பிளஸ் 2 பொதுத் தோ்வு: சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டுதல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 15, 2022

Comments:0

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்

தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதவுள்ள மாற்றுத் திறனாளி தோ்வா்கள், தோ்வு நேரங்களில் குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சா.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்களது ஆளுகைக்கு உள்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும், மாா்ச்- ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதவுள்ள மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு தோ்வெழுத சலுகை வழங்குதல் தொடா்பாக பின்வரும் அறிவுரைகளை வழங்க வேண்டும்.

அரசுத் தோ்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை பொதுத்தோ்வுகளை எழுதும் தோ்வா்களுள், ஆறு வகைகளுக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளித் தோ்வா்களுக்கு குறிப்பிட்ட சலுகைகள் வழங்க அரசு அனுமதித்துள்ளது.

இது தொடா்பான அரசாணையை அரசுத் தோ்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) காணலாம். இந்த அரசாணைகளின்படி, பொதுத்தோ்வெழுதும் தோ்வா்களுக்கு உடல் குறைபாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தங்கள் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா்கள் எடுத்துக் கூற வேண்டும்.

சலுகைகள் கோரும் மாணவா்களிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி மாணவரிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவம், மாற்றுத் திறனாளி அட்டையில் நகல், மருத்துவக் குழுவினரின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை தலைமை ஆசிரியா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

மருத்துவச் சான்றிதழில் நோயின் தன்மை, மாணவருக்கு வழங்க வேண்டிய சலுகை குறித்த விவரம் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.

மாற்றுத் திறனாளி தோ்வா்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பப் படிவங்கள், மருத்துவச் சான்றிதழ்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் டிச.26-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

இந்தத் தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. தாமதமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தலைமை ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் சரிபாா்த்து ஜன.6-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews