பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 01, 2023

Comments:0

பள்ளிக் கல்வித்துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு!

பள்ளிக் கல்வித் துறை தொடர்பாக முதலமைச்சரின் இன்றைய அறிவிப்புகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செய்திக் குறிப்பு! செய்திக் குறிப்பு

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் புதிய கட்டமைப்பு வசதிகள் திறப்புவிழா

சென்னை மார்ச் 1, 23-

சென்னையில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் இருக்கும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கட்டடத்தில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் புலம் (Assessment cell), முன்னோட்டக் காட்சி அரங்கம் (Preview theatre), விரிவுபடுத்தப்பட்ட 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம் ஆகியவற்றை நிர்மாணித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.

இவற்றை பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வகையில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இவற்றைத் திறந்து வைத்தார். பள்ளிக் கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்த காரணமாக உள்ள ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தன் பிறந்தநாளன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் செய்தி காணொலியாக இங்குள்ள முன்னோட்டக் காட்சி அரங்கத்தில் திரையிடப்பட்டது.

"மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்களை செயல்படுத்த நமது அரசு முடிவு செய்துள்ளது,

மாறிவரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கென அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.

மாணவர் வாழ்க்கை ஏற்றம்காண அயராது உழைக்கும் ஆசிரியர் பெருமக்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

உயர்கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கபட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.

அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இத்தகு திட்டங்கள் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்ற செய்தியை இந்தத் தருணத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்'' என தன் உரையில் முதலமைச்சர் ஆசிரியர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.

முன்னதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அமைக்கப்பட்டுள்ள வெளியீட்டுப் பிரிவுப் புத்தக விற்பனை மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார். அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வெளியீட்டுப் பிரிவு புத்தகங்களையும் வழங்கினார்.

நிகழ்வில் பள்ளிக் கல்விக்கான அரசு முதன்மைச் செயலாளர் திருமிகு. காகர்லா உஷா இ.ஆ.ப உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews