எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த புதிய திட்டம்: மாதிரி பள்ளிகளை உருவாக்க அரசு முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 03, 2022

Comments:0

எதிர்காலத்துக்கு மாணவர்களை தயார்படுத்த புதிய திட்டம்: மாதிரி பள்ளிகளை உருவாக்க அரசு முயற்சி

'புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பரிசோதனை முயற்சியாக, நாடு முழுதும், 'பி.எம்., ஸ்ரீ' எனப்படும் பிரதமர் மாதிரி பள்ளிகள் துவக்கப்படும்

இவை, எதிர்காலத்துக்கு ஏற்ப மாணவர்களை தயார்படுத்தும் அமைப்பாக இருக்கும்,'' என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை, 2020ல் மத்திய அரசு அறிவித்தது. இதை, நாடு முழுதும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

தாய் மொழி

கற்கும் திறனை வளர்க்கும் வகையிலான இந்த கல்விக் கொள்கையை செயல்படுத்துவது தொடர்பாக, மாநில கல்வி அமைச்சர்கள் மாநாடு குஜராத்தில் நடந்தது.இந்த இரண்டு நாள் மாநாட்டில், பல மாநில கல்வி அமைச்சர்கள், மத்திய - மாநில கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை சார்ந்த நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய தாவது:புதிய கல்விக் கொள்கையானது, முன் பள்ளி பருவத்தில் துவங்கி, மேல்நிலைப் பள்ளி வரையில், மாணவர்களின் கல்வி கற்கும் திறமையை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் வாயிலாக, 21ம் நுாற்றாண்டில் நம் மாணவர்களை, சர்வதேச அளவில் தயார்படுத்துவதே இந்தக் கொள்கையின் நோக்கமாகும்.அடுத்த 25 ஆண்டு களில், அறிவுசார் பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்.

உலக நாடுகளின் தேவையை நிறைவேற்றும் வகையில், நம்முடைய அறிவுசார் சக்தியை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

இதற்கு, நாம் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் செயல்பட்டு, நம் மாநிலங்களில் உள்ள அனுபவங்கள், வெற்றிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

நல்ல முயற்சி

நாடு முழுதும் ஒரே சீரான கல்வி வளர்ச்சியை ஏற்படுத்திட, இந்த புதிய கல்விக் கொள்கை உதவும். தேசிய அளவில் பாடத் திட்டங்களை வரையறுப்பதற்கு, தரமான பாடத் திட்டங்களை உருவாக்குவதற்கு, அனைவரும் உதவிட வேண்டும்.

நம்முடைய மாணவர்களை உலக குடிமகனாக மாற்ற வேண்டும். அதற்கு நல்ல கல்வி வழங்கப்பட வேண்டும்.

தற்போது, கர்நாடகா, ஒடிசா, டில்லி, மேகாலயா, பீஹார், உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா என பல மாநிலங்களில் நல்ல முயற்சிகள் உள்ளன.இவற்றை உள்வாங்கி, ஒருங்கிணைத்து, தேசிய அளவிலான கல்விக் கொள்கையை, பாடத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மாணவர்கள் கற்கும் திறனை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கு தரமான கல்வி எளிமையாகவும், சுலபமாகவும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இதற்காக தேசிய அளவில், 'பி.எம்., ஸ்ரீ பள்ளிகள்' துவக்கப்படும்.

இவை, எதிர்காலத்துக்கான குடிமகனாக, நம் மாணவர்களை உருவாக்கும். தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைபடுத்துவதற்கான ஒரு பரிசோதனை அமைப்பாக இருக்கும்.பள்ளிக் கல்வியே, மாணவர்களின் அறிவை வளர்ப்பதற்கு அடிப்படையாகும்.

வரும் 21ம் நுாற்றாண்டின் அறிவுகள், திறன்கள் நம்முடைய குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் பள்ளிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு மாதிரியாக, இந்த பி.எம்., ஸ்ரீ பள்ளிகள் விளங்கும்.குஜராத்தி, தமிழ், பெங்காலி, மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான்.

ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உள்ளது. எனவே, எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல. அதனால் தான் தேசிய கல்வி கொள்கையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews