85 சதவீத கட்டணத்தை ஆறு தவணைகளில் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 12, 2021

Comments:0

85 சதவீத கட்டணத்தை ஆறு தவணைகளில் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அனுமதி: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகள், தங்கள் மாணவர்களிடம் 85 சதவீத கட்டணம் வசூலித்துக் கொள்ளத் தடையில்லை என பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, வழக்குத் தொடர்ந்த தனியார் சுயநிதி பள்ளி நிர்வாகத்தினர், தங்கள் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளை நடத்தி வந்தால், 2019- 2020-ஆம் கல்வியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தில் 85 சதவீதத்தை வசூலிக்கலாம். இதை ஆறு தவணைகளாக அடுத்த ஆண்டு பிப்.1 வரை வசூலிக்கலாம். பொது முடக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாதவர்களிடம் மட்டுமே வசூலிக்க வேண்டும். வருவாய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், பள்ளியில் கடிதம் கொடுத்தால், கல்விக் கட்டணத்தை 75 சதவீதமாக குறைத்து வசூலிக்க வேண்டும்.

கட்டணம் செலுத்த முடியாதவர்கள் சலுகை கேட்டு மனு அளித்தால், பள்ளிகள் கருணை உள்ளத்துடன் பரிசீலிக்க வேண்டும். கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டண நிலுவையையும் வசூலிக்கலாம். ஏற்கனவே முழு கட்டணத்தையும் செலுத்தியிருந்தால், திரும்பப் பெற முடியாது. கட்டண பிரச்னையால் மாணவர்களை இணையவழி மற்றும் நேரடி வகுப்புகளில் அனுமதிக்க மறுத்தால், அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, தாங்கள் விரும்பும் கட்டணச் சலுகையை பள்ளிகள் வழங்கலாம். பள்ளி, பெற்றோர் இடையே கட்டண பிரச்னை ஏற்பட்டால், மாவட்டக் கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கலாம். அவர், ஒரு மாதத்துக்குள் விசாரித்து முடிவெடுக்க வேண்டும்.

மாணவர்களை வெளியேற்றக் கூடாது: எந்த மாணவரையும், பள்ளியில் இருந்து வெளியேற்றுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. பிரச்னை தொடர்ந்து, மாணவர்கள் அதிகாரிகளை அணுகினால், அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உதவி செய்யப்படும். இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டத்தில், தனியார் பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால், அவற்றில் கட்டணமின்றி, மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு பள்ளியில் இருந்து, வேறு பள்ளிக்கு மாற விரும்பும் மாணவர்களிடம், சேர்க்கை வழங்கும் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் கேட்டு கட்டாயப்படுத்த கூடாது.

தாங்கள் படிக்கும் பள்ளிகளுக்கு, மாணவர்கள் தகவல் மட்டும் அளித்தால் போதும். இந்த வழிகாட்டுதலை சரியாகப் பின்பற்றுமாறு, முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்கள், பள்ளிகளுக்கு அறிவுறுத்தி கண்காணிக்க வேண்டும். விதிகளை மீறும் அலுவலர்கள் மற்றும் பள்ளிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் .

சிபிஎஸ்இ பள்ளிகள்...

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பள்ளிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகள் தங்கள் இணையதளங்களில், நான்கு வாரங்களுக்குள் வெளியிட வேண்டும். கட்டணம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டால், பள்ளி கல்வித்துறையின் கல்வி கட்டண குழுவிடம் புகார் அளிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews