முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க ராமதாஸ் யோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يوليو 29، 2022

Comments:0

முழுப் பாடத் திட்டத்தை சுமத்துதல், கூடுதல் வகுப்புகள் கூடாது: மாணவர்களின் மன அழுத்தம் போக்க ராமதாஸ் யோசனை

“மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க, முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்; கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது” என்று பள்ளிக் கல்வித் துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி மர்மச்சாவு காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியும், விளைவுகளும் தணிவதற்கு முன்பே, 3 நாட்களில் நான்கு மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மிகுந்த வேதனையும், கவலையும் அளிக்கிறது. இத்தகைய நிகழ்வுகள் சங்கிலித் தொடராக மாறிவிடாமல் தடுக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும்.

சின்னசேலம் கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகமும், கொலை செய்யப்பட்டதாக பெற்றோரும் கூறி வரும் நிலையில் உண்மை என்ன என்பதை விசாரணை தான் வெளிக்கொண்டு வர வேண்டும். ஆனால், மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் பெற்றோர், மாணவர்களின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை. அந்தத் தாக்கம் குறையும் முன்பே கடந்த 25-ஆம் தேதி திங்கள் கிழமை திருவள்ளூர் கீழ்ச்சேரி பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவியும், 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கடலூரில் 12-ஆம் வகுப்பு மாணவியும், 27-ஆம் தேதி புதன்கிழமை சிவகாசியில் 11-ஆம் வகுப்பு மாணவியும், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்த ஐவருமே 11 அல்லது 12-ஆம் வகுப்பு பயின்று கொண்டிருந்தவர்கள். அவர்கள் அனைவருமே கல்வி சார்ந்த அழுத்தம் தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டனர் என்பது உறுதியாகியுள்ளது.

கல்வியாண்டு தொடங்கிய சில வாரங்களிலேயே மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவியர் 5 பேர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை வழக்கமான தற்கொலைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. மாணவர்களும், இளைஞர்களும் தான் இந்திய மக்கள்தொகையின் லாபப்பங்குகள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். மாணவர்களின் தற்கொலைக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்ய வேண்டிய கடமை அரசு, பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பெற்றோருக்கு உள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மாணவச் செல்வங்களை மனதளவில் கடுமையாக பாதித்திருக்கின்றன. பள்ளிகளுக்கு சென்று நண்பர்களை சந்தித்து மனதளவில் மகிழ்ச்சியாக பாடம் கற்று வந்த முறையை கரோனா ஊரடங்கு சிதைத்தது. கடந்த இரு ஆண்டுகளாக மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியாகத் தான் படித்து வந்தனர். ஆன்லைன் வகுப்புகள் தொடக்கத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அதற்கு மாணவர்கள் மனதளவில் தயாராகி விட்டனர். அந்த நேரத்தில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டாலும் கூட, அதற்குரிய இயல்புகள் இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக தனியார் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் சிறைக்கூடங்களாக மாறி விட்டன. கலை, விளையாட்டு போன்ற வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்; முழுமையான மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் அவர்கள் மீது திணிக்கப்படுகிறது. பல பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் வகுப்புகளுக்கு வர வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றன.

பள்ளிகளில் இருந்து வீடுகளுக்கு வந்தால் அங்கும் அதே சூழலையே மாணவர்கள் எதிர்கொள்ள நேரிடுகிறது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்களின் வாரிசுகளை குழந்தைகளாகப் பார்க்காமல் மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாகவே பார்க்கின்றனர். அதனால், வீடுகளிலும் அவர்களை இயல்பாக இருக்க விடாமல், எல்லா நேரங்களிலும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக ஆன்லைன் வகுப்புகள் கடினமானதாக இருந்தாலும், தேர்வுகள் கடினமானதாக இல்லை; தேர்வுகள் நடத்தப்படாமலேயே தேர்ச்சி வழங்கப்பட்டதாலும், தரவரிசை போன்ற மதிப்பீடுகள் இல்லாததாலும் மாணவர்கள் சற்று நிம்மதியாக இருந்தனர்.

ஆனால், இப்போது நிலைமை திடீரென மாறி மருத்துவப் படிப்புக்கு தயாராக வேண்டும், அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பன போன்ற அழுத்தங்களை மாணவச் செல்வங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதுவே தற்கொலைகளுக்கு காரணமாகும். இதைத் தடுக்க வேண்டுமானால், மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும். அதற்காக, குறைந்தபட்சம் மேல்நிலை மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வுகள் வழங்கப்பட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது உயர்நிலை மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகுப்புகள் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பதற்காக முழுப் பாடத் திட்டத்தையும் மாணவர்கள் மீது சுமத்தாமல் பாடத்திட்டத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும்.

கூடுதல் சிறப்பு வகுப்புகளை நடத்தி மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது என்பன போன்ற அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறைக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேபோல், பெற்றோரும் தங்களின் விருப்பங்களையும், கனவுகளையும் பிள்ளைகள் மீது திணிப்பதை தவிர்க்க வேண்டும். மாணவர்கள் புத்திசாலிகள்; அவர்களுக்கு கனவுகள் உண்டு; அந்த கனவை நனவாக்குவதற்காக அவர்கள் விருப்பப்பட்டு படிப்பர். அவர்கள் மீது உங்கள் ஆசைகளை திணித்து, மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தவறான முடிவுகளை எடுக்க பெற்றோர் காரணமாகி விடக் கூடாது.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة