இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை இன்னும் நீட்டித்துக் கொண்டிருந்தால்??? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 29, 2022

Comments:0

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை இன்னும் நீட்டித்துக் கொண்டிருந்தால்???

இல்லம் தேடிக் கல்வி

-------------------------------

//ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் முரணை ஏற்படுத்துகிற, நிர்வாக அமைப்பிலும் வேலைப் பளுவை அதிகரிக்கிற, ஆசிரியர் பற்றாக்குறைக்கும் காரணமாக இருக்கிற, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை இன்னும் நீட்டித்துக் கொண்டிருந்தால், அரசுக்கு வேறு ஏதோ திட்டம் இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கும்//

- Shahjahan R

கோவிட் காலக் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்குமான தொடர்பு அறுபட்டு விட்டது. கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்டு தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை அறிவித்தது.

இல்லம் தேடிக் கல்வியில் தொண்டாற்ற விரும்பும் தன்னார்வலர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், பட்டம் பெற்றவர்கள் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்கலாம். இவர்களைத் தவிர பெற்றோரும் தன்னார்வலர்களாக வரலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம். வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட வேண்டும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம், கணிதம் கற்றுத்தர வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

சுமார் ஒரு லட்சம் தன்னார்வலர்கள் முன்வருவார்கள் என அரசு எதிர்பார்த்த நிலையில், 1.6 லட்சம் பேர் விண்ணப்பித்தார்கள், அவர்களிலும் ஒரு லட்சம் பேர் பட்டதாரிகள், 450 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள்! ஜனவரியில் திட்டம் துவங்கி விட்டது.

2020 மார்ச்சில் துவங்கிய கொரோனா நாடு முழுவதையும் எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலையில்தான் வைத்தது. நோய்த் தடுப்பாகட்டும், கட்டுப்பாடுகள் ஆகட்டும், லாக்டவுன் ஆகட்டும், எதுவுமே துல்லியமாகத் திட்டமிட்டு செய்யப்படவில்லை. டிரையல் அண்ட் எர்ரர் முறையில்தான் நடந்தது. வேறெந்த மாநிலத்திலும் அறிமுகம் செய்யப்படாத இல்லம் தேடிக் கல்வி என்கிற திட்டத்தையும் அப்படித்தான் பார்க்கிறேன். எனவே, அரசின் நோக்கத்தையோ, திட்டத்தின் நோக்கத்தையோ குறை சொல்ல முடியாது. ஆனால் திட்டம் எதிர்பார்த்த பலன்களைக் கொடுத்ததா, கொடுக்கிறதா என்றால், நான் பார்த்தவரையில் – விசாரித்த வரையில் – பெரிய பலன்கள் ஏதும் தரவில்லை; அல்லது, கிடைத்த பலன்களைவிட சிக்கல்கள் அதிகமாக இருக்கின்றன என்றுதான் தோன்றுகிறது.

முதலாவதாக தன்னார்வலர்கள் பற்றிப் பார்ப்போம். மாதம் 1000 ரூபாய்க்கு ஒன்றரை லட்சம் பேர் – அதிலும் ஒரு லட்சம் பட்டதாரிகள் முன்வந்தார்கள் என்றால், அவர்களுடைய எதிர்பார்ப்பு வேறாகத்தான் இருக்கும். ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர் உண்மையிலேயே சேவை மனப்பாங்குடன் வந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு, இந்தத் திட்டத்தின் பங்கேற்றால் நாளை இத்திட்டம் இன்னும் விரிவாகி, இன்னும் கொஞ்சம் சம்பளம் அதிகமாகி, அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற நப்பாசை நிறைய பேருக்கு இருந்திருக்கும். இதற்கு முன்னாலும் அப்படி நிறைய நடந்திருக்கிறது. உதாரணத்திற்கு விளையாட்டுப் பள்ளி ஆசிரியர்கள் விஷயம். அது ஒரு பக்கம் இருக்கட்டும். வாரத்தில் குறைந்தது 6 மணிநேரம், அதாவது, நாளுக்கு குறைந்தது ஒரு மணி நேரம் தவறாமல் வந்து 20 பேருக்கு வகுப்பு எடுப்பதென்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. அதிலும் அந்த 20 பேரும் ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதும் இல்லை. நான் பார்த்த ஒரு கிராமத்தில் 16 மாணவர்கள்தான். ஒன்றாம் வகுப்பில் 4 பேர், இரண்டில் 3 பேர், மூன்றில் 4 பேர், நான்கில் 3 பேர், ஐந்தில் 2 பேர். ஒரு மணி நேரத்தில் புதிதாக கற்றுக் கொடுக்க வந்த தன்னார்வலர் என்னதான் கற்பித்துவிட முடியும்? ஒரு வகுப்புக்கு 10 நிமிடங்கள்தான் ஒதுக்க முடியும்.

இல்லம் தேடிக் கல்வி என்றால் மாணவர்களின் இருப்பிடம் தேடிச் செல்வது என்றுதானே பொருள். ஆனால் நடைமுறையில் இது சாத்தியம் இல்லை. மேலே சொன்ன 16 மாணவர்களையே எடுத்துக் கொண்டாலும், 16 பேரும் கிராமத்தின் ஒவ்வொரு மூலையில் இருப்பார்கள். சிலர் தோட்டத்துச் சாளையில் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவர் வீட்டுக்கும் சென்று கற்பிப்பது சாத்தியமே இல்லை. எனவே, இது நடைமுறைக்கு சாத்தியமான வேறு திசையில் திரும்பியது. அதாவது, தன்னார்வலரின் வீட்டில் அல்லது பள்ளியிலேயே பள்ளி நேரம் முடிந்த பிறகு தனிவகுப்பு நடத்துவது என்று மாறியிருக்கிறது. இதை குறை சொல்லவும் முடியாது. ஆனால் இதிலும் சிக்கல் இருக்கிறது.

காலையில் ஆரம்பித்த பள்ளி பிற்பகல் 4.15க்கு முடிகிறது. இடையில் அவர்களுக்கு கிடைப்பது மதிய உணவு மட்டுமே. அதன் பிறகு இல்லம் தேடிக் கல்வி வகுப்பு துவங்கும் என்றால், தன்னார்வலர் வரும்வரை காத்திருக்க வேண்டும். அவர் வந்து வகுப்பு நடத்தி முடித்து, மாணவர்கள் வீடு திரும்ப 6 மணி ஆகிவிடும்.

காலையில் பள்ளிக்கு வந்ததுமுதல் மாலை 4 மணிவரை அவர்களுக்குக் கிடைப்பது மதிய உணவு மட்டுமே. 4 மணிக்கு மேலே களைத்துப் போயிருப்பவர்களுக்கு பாடங்களில் எப்படி கவனம் போகும்? சரி, மாணவர்கள் வீட்டுக்குப் போய் ஏதேனும் அருந்திவிட்டு வரலாம் என்றால், போனவர்கள் பாதிக்குமேலே வரவே மாட்டார்கள். வருவது சாத்தியமும் இல்லை. பள்ளிக்கு அருகே வசிக்கிற ஓரிருவர் மட்டும்தான் வரக்கூடும். தொலைவாக இருப்பவர்கள் வர முடியாது. ஆகவே, மாலை நேர வகுப்புகளில் மாணவர்கள் முழுவதுமாக இருப்பதில்லை, இருந்தாலும் கவனம் செலுத்துவதும் கடினம். மாலை முழுதும் விளையாட்டு என்பதும் இல்லாமல் போகிறது. காலையிலிருந்து மாலை வரை முழுவதும் படிப்பு எப்படி சாத்தியம்? ஆக, நோக்கமே பெரும்பாலும் அடிபட்டுப் போகிறது.

அடுத்து, கற்பிக்கும் திறனைப் பார்ப்போம். ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஏதோ ஆர்வத்தால் தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்ட பாட விளக்கங்களின் வீடியோக்களைப் பார்த்தேன். அவை திருப்திகரமாக இல்லை. சர்ச்சைக்குரிய விஷயங்கள் நிறைய இருந்தன. ஒலிப்பதிவு, உச்சரிப்பு, வேகம், எடிட்டிங் என எல்லாவற்றிலும் பெரும்பாலும் குறைகள் இருந்தன. எல்லாமே ஆசிரியர்கள் வழங்கியவைதான் (என்று நினைக்கிறேன்). ஆனால் பாடநூல்களை இணையவழியில் பார்த்தேன், வியந்து போனேன். அப்போதுதான் ஒரு பதிவு எழுதி, ருகுனுக்காக 1ஆம் வகுப்புப் புத்தகங்கள் ஒரு செட் அனுப்புமாறு வேண்டினேன். தோழி ஒருவர் அனுப்பி வைத்தார். நேற்று அந்தப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபோது, எங்கள் காலத்தில் ஒன்றாம் வகுப்பில் என்னதான் புத்தகம் இருந்தது என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஏதும் நினைவு வரவில்லை. இப்போதைய ஒன்றாம் வகுப்பில் எத்தனை புத்தகங்கள் தெரியுமா? மூன்று பருவங்கள். ஒவ்வொரு பருவத்துக்கும் தமிழ்/ஆங்கிலம் 1, கணக்கு/ சூழ்நிலையியல் 1. ஆக மொத்தம் ஆறு புத்தகங்கள். எப்பேர்ப்பட்ட ஆசிரியராக இருந்தாலும் அந்தப் பருவங்களுக்குள் இந்த ஆறு புத்தகங்களிலும் உள்ளதை முடிப்பதென்பது சாத்தியமே இல்லை. அதிலும் குறிப்பாக ஓராசிரியர் / ஈராசிரியர் பள்ளிகளில் சொல்லவே வேண்டாம். ஆசிரியர்களுக்கே அப்படி என்றால், புதிதாகக் கற்பிக்க வந்த தன்னார்வலர்கள் – ஏதோ ஓரிருநாட்கள் பயிற்சி மட்டுமே பெற்றவர்கள் – தொடக்கப்பள்ளி மாணவர்களின் உளவியலுக்கு இறங்கி வந்து, அவர்களோடு உறவாடி, விளையாடி, (ஒரு மணி நேரத்துக்குள்) கற்பிக்க வைப்பது என்பது மிகமிக கடினமான பணி.
அடுத்த சிக்கல் – ஆசிரியர்களின் கற்பித்தல் முறைக்கும் தன்னார்வலர்களின் முறைக்கும் இடையே ஏற்படும் முரண். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வேலையே செய்வதில்லை, சம்பளம் மட்டும் லட்சக்கணக்கில் வாங்குகிறார்கள் என்ற வாதத்தையும், அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் பணியை மட்டுமா தருகிறார்கள்... ஊரில் இருக்கிற எல்லா வேலைகளையும் அவர்கள் மீதுதானே சுமத்துகிறார்கள் என்கிற வாதத்தையும் தனியாக ஒதுக்கி வைத்து விடுவோம். என்னதான் இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி பெற்றவருக்குத்தான் குழந்தைகளில் யாருக்கு, எப்படியெல்லாம் கற்றுத் தரலாம் என்று சிந்தித்து செயல்படுத்த முடியும். அவர்தான் நாளில் சுமார் 6 மணி நேரமாவது குழந்தைகளோடு இருப்பவர். அவர் தனக்கென ஒரு முறையை வகுத்துக்கொண்டு கற்பிப்பவராக இருப்பார்.

நான் சென்றிருந்த பள்ளியில் இருந்த ஒன்றாம் வகுப்பு மாணவி தன் ஆசிரியரிடம் கூறியது – எப்ப பாத்தாலும் சும்மா தொணதொணன்னு பேசிட்டே இருக்காதீங்க டீச்சர். சித்த நேரம் வாயை மூடுங்க. இப்படிப்பட்ட மாணவர்களையும் சேர்த்து இழுத்துக் கொண்டுதான் அவர் போக வேண்டும். போர்டில் எழுதுதல், பாடம் நடத்துதல், ஆடல், பாடல், விளையாட்டு, என சகல வித்தைகளையும் பயன்படுத்துவார். மாலையில் இல்லம் தேடிக் கல்விக்கு வருகிற தன்னார்வலரோ, அவருக்கே உரிய புரிதலின்படிதான் நடத்த முடியும். மேலே குறிப்பிட்டதுபோல மிகக் குறைவான நேரத்தில் அவரால் என்ன கற்பிக்க முடியும் என்பது ஒருபுறம் இருக்க, அவருடைய கற்பிப்பு முறை ஆசிரியரின் கற்பிப்பு முறையிலிருந்து வித்தியாசமாக இருக்கும்போது குழந்தைகள் குழம்பிப் போகிறார்கள். அடுத்த நாள் வழக்கமான பள்ளி நேரத்தில் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும்போது, நேற்று அவர் அப்படிச் சொன்னாரே என்று கேட்கிறார்கள் குழந்தைகள். தன்னார்வலர் மோசமாக இருந்தால் ஆசிரியர் கற்பித்ததும் வீணாகி விடுகிறது. ஆசிரியர் மோசமாக இருந்தால் தன்னார்வலர் கற்பித்ததும் வீணாகி விடுகிறது. அடுத்த முக்கியமான விஷயம் – இதற்காக ஒதுக்கப்பட்ட ஆசிரியர்கள். இல்லம் தேடிக் கல்வி என்ற சொற்றொடர் மட்டும்தான் உங்களில் பலருக்கும் தெரியும். உண்மையில் அதில் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் தெரியுமா?

தலைவர்: மாவட்ட ஆட்சியர்

செயலர் : CEO - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்

ஒருங்கமைப்பாளர்

APO : Assistant Project Officer

ADPC: Assistant District Project Co-ordinator

DC : District Co-ordinator

BC: Block Co-ordinator

BRT: Block Resource Training -

CRC: குறுவள மையம் (இப்போது இல்லை)

Lead teachers

Volunteers

CSO : Civil Society Organisations

முதலில் சொன்ன மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாருமே ஆசிரியர்கள்தான். லீடு டீச்சர்ஸ் எனும் வழிகாட்டல் ஆசிரியர்கள், ஒவ்வொரு பிளாக்குக்கும் இரண்டு ஆசிரியர்கள் கோஆர்டினேட்டர்கள, அப்புறம் மாவட்ட அளவிலான கோஆர்டினேட்டர்கள். இவர்கள் எல்லாரும் இல்லம் தேடிக் கல்வியின் பின்னே போய்விடுவதால் வழக்கமான பள்ளிப் பணிகளை கவனிக்க ஆசிரியர்கள் போதாமை. இது தவிர, மாவட்ட அளவில், மாநில அளவில் கூட்டங்கள் நடைபெறும்போது ஆசிரியர்கள் அந்தக் கூட்டங்களில் பங்கேற்க மாவட்டத் தலைநகருக்கோ, சென்னைக்கோ போய்விடுகிறார்கள். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதிலும் மிகக் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகளில் இன்னும் சிக்கல். எந்தப் பள்ளியிலும் பாடத்திட்டத்தை முடிக்க முடிவதில்லை.

மேலே சொன்ன அலுவலர்கள் தவிர, பிளாக் லெவலில் பிடிஓக்களுக்கும் இதில் வேலை. ஆக, இருக்கிற வேலைகளுக்கு மேலே இதையும் சேர்க்கும்போது, ஏதோ ரொம்பவே பரபரப்பாக இயங்குவதாக தோன்றுமே தவிர, எதுவுமே ஒழுங்காக நடக்காது.

இன்னொரு விந்தையான விஷயம், 20 குழந்தைகளுக்கு ஒரு தன்னார்வலர் இருக்க வேண்டும் என்கிற அரசு, 50-60 குழந்தைகளுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே இருப்பது குறித்து கவலையே படவில்லை. பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. வகுப்புக்கு ஓர் ஆசிரியர் என்று கிடையாது.

மற்றொரு கவலைக்குரிய விஷயம் 6-8 வகுப்பில் படிக்கும் வளரிளம் பருவத்தினர் பற்றியது. இது மிகைப்படுத்திய அச்சமாகத் தோன்றலாம். மாலையில் நடக்கும் இல்லம் தேடிக் கல்வி வகுப்புகளுக்கு 1-5 வகுப்புக் குழந்தைகளின் பங்கேற்பு குறைவாக இருக்கும். ஆனால் சற்று வளர்ந்த 6-8 வகுப்பு சிறார்கள் பள்ளி முடித்து வீடு வந்த பிறகு, அலங்கரித்துக் கொண்டு மீண்டும் மாலை நேர வகுப்புக்குச் செல்கிறார்கள். எந்தக் கண்காணிப்பும் இல்லாத தனிவகுப்புகளுக்கு இவ்வாறு வளரிளம் சிறார்கள் செல்வது குறித்து ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

கடைசியாக, இல்லம் தேடிக் கல்வியின் பயன் என்ன என்பதை மதிப்பிட எந்தவொரு ஏற்பாடோ தணிக்கையோ இருப்பதாகத் தெரியவில்லை. பள்ளியில் மாணவர்களின் செயல்பாட்டை மதிப்பிட தேர்வுகள் இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொரு மாணவரின் செயல்பாடுகளையும் – ஓவியம், கட்டுரை, எழுத்து போன்றவற்றை ஆசிரியர்கள் வகுப்புவாரியாக ஒரு கோப்பில் பதிந்து வைக்கிறார்கள். இல்லம் தேடிக் கல்வியில் அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பதற்கான வாய்ப்பும் இல்லை.

இல்லம் தேடிக் கல்வி துவக்கப்பட்டதன் காரணம் கோவிட் பெருந்தொற்றும், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததும். இப்போது பள்ளிகள் திறந்தாயிற்று. இப்போதும் இதன் தேவை இல்லை. இதற்காக சில நூறு கோடிகள் செலவழிப்பது தேவையற்றது. ஆனால் இதற்கு மாற்றாக வேறு ஏற்பாடுகள் செய்வது அவசியமாகிறது. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, கிட்டத்தட்ட எல்லாப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை உண்டு. பல பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகள். பருவத்துக்கான பாடத் திட்டங்களை முடிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்பதுதான் கள நிலவரம். எனவே, பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி உள்ளவர்களை முழுநேர தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம். (விளையாட்டு ஆசிரியர்கள் அப்படி நியமிக்கப்பட்டதுண்டு.) மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தலாம். அதிலும் குறிப்பாக, 6 முதல் 9 வகுப்பு வரை மாவட்ட அளவிலான தேர்வு முறை என்று அரசு அறிவித்திருக்கிறது. 1-5 வரை பள்ளிகளின் அளவில் கேள்வித்தாள்களை உருவாக்கிக் கொள்வார்கள். எனவே, பெரும்பாலும் மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுவார்கள். (யாரையாவது பெயில் என்று சொன்னால், பள்ளிக்கு வருவதையே நிறுத்திவிடும் ஆபத்தும் உண்டு.) ஆக, 1-5இல் சிறப்பான கல்வித்திறன் பெற்றார்களோ இல்லையோ, ஆறாம் வகுப்புக்குப் போய்விடுவார்கள்.

அங்கே போன பிறகு மாவட்ட அளவிலான தேர்வு என வரும்போது தோல்வி அடைய வாய்ப்புகள் அதிகம். எனவே, 1-5 வகுப்புகளில் – அடிப்படை நிலையில் மாணவர்களுக்கு சிறப்பான கல்விக்கான ஏற்பாடு செய்வதே முக்கியம். எலிமென்டரி ஸ்கூல்தானே என்ற அலட்சியம்தான் பெரும்பாலும் நிலவுகிறது. தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லாதிருக்க வேண்டும். இது மிக மிக அவசியம். அதற்கான திசையில்தான் அரசு யோசிக்க வேண்டும்.

மாணவர்களுக்கும் பெருமளவுக்குப் பயன்தராத, ஆசிரியர்களுக்கும் சிரமம் ஏற்படுத்துகிற, ஆசிரியர்களுக்கும் தன்னார்வலர்களுக்கும் முரணை ஏற்படுத்துகிற, நிர்வாக அமைப்பிலும் வேலைப் பளுவை அதிகரிக்கிற, ஆசிரியர் பற்றாக்குறைக்கும் காரணமாக இருக்கிற, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை இன்னும் நீட்டித்துக் கொண்டிருந்தால், அரசுக்கு வேறு ஏதோ திட்டம் இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கும். மாணவர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் பள்ளிகளை மூடிவிட்டு, அவர்களின் விதியை இந்தத் தன்னார்வலர்களின் கையில் ஒப்படைப்பது அத்திட்டத்தின் நோக்கமாக இருக்குமானால், அது மிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews