சென்னை கலைவாணர் அரங்கத்தில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசைக் கச்சேரி - அனைவரும் வருக, அனுமதி இலவசம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 23, 2023

Comments:0

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசைக் கச்சேரி - அனைவரும் வருக, அனுமதி இலவசம்!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச் சாலைக்கு, டி.எம்.சௌந்தரராஜன் சாலை என புதிய பெயர் சூட்டப்படவுள்ள சாலையின் பெயர் பலகையை 24.03.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.45 மணியளவில் தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து, டி.எம்.சௌந்தரராஜன் அவர் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், 24.03.2023 அன்று மாலை 5.00 மணியளவில் மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ் திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 1923 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். தமிழ்த் திரையுலகில் 1950 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் "ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி" என்ற பாடல்தான் அவர் குரலில் ஒலித்த முதல் பாடல் ஆகும். அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்தார். இதனைத் தொடர்ந்து, திரையுலகில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார்.

அவருடைய குரல் வளம், இசை ஞானம் மூலம் தனித்துவமான பாடல்களை பாடி திரையிசை வரலாற்றில் முத்திரைப் பதித்தவர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பல எண்ணற்ற பாடல்களை பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970 ஆம் ஆண்டு "ஏழிசை மன்னர்" என்ற பட்டம் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், 1969 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்களால் "இசைக் கடல்" என்று போற்றப்பட்டார். 2003 ஆம் ஆண்டு டி.எம்.சௌந்தரராஜன் அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தனது குரல் வளத்தால் மக்களின் எண்ணங்களில் நீங்காமல் இருந்த டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் 2013 ஆம் ஆண்டு மே 25 அன்று மறைந்தார். மறைந்தும், அவர் பாடிய பாடல்கள் மூலம் வாழ்கின்ற பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களின் புகழுக்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், மாபெரும் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சியில் மாண்புமிகு மேயர். நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைவரும் வருக, அனுமதி இலவசம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews