லியோனி நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

லியோனி நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக லியோனி நியமனம் செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்துகொண்டு அவனிடம் அந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு முற்றிலும் முரணான வகையில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. பள்ளி மாணவ, மாணவியருக்கு தரமான புத்தகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதும், தரத்தை தொடர்ந்து மேம்படுத்துவதும் தான் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் முக்கிய நோக்கமாகும். அதாவது, ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், மேல்நிலை வகுப்பிற்கான தொழிற்கல்விப் பாடப் புத்தங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப் புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து, அவற்றை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு மிகக் குறைந்த விலையிலும் வழங்கி வரும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தால் தயாரித்து வழங்கப்படும் பாடப் புத்தகங்கள் மூலம் உலக அளவில், இந்திய அளவில் நடைபெற்ற நிகழ்வுகளையும், புரட்சிகளையும், அறிவியல் கண்டுபிடிப்புகளையும், இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், விடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு இந்தியத் திருநாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், தமிழ்நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு ஆகியவற்றிற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் மாணவ, மாணவியர் தெரிந்துகொள்கின்றனர்.

தமிழக மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில், வரலாறு, அரசியல், பொது அறிவு, சமூகவியல், அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடப்புத்தகங்களில் தரமான பாடங்களை வடிவமைக்கின்ற, தமிழர் பண்பாடு மற்றும் நாகரிகத்தை எடுத்துரைக்கின்ற பணியை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனியை நியமித்து இருப்பது இந்தக் கழகத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துள்ளது. இதன்மூலம், இந்தக் கழகத்தின் தரம் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாகப் பேசுவதையும், அரசியல் கட்சித் தலைவர்களை நாகூசும் வகையில் வசைபாடுவதையும், நாகரிகமற்ற கருத்துகளை மக்கள் மனங்களில், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி. நகைச்சுவை என்ற பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களை அருவருப்பான முறையில் விமர்சிக்கக்கூடியவர் லியோனி. இவரை இந்தப் பதவியில் நியமிப்பதன் மூலம் தவறான கருத்துகள் மாணவ, மாணவிகளிடம் எடுத்துச் சொல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப்படும்.

எனவே, தமிழகத்தின் எதிர்காலத் தூண்களாகிய மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, நல்ல கருத்துகள் மாணவ, மாணவிகளைச் சென்றடைய வேண்டும் என்பதன் அடிப்படையில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், பெண்களை மதிக்கின்ற ஒருவரைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்" என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews