மாணவர் சுமையை குறைக்க வாரம் ஒருமுறை ம.பி.யில் புத்தகப் பை இல்லாத நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 06, 2022

Comments:0

மாணவர் சுமையை குறைக்க வாரம் ஒருமுறை ம.பி.யில் புத்தகப் பை இல்லாத நாள்

பள்ளிக் குழந்தைகளின் புத்தகப் பை சுமையை குறைக்கும் வகையில் வாரம் ஒரு நாள் புத்தகப் பை இல்லாத நாளாக கடைப்பிடிக்க மத்தியப் பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ம.பி. அரசு புத்தகப் பை எடையை நிர்ணயித்துள்ளது. பள்ளிக் கல்வித் துறை வாயிலாக சுற்றறிக்கை மூலம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது. அதன்படி 1, 2ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 1.6 முதல் 2.2 கிலோ வரையிலான எடையில் இருக்க வேண்டும். 3 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை எடை 1.7 முதல் 2.5 கிலோ வரை இருக்கலாம். 6 மற்றும் 7ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். எட்டாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பை 2.5 கிலோ முதல் 4.5 கிலோ வரையும் இருக்கலாம்.

உயர்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் புத்தகப் பையின் எடை அந்தந்த பள்ளி நிர்வாகத்தால் மாணவர்களின் பாடப்பிரிவை பொருத்து அமையும். இது தவிர பயிற்சி புத்தகங்கள், கையெழுத்து பயிற்சி புத்தகங்கள் ஆகியனவற்றை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வகுப்பறை யிலேயே வைத்துச் செல்லலாம். கணினி அறிவியல், நல்லொழுக்கப் பாடம், பொது அறிவியல், சுகாதாரம், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் கலை சார்ந்த பாடப் புத்தகங்களை 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிகளுக்கு கொண்டுவரத் தேவையில்லை என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் வளாகத்தில் இருக்கும் அறிவிப்புப் பலகைகளில் மாணவர்களின் அனுமதிக்கப்பட்ட புத்தகப் பை எடை குறித்து விவரங்களை இடம்பெறச் செய்ய வேண்டும். அதேபோல், பள்ளி மாணவர்களின் கையேட்டிலும் இந்த விவரங்கள் நிச்சயமாக இடம்பெற வேண்டும். இவை மட்டுமில்லாது பள்ளிகள் அவற்றின் வசதிக்கு ஏற்ப வாரத்தில் ஏதேனும் ஒருநாள் புத்தகப் பை இல்லாத நாளாக அறிவித்து செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது. 3 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 மணி நேரத்திற்கு மிகாமல் மட்டுமே வீட்டுப்பாடம் தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதாகவும் இது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews