நீட் மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 30, 2022

Comments:0

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை

நீட் மசோதாவுக்கு ஒப்புதல் பெற வேண்டும் - பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கோரிக்கை

நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் பி.ரத்ன சபாபதி, பொதுச்செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நீட் விலக்கு மசோதா எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி ஆளுநர் மற்றும் தமிழக அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்தோம். அதற்கு மத்திய அரசு நீட் விலக்கு மசோதா குறித்து சில கேள்விகளை மாநில அரசிடம் கேட்டதாகவும், அதற்கான விவரங்களை மாநில அரசு வழங்கியதாகவும் தமிழக அரசின் சார்பில் விளக்கம் வந்தது.

ஆளுநர் மாளிகையை பொருத்தவரை, பரிசீலனையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல, ‘இந்த மசோதா தவறானது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தரத்தை உறுதி செய்யவில்லை. வணிக லாபத்துக்காக மட்டுமே பயன்படுகிறது. இந்த நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியம்.

நீட் மசோதா குறித்து மத்திய அரசு கேட்ட கருத்துகளுக்கு அளித்த பதிலை சட்டப்பேரவையில் தமிழக அரசு பதிவு செய்யவேண்டும். மசோதா மீது நடவடிக்கை எடுக்க 15 மாத காலமாகிறது என்ற தகவலை குடியரசுத் தலைவருக்கு தெரிவித்து, இதற்கு அவர் ஒப்புதல்தரக் கோரி பேரவையில் சிறப்பு தீர்மானமும் நிறைவேற்ற வேண்டும். பிற மாநில முதல்வர்களும் தங்கள் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நீட் விலக்கு மசோதாவுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews