பொறியியல் கலந்தாய்வு; இட ஒதுக்கீடு குறித்த முழு விபரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 10, 2022

Comments:0

பொறியியல் கலந்தாய்வு; இட ஒதுக்கீடு குறித்த முழு விபரம்

தமிழகத்தில் உள்ள 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதற்கு முன் தேதிகள் வெளியிடப்பட்டு சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாகவும் பொறியியல் கலந்தாய்வு தேதிகள் மாற்றப்பட்டு கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று துவங்க இருக்கும் பொறியியல் கலந்தாய்வுக்கான விவரங்களையும் இடஒதுக்கீடு குறித்த தகவல்களையும் உயர்கல்வித்துறை அமைச்சர் இதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டிருந்தார்.

அப்போது அவர் பேசியதாவது ''இந்த ஆண்டு 431 பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வில் பங்குபெற உள்ளது. தமிழ்நாட்டில் தனியார் கல்லூரிகள், அரசு கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் என 431 கல்லூரிகள் பங்குபெற உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடுகள் 1,48,711 இடங்கள் உள்ளது. தனியார் கல்லூரிகளில் 65 சதவிகிதம் அரசு கோட்டா. இதில் அரசுப்பள்ளி 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10,968 இடங்கள். இந்த ஆண்டுமுதல் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளில் தொழிற்கல்வி (vocational) பாடப்பிரிவு வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு 2 சதவிகித இட ஒதுக்கீடாக 175 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளது''

"பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு 10ம் தேதி(இன்று) துவங்க இருக்கிறது. 10 ம் தேதி தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும். நான்கு கட்டமாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை முதல்கட்டம் நடைபெறும். இரண்டாவது கட்டம் செப்டம்பர் 25 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெறும். முதல் கட்டத்திற்கும் இரண்டாம் கட்டத்திற்கும் இடையில் உள்ள காலம் மாணவர்களின் நலன் கருதிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது கட்டம் அக்டோபர் 13 ல் தொடங்கி 15 வரை நடைபெறும். நான்காவது கட்டம் அக்டோபர் 29 முதல் 31 வரை நடைபெறும். நான்கு கட்டங்களில் நடைபெறும் இந்த கலந்தாய்வுகளில் பொதுப்பிரிவு 31%. இந்த பொதுப்பிரிவில் உள் ஒதுக்கீடாக அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கப்படும். பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் 30% ல் உள் ஒதுக்கீடாக 3.5% இஸ்லாமியர்களுக்கு என்று ஒதுக்கப்படும். அதிலும் 7.5% உள் ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் 7.5% உள் ஒதுக்கீடு.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும். 18% பட்டியலின மாணவர்களுக்காக ஒதுக்கப்படும் அதிலும் 3% உள் ஒதுக்கீடு அருந்ததியர் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 1% இடஒதுக்கீடு பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்படும். அதிலும் உள் ஒதுக்கீடாக 7.5% அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு கொடுக்கப்படும். துணைநிலை கலந்தாய்வு நவம்பர் 15 முதல் 17 வரை நடைபெறும். பொதுத்தேர்வில் தோல்வி அடைந்து இரண்டாம் முறை எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அதில் வாய்ப்பு கொடுக்கப்படும். செப்டம்பர் மாத இறுதியில் வகுப்புகள் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும். பாடத்திட்டத்தை பொறுத்தவரை பொறியியல் பிரிவிலும் தமிழ் மொழிப்பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews