பயிற்சி மையங்களுக்கு கடிவாளம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

1 Comments

பயிற்சி மையங்களுக்கு கடிவாளம்

அண்மையில் வெளியான 2021-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் அகில இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றவர்களை உரிமை கொண்டாடுவதில் தேர்வு பயிற்சி மையங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டி, தேர்வர்களுக்கு தவறான பாதையை காட்டுவதாக உள்ளது.


அரசு வேலைக்காக நாட்டில் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் மிகக் கடுமையானதாகக் கருதப்படும் குடிமைப் பணி தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய அயலகப் பணி (ஐஎப்எஸ்) உள்ளிட்ட 24 பணிகளுக்கானது இந்தத் தேர்வு. இதில், முதல் 3 இடங்களையும் பெண்களே பெற்று சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தேர்வான 685 பேரில் 177 பேர், அதாவது 25.84 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். முதல் இடத்தைப் பெற்றுள்ள ஸ்ருதி சர்மா, தில்லியைச் சேர்ந்தவர். இவரது பூர்விகம் உத்தர பிரதேசம். 2-ஆவது இடத்தைப் பெற்றுள்ள அங்கிதா அகர்வால், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ள காமினி சிங்லா பஞ்சாப் மாநிலத்தவர்.


தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை. அகில இந்திய அளவில் 42-ஆவது இடத்தைதான் தமிழக பெண் ஒருவர் பெற்றுள்ளார். அவர் கோவையைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ. இம்முறை தமிழ்நாட்டிலிருந்து வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 27 பேர் மட்டுமே. இது மொத்த தேர்ச்சியில் 3.94% ஆகும். 1990-க்கு பிறகு இது வரை மூன்று முறை மட்டுமே (இக்பால் தலிவால் 1995, எஸ். நாகராஜன் 2004, எஸ். திவ்யதர்ஷினி 2010) தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.


தேர்வு முடிவுகள் வெளியான நாளிலிருந்து, குடிமைப் பணி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் தத்தமது மையங்களில் பயின்று வெற்றி பெற்றவர்களின் புகைப்படங்களுடன் தங்களது வெற்றிக் கதைகளை பறைசாற்றி வருகின்றன. தங்கள் மையத்தில் பயின்றவர்களில் 320 பேர் தேர்ச்சி என்றும், சென்னை பயிற்சி மையங்களில் பயின்றவர்களில் 261 பேர் தேர்ச்சி, 101 பேர் தேர்ச்சி என்றும் கூறுவதோடு சிறப்பிடம் பெற்றவர்களை ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்கள் உரிமை கொண்டாடி வருகின்றன. இதைப் பார்க்கும்போது குடிமைப் பணி தேர்வில் வெற்றி என்பது எளிதான ஒன்றுதான் என்ற எண்ணத்தை தேர்வர்கள் மத்தியில் ஏற்படுத்தலாம். அதே வேளையில், அந்த வெற்றி அத்தனை எளிதானது அல்ல என்ற பயிற்சி மையங்கள் மறைக்கும் உண்மையை தேர்வர்கள் உணர வேண்டியது அவசியம்.


ஊக்கம், திட்டமிடுதல், அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு, விடா முயற்சி ஆகியவை இருந்தால் மட்டுமே வெற்றி சாத்தியம். இந்தத் தேர்வில் பெற்றி பெற்றவர்களின் சதவீதத்தை பார்த்தாலே தேர்வின் கடுமையும், வெற்றி பெற்றவர்களின் உழைப்பும் புரியும். முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர் மிகமிகக் குறைவு.


கடந்த ஆண்டில் குடிமைப் பணி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொத்தம் 10 லட்சத்து 93 ஆயிரத்து 984 பேர். இவர்களில் விண்ணப்ப நிலையிலேயே தகுதி இழந்தவர்கள், தேர்வை எதிர்கொள்ள அஞ்சியவர்கள் மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து365 பேர். அதாவது 53.50 சதவீதம் பேர் முதல் நிலைத் தேர்வை எழுதவில்லை.


அடுத்து, முதல் நிலைத் தேர்வை எழுதிய எஞ்சிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 619 பேரில் தேர்ச்சி பெற்றவர்கள் 9 ஆயிரத்து 215 பேர். இது 1.81 சதவீதம் மட்டுமே. முதன்மைத் தேர்வை எழுதிய இவர்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர்கள் 1,824 பேர். இது 19.79 சதவீதம்.


நேர்காணலில் வெற்றி பெற்று இறுதியாக பணிக்கு தகுதி பெற்றவர்கள் 685 பேர். விண்ணப்பித்தவர்களை ஒப்பிட்டால் இது 0.062 சதவீதம். தேர்வை எழுதியவர்களை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் 0.13 சதவீதம் மட்டுமே. மிகமிகக் குறைவான தேர்ச்சி சதவீதம் என்பது புதிதல்ல. இதுவரை ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களே குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவற்றையெல்லாம் பயிற்சி மையங்கள் சொல்வதில்லை.


முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றவர் என்றாலும், பலமுறை முயன்று வெற்றி பெற்றவர் என்றாலும் அவர் தன்னை முழுமையாக தயார்படுத்திக் கொள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களுக்கு செல்வதுண்டு.


ஒரு பயிற்சி மையத்தில் முழு நேர படிப்பில் சேர்ந்து படித்துக் கொண்டிருப்பவர் மற்றொரு மையத்தில் மாதிரி தேர்வு எழுத செல்வது உள்பட எந்த வகையான சிறு அனுகூலத்தை பெறச் சென்றாலும் அந்த மையத்தில் தனது பெயரை பதிவு செய்தாக வேண்டும். அப்போது அவர் அந்த மையத்திலும் மாணவராகி விடுகிறார்.


தேர்வில் வெற்றி பெற்றால் அவர் அந்த மையத்துக்கும் சொந்தம். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து அவர்களை தங்களது மாணவர்கள்போல காட்டிக்கொள்வதும் உண்டு.

1 comment:

  1. மேலிடத்தில் உள்ளவர்கள் இதற்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும்.

    அமைச்சரும், ஆணையாளரும், இயக்குநர் பெருமக்களும் பொதுமக்களுக்கு முன்மாதிரியாக தங்கள் வீட்டுப் பேரக் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து பேரணியைத் தொடங்கி வைக்குமாறு பணிந்து வேண்டப்படுகிறது.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews