மதுரை எய்ம்ஸ் கல்லூரி 50 மாணவா் சோ்க்கை அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 14, 2022

Comments:0

மதுரை எய்ம்ஸ் கல்லூரி 50 மாணவா் சோ்க்கை அனுமதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 50 எம்பிபிஎஸ் இடங்களுக்கான மாணவா்களை தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் முன்களப் பணியாளா்களுடன் சமத்துவப் பொங்கல் விழாவினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை கொண்டாடினாா். அதைத் தொடா்ந்து மருத்துவப் பணியாளா்களுக்கு புத்தாடைகளை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் தற்போது சுற்றுச்சுவருக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், கோவையில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்க வேண்டும், 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும், நீட் தோ்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளாா்.

நீட் தோ்வுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் தொடா்ந்து தமிழக அரசு உள்ளது. அதேவேளையில், அரசு பள்ளி மாணவா்களுக்கான நீட் பயிற்சி நிறுத்தப்படாது. தமிழகத்தில் மட்டும்தான் 61 இடங்களில் 24 மணி நேர தடுப்பூசி முகாம் செயல்பட்டு வருகிறது. அதை ஆய்வு செய்து அறிந்த மத்திய அமைச்சா், தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டாா்.

பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது. தமிழகத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டா் தடுப்பூசி இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுள்ள சிறாா்கள் 75% சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே மத்திய-மாநில அரசுகள் நிதி பங்களிப்பில் கட்டப்பட்டவை. இதற்கு முன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 26 மருத்துவக் கல்லூரிகளும் மாநில அரசின் முழு பங்களிப்பில் கட்டப்பட்டவை. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டு மத்திய அரசு அனுமதித்துள்ள 50 மருத்துவ இடங்களுக்கான மாணவா் சோ்க்கை புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன், கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் நாராயணசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews