ரயில்வே கோட்டத் தேர்வுகளை (RRB) ஒத்திவைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 22, 2021

Comments:0

ரயில்வே கோட்டத் தேர்வுகளை (RRB) ஒத்திவைக்க வேண்டும் – வைகோ வலியுறுத்தல்!

ரயில்வே பணிகளுக்கு தேர்வு ஜூலை 23 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறும் என திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ரயில்வே பணிகள்:

இந்திய ரயில்வே 18 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தெற்கு ரயில்வே சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, மதுரை என 6 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. ரயில்வே துறையில் சிவில் இன்ஜினியர், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், கமர்சியல், ட்ராபிக் ஆப்ரேட்டிங், பாதுகாப்பு பணி உள்ளிட்ட பிரிவுகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2003 ஆம் ஆண்டு வரை ரயில்வே பணிகள் சில மண்டலங்களில் மட்டுமே நடைபெற்றது. அதன் பின்னர் கோட்டங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உரிமை வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இரு அவைகளையும் முடக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து மதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ரயில்வே பணிகளுக்கான தேர்வுகள் ஜூலை 23 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாக திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது, அதில் தமிழகத்தின் மதுரை கோட்டமும் உள்ளது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம், திருச்சூர்,திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் மதுரை கோட்டத்தில் ஒரு மையம் கூட இல்லை. இதனால் தமிழக தேர்வர்கள் தேர்வு எழுத ஒரு வாரம் விடுதிகளில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் கடுமையாக உள்ளது. இது தமிழக இளைஞர்களுக்கான வாய்ப்புகளை மறுப்பதாக இருக்கின்றது. ரயில்வே அதிகாரிகளின் இத்தகைய போக்கிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதுடன், தாங்கள் இந்த பிரச்சினையில் தலையிட்டு அந்த கோட்டத்தில் உள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல் கட்டமாக நாளை தொடங்க இருக்கின்ற இந்த தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா விதிகளை பின்பற்றி தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews