமிழ் அல்லது பிரெஞ்சு படித்து வந்தனர். தற்போது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் பிளஸ்-1-ல் 5 பாடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் விண்ணப்பத்தில் தமிழ் விருப்பப்படமாக இடம் பெற்றிருந்தாலும், மாணவர்கள் வேறு வழியில்லாமல் தமிழை தேர்வு செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதுவை அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு பிளஸ்-1 மாணவர்கள் கட்டாயம் தமிழ் படிப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மொழிப் பிரிவில் தமிழுக்கு மட்டுமில்லாமல் ஏனாமில் தெலுங்குக்கும், மாகேயில் மலையாளத்துக்கும் இதே சூழல் ஏற்பட்டுள்ளதால் மொழிப் பாட ஆசிரியர்களின் பணி பாதுகாப்பும் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. சிபிஎஸ்இ கல்வித் திட்டத்திற்கு மாறும் சூழலில், இதை புதுச்சேரி அரசு தெளிவுப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது-

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews