பள்ளி மேலாண்மைக் குழு ஏன் வேண்டும்? - The Hindu Article - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، نوفمبر 12، 2021

Comments:0

பள்ளி மேலாண்மைக் குழு ஏன் வேண்டும்? - The Hindu Article

அரசுப் பள்ளிகளின் மேன்மையைச் சமூகத்துக்கு உணர்த்துவதற்கு ‘இந்து தமிழ்’ நாளிதழ் முன்னெடுத்த ‘நம் கல்வி நம் உரிமை’ இயக்கத்தின்போது, கவிஞர் வெண்ணிலா தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தது பற்றி எழுதியிருந்தார். அதுதான் எங்கள் இருவரின் ஊசலாட்ட நிலையை மாற்றி, அரசுப் பள்ளியை நோக்கிய தேடலை உந்தித் தள்ளியது.

ஒப்பீட்டளவில் அரசுப் பள்ளிகளில் வாய்ப்பு, வசதிகள் குறைவாக இருந்தாலும், ‘பள்ளி மேலாண்மைக் குழு’ என்ற மந்திரச் சொல்தான் எங்களை நம்பிக்கையோடு அரசுப் பள்ளியை நோக்கி ஈர்த்தது. கல்வி உரிமைச் சட்டம் (RTE), 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. அச்சட்டம் அரசுப் பள்ளிகளையும், அரசு உதவி பெறும் பள்ளிகளையும் நிர்வகிக்கக்கூடிய பொறுப்பைப் பெரும்பான்மையாகப் பெற்றோர்கள் (15 பேர், 4-ல் 3 பங்கு), ஆசிரியர்கள் (2பேர், தலைமை ஆசிரியர் ஒரு ஆசிரியர்), மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர்கள் (2பேர்), கல்வி ஆர்வலர் (1) என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட குழுவிடம் ஒப்படைத்திருக்கிறது. ஒரு பள்ளியை நிர்வகிப்பது தலைமை ஆசிரியர் மட்டுமே என்ற பிம்பம் களையப்பட வேண்டும். ஒரு ஊர் சார்ந்த பள்ளிகளை நிர்வகிக்கும் பொறுப்பு அந்த ஊருக்கு உள்ளது. அதில் பெற்றோர்கள்தான் முதன்மை நிர்வாக அலகு என்பதும் தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் அதில் வழிகாட்டுகிற முக்கியமான ஒரு அங்கம் என்பதும் எல்லோருக்கும் உணர்த்தப்பட வேண்டும்.

இந்தக் குழுவினர், பள்ளியின் தேவைகளை அறிந்து கூட்டாகத் திட்டமிட்டு, சமுதாயப் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி, குழந்தைகளுக்குத் தரமான கல்வி அளிப்பதை உறுதிசெய்வார்கள். மேலும், பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துதல், இடைநின்ற மாணவர்களைப் பள்ளிக்கு மீண்டும் வரவழைப்பதும் பள்ளிக்கூடத்தின் வளங்களைப் பராமரிப்பதும் அடிப்படைக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவதும் குழந்தைகளின் கற்றல் அடைவை மேம்படச் செய்வதும் இவர்களது கடமைகள். இந்தக் குழுவினர் மாதம் ஒரு முறையாவது கூடி, பள்ளிக்குத் தேவையானவற்றை விவாதித்து, தீர்மானங்களாக மாற்றி, பதிவேட்டில் பதிவுசெய்து, பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். அரசு, உள்ளாட்சி அமைப்பு போன்றவற்றின் மூலமாகக் கிடைக்கும் நிதிகளை முறையாகக் கண்காணித்துப் பராமரித்தல், பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரிப்பது ஆகியன இவர்களது பணிகள். முக்கியமாக, கல்வி உரிமைச் சட்டம் 2009 பற்றிய விழிப்புணர்வை, அந்தந்தப் பள்ளிகள் சார்ந்த பகுதிகளின் பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கான தேவைகளைத் தீர்மானமாக நிறைவேற்றி, அந்த வேலைகள் நிறைவேற அதற்கு உதவும் துறைகளுக்குக் கடிதங்கள் அனுப்பியும் அணுகியும் வேண்டியவற்றைப் பெற வேண்டும். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வருடத்தில் நான்கு நாட்கள் நடக்கும் கிராமசபைக் கூட்டங்களில் வைத்துத் தீர்மானமாக நிறைவேற்றலாம். கிராம சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு வலிமை அதிகம். கடந்த 10 ஆண்டுகளில், தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருந்தால் கல்வித் தரத்தில் தமிழ்நாடு மிக உயர்ந்த நிலையை அடைந்திருக்கும். பல பள்ளிகளில் இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்படாமலும், அப்படியே செயல்பட்டாலும் சடங்குத்தனமாக ‘நோட்டை நீட்டினால் கையெழுத்துப் போடும் இயக்கமாக’வும்தான் பொதுவாக இருந்திருக்கிறது. (சிறப்பாகச் செயல்பட்டு, சாதனைகளைப் படைத்த சில குழுக்களும் இருக்கின்றன).

நமது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளைப் பாதுகாத்து, மேம்படுத்த வேண்டும். அதற்கு, தமிழ்நாட்டில் இயங்கும் கல்வி சார்ந்த இயக்கங்களோடு இணைந்து, பள்ளி மேலாண்மைக் குழு என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்த வேண்டும் என்று தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தோம். இந்தச் சூழலில்தான் கரோனா பெருந்தொற்று கல்விச் சூழலில் பெரும் சீர்குலைவை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே வேளை புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசின் முதலமைச்சரில் ஆரம்பித்து, பள்ளிக் கல்வி அமைச்சர், கல்வித் துறை ஆணையர், மாநிலத் திட்ட இயக்குநர் ஆகியோர் பள்ளி மேலாண்மைக் குழுக்களை மேம்படுத்துவதில் ஈடுபாடு காட்டுவது நம்பிக்கை அளிக்கிறது. தற்போது ‘இல்லம் தேடிக் கல்வி’ இயக்கத்தின் மூலமாக, கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களிடமே அதை நிர்வகிக்கக்கூடிய பொறுப்பை அளித்திருப்பது ஒரு நல்வாய்ப்பாகக் கருதுகிறோம். அரசின் கல்வி சார்ந்த திட்டங்கள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் பெறக் கூடிய வலிமையான கரங்களாகப் பெற்றோர்களின் கரங்கள் மாற வேண்டும். தற்போது கரோனா பெருந்தொற்றானது பெற்றோர்கள் பலரின் பொருளாதார நிலையைப் பாதித்திருப்பதால், அவர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்திருக்கிறது. பள்ளியில் ஏற்கெனவே உள்ள மாணவர்களோடு புதிதாக வந்தவர்களையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்கேற்ற வகையில் கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதை அரசு செய்தாக வேண்டும். அதை சாத்தியப்படுத்த பெற்றோர்களின் பள்ளி மேலாண்மைக் குழுதான் மிகப் பெரிய பங்கை ஆற்ற வேண்டும்.

கல்வியை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து (Concurrent List) மாநிலப் பட்டியலுக்கு மீட்டுவரவும், கல்விக்குக் கூடுதல் நிதி ஒதுக்கவும், நீட் தேர்வு போன்ற அநீதிகளைக் களையவும், சமூகநீதி நிலைநாட்டப்படவும், கல்வியில் நடைபெறும் வணிகக் கொள்ளையைத் தடுக்கவும், நமது கல்விமுறையானது கட்டமைப்பிலும் கல்வித் தரத்திலும் உலகத் தரத்தை எட்டவும் பள்ளி மேலாண்மைக் குழுவால் பங்களிப்பு செய்ய முடியும். இது நடக்கும் பட்சத்தில் கல்வியில் தமிழ்நாடு இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டும். - பா.கா.தென்கனல் இசைமொழி; ச.சு.இசைமொழி தென்கனல், பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம். தொடர்புக்கு: rajinisang38690@gmail.com

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة