“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” - புதிய முறைக்கு எதிர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 12, 2023

Comments:0

“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” - புதிய முறைக்கு எதிர்ப்பு

“ஐடிஐ கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கும் மத்திய அரசு” - புதிய முறைக்கு எதிர்ப்பு “Centre Govt Disrupting ITIs” - Opposition to New System “ஐடிஐ கல்வி நிறுவனங்களின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட புதிய தொழிற்கல்வி முறையை மத்திய அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு முழுவதும் 5500-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஐடிஐ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 8, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வியுற்ற கிராமப்புற, நகர்ப்புற மேற்படிப்பு படிக்க வாய்ப்பில்லாத 25 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் இந்நிறுவனங்களில் பயிற்சி பெற்று திறமை வாய்ந்த தொழிலாளர்களாக உருவாகி வருகிறார்கள். இவ்வாறு பயிற்சி பெறுவோர்கள் தொழில் முனைவோர்களாக, வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்பவர்களாக, பொதுத்துறை, அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் சிறந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கும் முதுகெலும்பாக திகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐடிஐ-யின் தரத்தை சீர்குலைக்கும் நோக்கோடு புதிய தொழிற்கல்விக் கொள்கையினை புகுத்தி, கணிணி வழித் தேர்வு, கணிதம் மற்றும் வரைபடம் பாடத் திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைப்பு, பொறியியல் சார்ந்த அத்தியாவசிய பாடத் திட்டங்கள் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது.

இதனால் ஐ.டி.ஐ. படித்து செல்லும் இளைஞர்கள் எந்தவித தொழில்நுட்ப அறிவும், நிபுணத்துவமும் இல்லாமல் வெறும் சொல்வதைச் செய்யும் கூலித் தொழிலாளியாக (Bond Labour) பணிபுரியும் வகையில் மாற்றப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கு எதிரானதாகும். தமிழகத்தில் இயங்கும் 71 தொழிற்பயிற்சி நிலையங்களை உலகத் தரத்திற்கு மேம்படுத்திட முதல்வர் ரூ.3200 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அரசு ஐ.டி.ஐ. நிறுவனங்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசு தொழிற்கல்வியில் புகுத்தியுள்ள புதிய தொழிற்கல்வி முறையை முற்றிலுமாக கைவிட வேண்டுமெனவும், கணிதம் மற்றும் வரைபடம், பாடத்திட்டம் மற்றும் பயிற்சி நேரம் குறைத்ததையும், தேசிய திறன் தகுதி குறைத்ததையும் உடனடியாக திரும்ப பெற்று பழைய நிலையிலேயே பாடத்திட்டங்கள் தொடர வேண்டுமெனவும், என்.டி.சி., மற்றும் என்.ஏ.சி., பயிற்சி முடித்த பயிற்சியளார்களுக்கு டிப்ளோமா சான்றிதழ் வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது.

மேலும், தொழிற்துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழக அரசு திகழ்வதற்கு மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் ஐ.டி.ஐ. நிறுவனங்களில் பணியாற்றும் தொகுப்பூதிய பயிற்றுநர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews