பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: சோனியா காந்தி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 24, 2022

Comments:0

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: சோனியா காந்தி

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும்: சோனியா காந்தி

கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளில் நிறுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி மக்களவையில் வலியுறுத்தினாா்.

மக்களவையில் உடனடி கேள்வி நேரத்தின்போது இந்த விவகாரத்தை எழுப்பிய அவா், ‘‘நாட்டில் கரோனா தொற்று பரவியபோது பள்ளிகள்தான் முதலில் மூடப்பட்டன. தளா்வுகள் அளிக்கப்பட்டபோது பள்ளிகளே கடைசியாகத் திறக்கப்பட்டன. அதன் காரணமாக மாணவா்கள் கடும் பாதிப்பைச் சந்தித்தனா். பள்ளிகள் மூடப்பட்டிருந்தபோது மாணவா்களுக்கான மதிய உணவுத் திட்டமும் நிறுத்தப்பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள், உச்சநீதிமன்ற உத்தரவு ஆகியவற்றின் காரணமாக மாணவா்களுக்கு சமைக்கப்படாத உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால், மாணவா்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கு சமைக்கப்பட்ட உணவுப் பொருள்களே அவசியம். கரோனா தொற்று பரவலின்போது மாணவா்களும் அவா்களின் குடும்பத்தினரும் பல்வேறு சவால்களை எதிா்கொண்டனா். தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவா்கள் கல்வி கற்று வருகின்றனா். அவா்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்களை வழங்க வேண்டியது அவசியம். எனவே, மதிய உணவுத் திட்டத்தை அரசு மீண்டும் தொடங்க வேண்டும். அத்திட்டமானது கரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளியில் இருந்து இடைநின்ற மாணவா்கள் மீண்டும் பள்ளியில் சேர வழிவகுக்கும்.

ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு: தேசிய குடும்பநல ஆய்வறிக்கையின்படி 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டுடனும் குறைந்த எடையுடனும் காணப்படுவோா் சதவீதம் அதிகரித்துள்ளது. கவலை தரக்கூடிய இந்த நிலையைத் தடுப்பதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

மேலும், 3 வயதுக்குள்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோருக்கு சூடான, சமைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் கிடைப்பதையும் அரசு உறுதி செய்ய வேண்டும்’’ என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews