ஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 01, 2022

Comments:0

ஆசிரியர் பணி நியமனம்; உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசுக்கு கேள்வி?

ஆசிரியர் நிரந்தர பணி நியமனத்தில் அரசுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களே. அவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது வரை பணி வாய்ப்பு கிடைக்காமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு கடந்த 23ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் குறிப்பிடவில்லை.

இதனால் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். அதோடு ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி வாய்ப்பை பெற இயலாத நிலை உருவாகும். ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசின் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்புவது தொடர்பாக கடந்த 23ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பை ரத்து செய்வதோடு, அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆசிரியர்கள் தற்காலிகமாகவே நியமிக்கப்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, ” தகுதி அடிப்படையில் நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வேறுபாடு உள்ளது. நிரந்தரமாக ஆசிரியரை நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை? இது போன்ற முறையற்ற, தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் தகுதியற்றவர்கள் பணிநியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இது மாணவர்களின் நலன் சார்ந்தது.

ஆகவே, அரசின் இந்த பதில் திருப்திகரமாக இல்லை. ஆகவே, தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை ஜூலை 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews