ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 01, 2022

Comments:0

ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்

ஊதிய உயர்வு கோரி தொடர்ந்த வழக்கு: 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம்.!

2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் அரசுத் துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 4,500 பேரின் பட்டியலை சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஊதிய விகிதத்தில் முரண்பாடு காணப்பட்டதால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு, ஊதிய விகிதங்கள் மாற்றி அமைத்து 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்படவர்களுக்கு ஊதிய உயர்வு சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அரசாணைக்கு முரணாக உள்துறை, கல்வி, வருவாய், சுகாதாரம், நிதி உள்ளிட்ட துறைகளில் 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளில் சேர்ந்த 4,500 பேருக்கு இந்த அரசாணையின் பலன் வழங்கப்பட்டுள்ளது போல தங்களுக்கும் ஊதிய உயர்வுப் பலன்களை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக் கோரி வேளாண் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியில் உள்ள 18 பேர் 2018ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு பணப்பயன்கள் வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், 2006, 2007ஆம் ஆண்டுகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 4,500 பேரின் பட்டியலையும், இவர்களில் ஒவ்வொரு துறைக்கும் எத்தனை பேர் நியமிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேருக்கு ஊதிய உயர்வு சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பன குறித்த விவரங்களையும் தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இந்த விவரங்களை சமர்ப்பிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews