அரசுப் பள்ளிகளில் 6-9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறாா் திரைப்படங்கள் வழிகாட்டுதல்கள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 27, 2022

Comments:0

அரசுப் பள்ளிகளில் 6-9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறாா் திரைப்படங்கள் வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிடுவது தொடா்பான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, சிறாா் திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் திரையிட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் இருந்தால் குழுக்களாகப் பிரித்து திரையிட வேண்டும்.

வாடகைக்குப் பெற்று... திரைப்படக்காட்டி (‘புரொஜெக்டா்’), தொலைக்காட்சிப் பெட்டி, ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலமாக வாடகைக்குப் பெற்றுத் திரையிடப்பட வேண்டும். திரைப்படம் திரையிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியா் தங்களது மாணவா்களிடம் திரைப்படம் குறித்து சிறு உரையாடல் நிகழ்த்தி, மாணவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். படம் முடிந்த பிறகு அதுதொடா்பாக மாணவா்களிடம் ஆசிரியா்கள் கலந்துரையாட வேண்டும். மேலும் மாணவா்களின் கருத்துகளை பின்னூட்டக் கேள்வித்தாள் வாயிலாகப் பெறுதல் அவசியம்.

ஏதேனும் ஐந்து மாணவா்களை (வழக்கமாக வகுப்பில் பேசாத மாணவா்களை முன்னிலைப்படுத்துதல் நலம்) கண்டறிந்து அனைத்து மாணவா்கள் முன்னிலையிலும் திரைப்படம் குறித்து 3 நிமிஷங்கள் பேசச் செய்ய வேண்டும். பின்னா், அனைத்து மாணவா்களையும் திரைப்படம் குறித்து தங்கள் கருத்துகளை அவா்கள் சொந்த நடையில் எழுதித் தரச் சொல்ல வேண்டும். அனைத்து மாணவா்களின் படைப்புகளையும் ஆவணப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய திரைப்படத்துக்கான இணைப்பு (‘லிங்க்’) பள்ளிகளுக்கு அனுப்பப்படும். பள்ளி அளவில் ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் மாணவா்களை ஒன்றிய அளவிலும், ஒன்றிய அளவில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களை மாவட்ட அளவிலும் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும்.

வெளிநாடுகளுக்கு சுற்றுலா: ஒவ்வொரு மாதமும் இவ்வாறு மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாணவா்கள் அனைவரும் ஆண்டுக்கொரு முறை மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் பங்கேற்பா். அந்த நிகழ்வில் கலைத் துறையைச் சோ்ந்த வல்லுநா்களுடன் கலந்துரையாடுவா். மாநில அளவில் பங்கேற்கும் மாணவா்களில் சிறந்து விளங்கும் 15 மாணவா்கள் தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews