ஆசிரியர்பணி நியமனங்களில் முறைகேடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 07, 2021

Comments:0

ஆசிரியர்பணி நியமனங்களில் முறைகேடு!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட நியமன முறைகேடு தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் விளையாட்டுப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் கே.அங்கமுத்து. கடந்த 2012 முதல் 2015 வரை பதிவாளராகப் பணியாற்றி வந்த இவர் கடந்த 2017, டிசம்பர் 18 -ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து கடந்த 2018-இல் ஈரோடு, பெருந்துறையைச் சேர்ந்த அவரது மனைவி பி.விஜயலட்சுமி, சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்தார். அதில், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிட நியமனங்களில் முறைகேடு நிகழ்ந்ததாகவும், கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளைத் தொடங்கவும், இணைவு வழங்குவதிலும் முறைகேடு நிகழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தியது. அதில், முன்னாள் துணைவேந்தராக சி.சுவாமிநாதன் இருந்தபோது 2014-2017 வரையிலான கால கட்டங்களில் 154 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அந்தப் பணியிட நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

இதில் எஸ்.லீலா, எஸ்.லட்சுமி மனோகரி, ஜி.புவனலதா, கே.ஏ.ரமேஷ்குமார், கே.முருகேசன், வெங்கடாசலம், ஆர்.வெங்கடேஸ்வரன், செல்வ விநாயகம், ஜி.வெங்கடேசன், பி.கார்த்திகேயன் ஆகியோரின் நியமனங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் அப்போதைய துணைவேந்தர் சி.சுவாமிநாதன், பதிவாளர் கே.அங்கமுத்து ஆகியோர் ஆதாயத்தின் பேரில் தகுதியில்லாதவர்களை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) விதிகளை மீறி பணி நியமனம் செய்திருப்பதும், 46 ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பான தேர்வுக் குழுவின் பதிவேடு மாயமானதும், தகுதியில்லாதவர்கள், தகுதியுடையவராக பணி நியமனம் பெற்றதும், கல்வித் தகுதி குறியீடு (ஏ.பி.ஐ.) முறையாகப் பின்பற்றாமல் இருப்பதும் தெரியவந்தது. அத்துடன் 2015-16, 2016-17 ஆகிய நிதி தணிக்கை அறிக்கையில் 47 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக முன்னாள் துணைவேந்தர் சி.சுவாமிநாதன், தற்கொலை செய்து கொண்ட கே.அங்கமுத்து ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் முறைகேடு

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் விதிகளை மீறி தனியார் நிறுவனத்தின் மூலம் தேர்வு முடிவுகளை வெளியிட ரூ. 3.26 கோடி செலவிட்டு முறைகேடு செய்தது தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் சி.சுவாமிநாதன், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.லீலா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2015-16, 2016-17, 2017-18 ஆம் ஆண்டுகளில் பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகள், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரூ. 10 லட்சம் வரை மட்டுமே நிதியை கையாள்வதற்கு அதிகாரம் உள்ளது. ஆனால் ஒரு விடைத்தாள் திருத்தம் செய்ய ரூ. 3 முதல் ரூ. 5.25 வரை கணக்கிட்டு, உயர்கல்வி நிதிக்குழு ஒப்புதல் ஏதும் பெறாமல் ரூ. 3.26 கோடி தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.இதில் துணைவேந்தரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும் இணைந்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதேபோல, உரிய கட்டமைப்பு வசதி இல்லாத 5 கல்லூரிகளில் பல்கலைக்கழக இணைவு அனுமதி வழங்கி துணைவேந்தரும், பதிவாளரும் முறைகேடு செய்தது தெரியவந்தது. மேலும், போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாத மூன்று கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கவும், இணைவு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் சி.சுவாமிநாதன், முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.லீலா ஆகிய இரண்டு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews