கலைப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு வீணை பரிசளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 05, 2023

Comments:0

கலைப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு வீணை பரிசளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர்



கலைப் போட்டியில் வென்ற அரசுப் பள்ளி மாணவிக்கு விருப்ப உரிமை நிதியில் வீணை பரிசளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் - Virudhunagar district collector gifted a veena to a government school girl who won an art competition

கலைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் வென்ற காரியாபட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு, விருப்ப உரிமை நிதியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீணையை பரிசளித்தார்.

காரியாபட்டி பாண்டியன் நகரைச் சேர்ந்த கொத்தனார் ராஜா - சத்யா தம்பதியரின் மகள் காயத்திரி (15). காரியாபட்டி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் சத்யாவுக்கு சங்கீதம் மற்றும் நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். அதனால், தனது மகளிடம் சங்கீதம் கற்கும் ஆர்வத்தைத் தூண்டி வளர்த்தார். எஸ்.கல்லுப்பட்டியில் வசித்த இவர்கள், மகளின் சங்கீத விருப்பத்திற்காக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காரியாபட்டி வந்தனர். காயத்திரி அப்போது 4ம் வகுப்பு மாணவி. காரியாபட்டியைச் சேர்ந்த சுவாமிநாத குருகுளத்தில் குரு பாலகணேஷ் என்பவரிடம் வீணை கற்றுக் கொள்ளத் தொடங்கினார். காயத்திரியின் ஆர்வத்தைப் பார்த்து அவருக்கு பாலகணேஷும் அவரது மனைவி உமாவும் வீணை, வயலின், பாட்டு மற்றும் பரதம் கற்றுக்கொடுக்கத் தொடங்கினர். இதனால், வீணை, வயலின் வாசிப்பதில் மாணவி காயத்திரி கைதேர்ந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட கலைத் திருவிழாவில் ஒன்றிய, மாவட்ட அளவில் பங்கேற்று மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றார். கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான வீணை வாசிக்கும் போட்டியிலும் முதல் பரிசை வென்றார். சென்னையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மற்ற மாணவிகள் வீணை வாசித்தபோது காயத்திரி மட்டும் தன்னிடம் வீணை இல்லாததால் அந்த வாய்ப்பை இழந்து வாடினார்.

அதன்பின், கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடும் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் காயத்திரியும் பங்கேற்றார். அப்போது, ஏன் பரிசளிப்பு விழாவில் வீணை வாசிக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கேட்டபோது, தன்னிடம் சொந்தமாக வீணை இல்லை என்றும், குருவின் வீணையை வைத்தே வாசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதையடுத்து, தனது விருப்ப நிதியிலிருந்து தான் வீணை வாங்கிக் கொடுப்பதாக மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் உறுதியளித்தார். அதன்படி, தன் விருப்ப உரிமை நிதியின் மூலம் தஞ்சையிலிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான வீணை ஒன்றை வாங்கி மாணவி காயத்திரிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பரிசளித்தார். அந்த வீணையைப் பெற்ற மாணவி காயத்திரி "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" என்ற பாடலை வாசித்தது அங்கிருந்தோரை நெகிழச் செய்தது.

கடந்த 7 ஆண்டுகளாக மாணவிக்கு காயத்திரிக்கு வீணை, வயலின், பாட்டு கற்றுக்கொடுத்து வரும் குரு பால கணேஷ் இதுவரை தன்னிடமிருந்து கட்டணம் ஏதும் பெற்றதே இல்லை என்றும், தனது திறமையைப் பாராட்டி வீணை பரிசளித்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கண்களில் நீர் ததும்பக் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews