எப்படி வேறு துறைகளில் மனிதர்கள் வேறுபடுவது போலப் பள்ளி ஆசிரியர்களும் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 01, 2022

Comments:0

எப்படி வேறு துறைகளில் மனிதர்கள் வேறுபடுவது போலப் பள்ளி ஆசிரியர்களும் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள்

*எப்படி வேறு துறைகளில் மனிதர்கள் வேறுபடுவது போலப் பள்ளி ஆசிரியர்களும் பலதரப்பட்டவர்களாக இருப்பார்கள்*.

*அசோகமித்திரன்**

சுமார் நூறு ஆசிரியர்கள், என்னை உருவாக்கி இருக்கிறார்கள். அதாவது அந்த நூறு ஆசான்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். நான் பட்ட கடனை அவர்கள் திருப்பிக் கேட்கமாட்டார்கள். அது அவர்களுடைய பெருந்தன்மை. விலை மதிப்பற்ற செல்வத்தையும் கொடுத்து, பெற்றவர்கள் உயர்வதையே -வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற தொழில் அன்று. அது பணி. அல்லது தொண்டு. அவர்கள் பெறுவது சம்பளம் அல்ல. அது சன்மானம்.

-பிரபஞ்சன்

இன்று நான் எழுதும் மொழிக்கும், சிந்தனைக்கும் அந்த மேலான ஆசிரியர் பெருமக்களே காரணம் என்கிற நன்றியுடன் கூடிய புரிதல் எனக்குண்டு.

இயற்கையின் இனிய பிரதிநிதியே ஆசிரியர் பெருமக்கள்.

-பிரபஞ்சன்

மாணவர்களின் முதல் முன்மாதிரி, அல்லது வீரயுகத் தலைவர் (ஹீரோ) ஆசிரியர்கள்தாம்.

-பிரபஞ்சன்

என் தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசு சொல்வார். 'நூலகத்துக்குப் போடா நாம் எவ்வளவு மூடர் என்று அது சொல்லும். கூடவே, எத்தனை அறிஞர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்றும் சொல்லும். நாம் கற்றுக்கொள்ள வேண்டியது ஒன்றுதான். உலகம் படிக்கக் காத்திருக்கும் அந்த மேதைகள் வரிசையில் நீ இருக்கப் போகிறாயா என்று கேட்கும். நீ தைரியமாகச் சொல்ல வேண்டும். 'ஆம்' நான் இருப்பேன் உலகம் என்னைக் கற்கும் நாள் ஒன்று வரும்' என்று சொல்ல முடியும் என்றால் உன் வாழ்க்கை அடர்த்திகொண்டது என்று பொருள்.

-பிரபஞ்சன்

ஆசிரியர் தன் அன்பு, அக்கறை இரண்டை மட்டும் கொண்டு இயங்கினால் போதும் என்ற நிலைக்கு சரியான நிலைக்கு வந்திருக்கிறது கல்வி.

-பிரபஞ்சன்

ஆசிரியர்கள் என்பவர்கள், மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்கக் கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஔி தந்தவர்கள். அவர்கள் கையில் விளக்குகள் இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறார்கள், எரிகிறார்கள்.

-பிரபஞ்சன்

கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக் கொண்டே இருக்கிறவன் ஆசிரியன்.

-பிரபஞ்சன்

இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றைத் தன்வயப்படுத்திக் கொண்டு, நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள்.

-பொன்னீலன்

ஆசிரியப் பணி என்பது மற்ற எல்லா வேலைகளைப் போன்ற இன்னொரு வேலை அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச் செய்வது. இன்னும் சொல்லப் போனால் விரும்புகிறவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது.

-ஆர்.பாலகிருஷ்ணன்

ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் நீ தொடர்ந்து படிக்கப் போகிறாய் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து கற்றுக் கொண்டிருப்பவர்களால் மட்டுமே தொடர்ந்து கற்பிக்க முடிகிறது. அதனால்தான் கற்பித்தலை கற்றுக்கொடுத்தல் என்கிறோம்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

ஏழை மாணவனின் காலி வயிற்றைக் கண்டறியும் நேசம் தாய்க்கு அடுத்தபடி ஆசிரியருக்குத்தான் உண்டு. ஆதலால், நல்ல ஆசிரியர் மாணவருக்குத் தாயுமானவர்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

வாடிய முகத்தை வாசிக்கத் தெரிந்த ஆசிரியரால் தான் வழித்துணையாய் நின்று வழிகாட்ட முடியும்; தோழமையோடு தோள்கொடுக்க முடியும்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

எதிர்கால உலகம் இளைய தலைமுறையின் கையில் உள்ளதென்றால் அந்த இளைய தலைமுறையை ஆக்கபூர்வமான வழியில் ஆற்றுப்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

♥நல்ல ஆசிரியர் புரியாத கணிதத்தை பாடத்தைப் புரிய வைப்பவர் மட்டுமல்ல. ஒரு வகையில் வாழ்க்கையையும் புரிய வைப்பவர்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

♥கனவு ஆசிரியர் வானத்தில் இருந்து மழையாய்ப் பொழிபவர் அல்ல. நிலம் அறிந்து விதைப்பவர், தேவை அறிந்து உரம் போடுபவர், வேலி அமைத்துப் பாதுகாப்பவர். அறுவடை வரையில் அரவணைப்பவர்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

♥நல்லாசிரியர் நம்பிக்கை ஊட்டுபவர். 'உன்னால் முடியும்' என்று உற்சாகப்படுத்துபவர். அவரே வானத்தையும் காட்டுகிறார், சிறகிற்கும் வலுவூட்டுகிறார். அவர் தடுக்கி விழுந்தால் தாங்கி நிறுத்துபவர். முதல் வரிசை மாணவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்காமல் திறனறிந்து தேவையுணர்ந்து உதவி வழிகாட்டுபவர்.

-ஆர்.பாலகிருஷ்ணன்

♥நல்லாசிரியர் உளவியல் உணர்ந்தவர். அவர் புலம்புவதில்லை, சபிப்பதில்லை, சினம் காட்டுவதில்லை.

-ஆர்.பாலகிருஷ்ணன்

புத்திசாலிகளும், புத்திசாலிகள் எனத் தங்களை நினைத்துக் கொண்டோரும்தான் வகுப்பறையில் ஆசிரியர்க்கும் மாணவர்க்குமிடையே இடைவெளியை உண்டு பண்ணி விட்டார்கள் என்பது என் கருத்து.

வகுப்பறைக்குள் செயற்கைப் பேச்சுக்கள் விலகி வெகு இயற்கையான உரிமை கலந்த உரையாடல் நிகழ வேண்டும்.

-ச.மாடசாமி

மாணவர்களோடு சமதளத்தில் நின்று, கைகோர்த்து, மனம் விட்டுப் பேசி, சிரித்து, அவர்களின் அறியாமையை ஏற்று அரவணைத்து, அவர்களோடு அவர்கள் வேகத்தில், ஆசிரியர்கள் கூடச் செல்ல வேண்டும்.

வகுப்பறையை எளிய திறமைகளின் சந்திப்பாக மாற்றுபவர்தான் என் கனவு ஆசிரியர்.

-ச.மாடசாமி

ஒட்டு மொத்தக் கல்விமுறையிலும் கோளாறு இருக்க, ஆசிரியரை மட்டும் பிரித்து அவரைக் குற்றவாளியாக்கிப் பேசுவதில் நியாயமில்லை. அதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை. நாடு எப்படிப் போனாலும் அவர் மட்டும் 100 சதம் சரியாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது யதார்த்தததுக்கு புறம்பான எதிர்ப்பாகும்.

-ச.தமிழ்ச்செல்வன்

படித்த படிப்புக்கும் வாழும் சொந்த வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாடு கொண்டவராக ஓர் ஆசிரியர் இருக்கவே கூடாது.

-ச.தமிழ்ச்செல்வன்

வரலாற்றுக்கும் சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பாலமாக பாடத்திட்டம் என்னும் மேடையில் நின்று பேசுகிறவரே என் கனவு ஆசிரியர்.

-ச.தமிழ்ச்செல்வன்

என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பறையுமே பரிசோதனைச் சாலைகள்தான். அங்கே எது விளைவை ஏற்படுத்துமென்பதை அங்குள்ள ஆசிரியர்கள்தான் கண்டு பிடிக்க வேண்டும்.

-பிரளயன்

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் புதையலைக் கண்டெடுக்கும்போது கிடைக்கும் ஆனந்தமே இந்த ஆசிரியப்பணிக்கான பரிசு என்பதை என் அனுபவத்தில் கண்டு கொண்டேன்.

-பாமா

ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் வழியில் மாணவரின் வழிகாட்டிகளாக இருப்பார்கள் என்பதை நம்புவேன். இன்னொரு ஆசிரியரிடம் என் இயலாமையைப் பகிர்ந்துகொண்டு வழி கேட்கவோ, அவரது இயலாமையை சுட்டிக் காட்டி வழி நடத்தவோ தயங்கத் தேவையில்லாத ஒரு தோழமையை என் சக ஆசிரியர்களுடன் ஏற்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன்.

-ஞாநி

ஒவ்வொரு மாணவர் முகத்தையும் படிக்கக் கற்றுக் கொள்வேன். எந்த ஒரு புத்தகத்தையும் விடக் கடினமான புத்தகம் அது என்பது எனக்குத் தெரியும்.

-ஞாநி

தன் அப்பாவிடமோ, தன் நண்பனிடமோ பேசத் தயங்குவதைக் கூட என்னிடம் பேசலாம் என்ற நம்பிக்கையை என் மாணவருக்கு அளிக்கும் ஆசிரியனாகவே நான் இருக்க முயற்சிப்பேன்.

-ஞாநி

கற்றலுக்கான சூழலை வகுப்பில் உருவாக்கு... ஒரு போதும் கற்பிக்காதே... குழந்தைகளுக்கு நாம் கற்பிக்க முடியாது. அவர்களை தானே கற்க அனுமதிக்க வேண்டும். அதுவே ஆசிரியரின் பணி.

-ஆயிஷா இரா.நடராசன்

கல்வியும் மருத்துவமும் ஒருபோதும் வேலையாக கருதப்படக்கூடாது, அவை இரண்டும் மனிதனை மேம்படுத்தும் உயர்ந்த சேவைகள், ஆகவே ஆசிரியர்களை எப்போதும் எனது வழிகாட்டிகளாக மதிக்கிறேன்.

-எஸ்.ரா

ஒரு ஆசிரியர் தனித்துவமிக்க பண்புகளுடன் இருப்பது அவசியம், கற்பிக்கும் முறையிலும், உரையாடும் பாணியிலும், அன்பை வெளிப்படுத்தும் முறையிலும், மாணவர்களிடம் காட்டும் அக்கறையிலும் இந்த தனித்துவம் வெளிப்பட வேண்டும்.

-எஸ்.ரா

கற்பனைத்திறன். அதாவது ஒரு பாடத்தையோ, புத்தகத்தையோ கற்பிக்கும் ஆசிரியர் அதை அப்படியே ஒப்புவிக்க கூடாது. மாறாக தனது கற்பனையைத் துணையாகக் கொண்டு புதிய வெளிச்சத்தில், புதிய கண்ணோட்டத்தில் கற்றுத்தர வேண்டும். அதற்காக மாற்றி யோசிக்கவும் புதிய சிந்தனைகளை உருவாக்கவும் ஆசிரியர் முனமாதிரியாக முயற்சிக்க வேண்டும், கற்பனையில்லாத கற்பித்தலே வகுப்பறையை அலுப்பூட்டிவிடுகிறது, அதனால் தான் மாணவர்கள் அதிகம் தோற்றுப்போகிறார்கள்.

-எஸ்.ரா

பண்பு. ஒரு மாணவன் எப்படிப் படித்தால் எனக்கென்ன என்று இருந்துவிடாமல், அவனது கற்கும் திறனை மேம்படுத்தி அவனை சாதனை செய்ய வைப்பதே ஆசிரியரின் வேலை. ஆகவே தன்னுடைய முழுமையான அக்கறையைப் பேதமில்லாமல் எல்லோரிடமும் காட்ட வேண்டும், அதற்காக மாணவனின் பின்புலத்தையும் அவனது பலம் பலவீனத்தையும் அறிந்து அவனோடு நெகிழ்வான உறவைப் பேணி வர வேண்டும்.

-எஸ்.ரா

வகுப்பறை என்பது ஒருவழிச்சாலையில்லை, அது இருவழிச்சாலை. அங்கே மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள், அவர்களிடமிருந்து சில வேளைகளில் ஆசிரியர்களும் புதியன கற்றுக் கொள்கிறார்கள். ஆகவே ஒரு நல்லாசிரியரின் முக்கியமான பண்பு அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்வது.

-எஸ்.ரா

துறைசார்ந்த வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை வகுப்பறையில் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

-எஸ்.ரா

மாணவனை ஒரு சமூக மனிதனாக மாற்றுவது ஆசிரியர்களின் வேலை. ஆகவே சமூகப் பிரச்சனைகள் குறித்தும். அதன் கலாச்சாரம் பொருளாதாரம், இன, மத வேறுபாடுகள், பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டியது ஆசிரியரின் வேலையே. ஆகவே சமூக கடமையாற்ற வேண்டிய பொறுப்புணர்வுமிக்க மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர் கவனமாக மேற்கொள்ள வேண்டிய பணி.

-எஸ்.ரா

நல்ல ஆசிரியர் கட்டுப்பாட்டைத் தண்டனையில்லாமல் செயல்படுத்துகின்ற ஒருராக இருப்பார். தண்டனை குறித்த பயம் வகுப்பறையை நரகமாக்கிவிடும் என்பதே உண்மை.

-எஸ்.ரா

எதிலும் புதிதாக என்ன செய்ய முடியும், அதை எப்படிச் செய்வது என்று சிந்தித்துக் கொண்டேயிருப்பது தான் நல்லாசிரியர்களின் இயல்பு.

-எஸ்.ரா

உலகம் ஒரு மிகப்பெரிய வகுப்பறை. இங்கே சில நேரம் நாம் மாணவர்களாக இருக்கிறோம், சில நேரம் நாமே ஆசிரியர்களாகிவிடுகிறோம்.

கற்றுக் கொள், கற்றுக் கொடு, கற்றதை செயல்படுத்து.

-எஸ்.ரா

உலகத்தில் இருக்கும் ஒரே நம்பிக்கை ஆசிரியர்கள்தாம். பாடம் நடத்துதல் பணியல்ல சேவை. வழிபாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் ஆற்ற வேண்டிய அற்புதப்பணி. மகத்தான ஆசிரியர் நண்பனாய் நடந்து, வழிகாட்டியாய் மருவி, இறுதியில் குருவாக உருப்பெறுபவர்.

-இறையன்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews