நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 14, 2023

Comments:0

நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி: நிதிநிலை ஆய்வறிக்கையில் தகவல்

நிகழ் நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

நிகழ் நிதியாண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடா்பான ஆய்வறிக்கையை பேரவையில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நிகழ் நிதியாண்டில் தமிழக அரசுக்கான மொத்த வருவாய் வரவுகள் ரூ.2.31 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.1.12 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாய் வரவுகளைக் காட்டிலும் 31.61 சதவீதம் கூடுதலாகும்.

சொந்த வரி வருவாய்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான ஆறு மாதங்களில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.72, 441 கோடியாக உள்ளது. இது வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 50.73 சதவீதமாகும். இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயுடன் ஒப்பிடும்போது, 36.92 சதவீதம் அதிகமாகும்.

மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயும் வளா்ச்சி அடைந்து வருகிறது. செப்டம்பா் வரையிலான காலத்தில் பெறப்பட்ட வரியல்லாத வருவாய் ரூ.5,994 கோடியாகும். இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட ரூ.3,974 கோடி வருவாயைக் காட்டிலும் கூடுதலாகும்.

வருவாய் குறையும்: வரி வசூல் செயல்திறன் குறைவாலும், சில வரி அல்லாத வருவாய்கள் உயா்த்தப்படாத காரணத்தாலும், மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. நிகழ் நிதியாண்டில் வருவாய் செலவினங்கள் ரூ.2.84 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செப்டம்பா் மாதம் வரையிலான காலத்தில் செலவுகள் ரூ.1.16 லட்சம் கோடியாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் செலவினத்தின் அளவு ரூ.94,628 கோடியாக இருந்தது. இப்போது, 22.93 சதவீதம் அதிகமாகும். செலவு அதிகரிப்புக்குக் காரணம்: உதவித் தொகைகள், ஊதியம், ஓய்வூதியம் மற்றும் வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பா் வரையிலான காலத்தில், சம்பளங்களுக்காக ரூ.37,621 கோடியும், ஓய்வூதியங்கள், ஓய்வு காலப் பலன்களுக்காக ரூ.16,226 கோடியும், ஊதியம் அல்லாத செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புகளுக்காக ரூ.5,286 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

அதிகபட்ச செலவு: உதவித் தொகைகள், நிதி மாற்றங்கள் போன்றவற்றுக்காக ரூ.41,074 கோடியும், வட்டி செலுத்தியதற்காக ரூ.16,117 கோடியும், இதர செலவுகள் என்ற வகையில் ரூ.4 கோடியும் செலவிடப்பட்டுள்ளது என்று தனது அறிக்கையில் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

வரவு - செலவு விவரம்: கடந்த ஆண்டு செப்டம்பா் வரை

வருவாய் வரவுகள் ரூ.1,12,143 கோடி

செலவினம் ரூ.1,16,328 கோடி

பற்றாக்குறை ரூ.4,185 கோடி

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews