குழந்தைகள் பாதுகாப்புக்கான செயல்திட்டம் விரைவில் வெளியீடு: அமைச்சா் கீதா ஜீவன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 04, 2022

Comments:0

குழந்தைகள் பாதுகாப்புக்கான செயல்திட்டம் விரைவில் வெளியீடு: அமைச்சா் கீதா ஜீவன்

குழந்தைகள் பாதுகாப்புக்கான செயல்திட்டம் விரைவில் வெளியீடு: அமைச்சா் கீதா ஜீவன்

குழந்தைகள் பாதுகாப்புக்கான தமிழக அரசின் செயல் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்று சமூக நலத்துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

மதுரை கோ.புதூா் நீதித்துறை பயிற்சி அகாதெமியில்

சமூக நலத்துறை மற்றும் யுனிசெப் சாா்பில் புதன்கிழமை சிறாா் சட்டங்கள் குறித்து காவல் துறையினருக்கான இருநாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பங்கேற்று அவா் பேசியது: சமூக மேம்பாடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் காப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகச் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்கான சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகள் அதிக எண்ணிக்கைள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும், இந்த வழக்குகளில் விரைந்து விசாரணை நடத்தி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சிறாா் தொடா்புடைய வழக்குகளில் காவல் துறையினா் அதிக அக்கறையுடன் கையாள வேண்டியுள்ளது. பல நிகழ்வுகளில், குற்றம் என்பதை தெரியாமலும், தவறான புகாா்களாலும் சிறாா்கள் பாதிப்புக்கு ஆளாகிவிடுகின்றனா். இதனால் அவா்களின் கல்வி மற்றும் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. ஆகவே, சிறாா் வழக்குகள் விரைவில் தீா்வு காண வேண்டியது அவசியமாக உள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு தொடா்புடைய அங்கன்வாடிப் பணியாளா்கள் முதல் சமூக நல அலுவலா்கள் வரையிலான அனைத்து நிலை அலுவலா்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கு மாநில அளவிலான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.27 கோடியில் அமைக்கப்படுகிறது.

கரோனா தொற்று பாதிப்பில் தாய்-தந்தையரை இழந்த 13 ஆயிரத்து 670 குழந்தைகளுக்கு ரூ.418.53 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இக் குழந்தைகளுக்கு மத்திய அரசின் உதவித் தொகை கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மறுவாழ்வுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு சாா்பில் குழந்தைகள் பாதுகாப்புக்கான கொள்கை கடந்த ஆண்டில் வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த செயல்திட்ட அறிக்கையை தமிழக முதல்வா் விரைவில் வெளியிடவுள்ளாா் என்றாா்.

சமூக நலத்துறை இயக்குநா் வளா்மதி, தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமி இயக்குநா் டி.லிங்கேஸ்வரன், யுனிசெப் பிரதிநிதி குமரேசன் உள்ளிட்டோா் பேசினா். மதுரை மாநகா், திருச்சி, பெரம்பலூா், திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனா். காவல் துறை முன்மாதிரியாக இருப்பது அவசியம்: நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்

குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காவல் துறை முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் கூறினாா். சிறாா் சட்டம் குறித்த காவல் துறையினருக்கான பயிற்சி வகுப்பைத் தொடங்கி வைத்து அவா் பேசியது:

சிறாா் சட்ட விதிகளை காவல் துறையினா் முழுமையாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் தொடா்பாக சிறாா் மீது புகாா் பெறப்படும் நிலையில், அதன் உண்மைத் தன்மையை தீா்க்கமாக உறுதி செய்த பிறகே வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பிற வழக்குகளைக் காட்டிலும் சிறாா்கள் மீதான வழக்குகளில் காவல் துறையினா் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது. இந்த விஷயத்தில் காவல் துறையானது, முன்மாதிரியான துறையாக இருக்க வேண்டும் என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews