ஆப்கனில் பெண் கல்வி மறுக்கப்பட வாய்ப்பு: யுனெஸ்கோ கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 11، 2021

Comments:0

ஆப்கனில் பெண் கல்வி மறுக்கப்பட வாய்ப்பு: யுனெஸ்கோ கவலை

"ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு பெண்கள் கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) கவலை தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க படைகள் அந்நநாட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்ததன் மூலம், அங்குள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விகிதம் 10 மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெண்களின் கல்விஅறிவு விகிதம் 2 மடங்காக உயர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

2001-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஒரு பெண் குழந்தைகூட சேர்க்கப்படாத நிலையில், 2018-இல் தொடக்கப் பள்ளிகளில் 25 லட்சம் பெண் குழந்தைகள் படித்தனர். அதன் மூலம் ஆரம்பப் பள்ளி மாணவர்களில் 40 சதவீதம் பெண் குழந்தைகள் என்ற நிலை அங்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், நாட்டை கைப்பற்றிய தலிபான்கள், அங்கு புதிய அரசை அமைத்துள்ளனர். நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் அவர்கள், கல்வி நிறுவனங்களிலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளனர். வகுப்புகளில் மாணவர்கள், மாணவியரை தனித் தனியாக பிரித்து இரு தரப்பினருக்கும் இடையே திரையிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு கல்வி நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும், பெண்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் யுனெஸ்கோ அச்சம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இருபாலர் கல்வி, பெண்களுக்கு ஆண் ஆசிரியர்கள் கற்பிப்பது ஆகியவற்றுக்கு தடை விதிக்க வாய்ப்பு உள்ளதால், உயர் கல்வியில் பெண்கள் சேர்வது மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யுனெஸ்கோ தலைவர் ஆட்ரிர அஸþலே கூறுகையில், "கல்வி பெறும் வாய்ப்பை பாதுகாப்பதுதான் ஆப்கானிஸ்தானின் மிக முக்கியத் தேவை' என்றார். இதற்கிடையே, "பெண்கள் மற்றும் மாணவிகள் இஸ்லாமிய சட்டங்களுக்கு உள்பட்டு வேலைக்கும் பள்ளிக்கும் செல்லலாம்' என்று தலிபான் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த 18 வயது மாணவி சக்லி பரன் கடந்த மாதம் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இப்போதைக்கு அச்சமில்லை என்றபோதும், எனது எதிர்காலம் குறித்த கவலை உள்ளது. மேற்படிப்புக்கு தலிபான்கள் அனுமதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது' என்றார் என்பது குறிப்பிடத்தக்கது."

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة