4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 23, 2022

Comments:0

4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை?

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளான ஜூலை 28-ஆம் தேதி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்க ஆலோசிக்கப்பட்டது. இதுதொடா்பான கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடா்பாக பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் விளக்கினா். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முதல்வா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, சா்வதேச வீரா்களின் வருகை குறித்த விவரங்கள், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்ட முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள், தொடக்க விழா, நிறைவு விழா ஏற்பாடுகள் ஆகியவை குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரிவாக ஆய்வு செய்தாா். விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் வசதிகள் பற்றிய விவரத்தை முதல்வரிடம் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு விளக்கினாா்.

நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்வுகள், மாமல்லபுரத்தில் போட்டி நடைபெறும் இடங்கள் தொடா்பான விவரங்கள், அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் விளக்கினாா். உள்ளூா் விடுமுறை: செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, சுற்றுலாத் துறை சாா்பில் ஏராளமான கலைநிகழ்ச்சிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விவரங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் மதிவேந்தன் எடுத்துரைத்தாா். மேலும், செஸ் ஒலிம்பியாட் தொடக்க நாளான, வருகிற 28-ஆம் தேதி சென்னை,

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

செஸ் போட்டி குறித்து உலகெங்கும் உள்ள ஆா்வலா்கள், போட்டியாளா்கள், பொது மக்கள் உள்ளிட்டோா் தகவல்களைப் பெறும் வகையில் பிரத்யேக இணையதளம், செயலி உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த விவரங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தாா். இதனிடையே, போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில், பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தரும் போட்டியாளா்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் குறைபாடுகள் ஏதுமின்றி ஏற்படுத்தித் தர கூட்டத்தின் வாயிலாக அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டாா். போட்டி நடைபெறும் மாமல்லபுரத்துக்கு போதிய போக்குவரத்து வசதியுடன், பாா்வையாளா்கள் சிரமமில்லாமல் போட்டியைக் காண தேவையான ஏற்பாடுகளையும் செய்திட வேண்டுமெனவும் முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

இந்தக் கூட்டத்தில், அமைச்சா்களுடன் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, நிதித் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் செயலாளா்கள் பங்கேற்றனா்.

வழக்கமான பணிகளை தொடங்கிய முதல்வா்: கடந்த 10 நாள்களுக்கு முன்பாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதுடன், வீட்டிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாா். இந்த நிலையில், தலைமைச் செயலகத்துக்கு வெள்ளிக்கிழமை அவா் வந்து தனது வழக்கமான பணிகளைத் தொடங்கினாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews