அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்.. உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.. சீமான் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، ديسمبر 16، 2022

Comments:0

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம்.. உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.. சீமான் வலியுறுத்தல்



பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு குரல் கொடுத்த சீமான் !

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார் . தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக , ஆட்சிக்கு வந்த பிறகு இது பற்றி பேசாமல் இருப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

20 ஆண்டுகளாக போராடி வரும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை , அரசு தீர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் திமுக அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்களாகியும் அதனை நிறைவேற்ற மறுப்பது அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பது போன்றது ஆகும்.

"வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட அரசு ஊழியர்கள்"

கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் முதல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் அனைவரும் 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்' எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வலுக்கட்டாயமாக கொண்டு வரப்பட்டனர். இதனால் அரசு ஊழியர்களுக்கு அதுவரை கிடைத்து வந்த பணிக்கொடை, ஓய்வூதியம் என்று எதுவும் முழுமையாக கிடைக்காமல் போய்விட்டது. அதற்கு மாறாக, பணியின்போது அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொகை மட்டும், அவர்கள் ஓய்வு பெற்றதும் திருப்பி வழங்கப்படும் என்றும் அன்றைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், தொடக்கம் முதலாகவே இத்திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் தொடர்ந்து கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்

கைவிரித்த அதிமுக அரசு

பல்வேறுகட்ட போராட்டங்களுக்கு பிறகு, 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த வல்லுநர் குழு அறிக்கை 2018-ம் ஆண்டு தான் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அப்போது ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு, அந்த அறிக்கையை கிடப்பில் போட்டது. பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், வேறு வழியின்றி, 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வல்லுனர் குழு அறிக்கையை வெளியிட்ட அன்றைய தமிழக அரசு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்பில்லை என்று கைவிரித்தது.

ஏமாற்றிய திமுக

இதற்கிடையே, கடந்த 2021-ம் ஆண்டுச் சட்டப்பேரவை தேர்தலின் போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தது திமுக. இதனால் அரசு ஊழியர்களின் முழு ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த சாத்தியமே இல்லை என்று கடந்த மே மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தது. எதிர்க்கட்சியாக இருந்தபோது அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரிப்பதுபோல் நடித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று கூறி ஏமாற்றி வருவது, அரசு ஊழியர்களுக்குச் செய்யும் பச்சை துரோகம் ஆகும்.

"உடனடியாக நடைமுறைப்படுத்துக"

இந்தியாவில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்ட நிலையில், மேற்கு வங்க மாநிலம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தியது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்டன. அந்த வரிசையில் ஆறாவது மாநிலமாக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த நாளே இமாசலப் பிரதேச அரசும் இந்த திட்டத்திற்கு மாறுவதாக அறிவித்துள்ளது. எனவே, திமுக அரசு இதற்கு மேலும் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதை நிறுத்தி, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தனது அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة