மருத்துவப் படிப்பு காலியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 19, 2022

Comments:0

மருத்துவப் படிப்பு காலியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பு காலியிடங்கள் பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய புதுவை அரசுக்கு உத்தரவு

மருத்துவப் படிப்பில் பழங்குடியின பிரிவில் காலியாக உள்ள இரண்டு இடங்களை பிற்படுத்தப்பட்ட, பழங்குடியின மாணவா்களைக் கொண்டு நிரப்ப வேண்டும் என புதுவை அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக புதுவையில் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவி ஹேமலதா தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நீட் தோ்வில் போதிய மதிப்பெண் எடுத்திருந்தும்கூட, இடஒதுக்கீட்டில் எனக்கு இடம் கிடைக்கவில்லை. கலந்தாய்வின் முடிவில் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காலியாக இருந்த இரண்டு இடங்கள் பட்டியலினத்தவா்களைக் கொண்டு நிரப்பப்பட்டு விட்டது. தற்போது அவா்கள் ஜிப்மா் கல்லூரிக்கு சென்றுவிட்டதால், பழங்குடியினா் பிரிவில் காலியாக உள்ள இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.வி. காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவில், ‘கலந்தாய்வுக்கு பின்னா் பழங்குடியினா் பிரிவில் காலியாக இருந்த இடத்தை பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவா்களைக் கொண்டே நிரப்பியிருக்க வேண்டும். புதுவை அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரா் மற்றும் மற்றொரு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினா் பிரிவு மாணவருக்கு இடம் அளிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்ட பழங்குடியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க சட்டத்தை உருவாக்கிய அரசு, அதற்கு துரோகம் இழைக்கும் வகையில் கடினமான நிலைக்கு அவா்களைத் தள்ளாது என நீதிமன்றம் நம்பிக்கை வைத்துள்ளது. இந்த இரு இடங்களை ஒதுக்குவதால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினா், பிற்படுத்தப்பட்டோா், பட்டியல் இனத்தோா், வெளிநாடு வாழ் இந்தியா் ஆகியோரின் இடஒதுக்கீடுகளும் பாதிக்கப்படாது என நம்புகிறேன் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் நீதிபதி காா்த்திகேயன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews