பழங்குடி மாணவர்களுக்குத் தனிச் செயலி வழியாக ஆன்லைன் கல்வி: மத்திய அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 24, 2021

Comments:0

பழங்குடி மாணவர்களுக்குத் தனிச் செயலி வழியாக ஆன்லைன் கல்வி: மத்திய அரசு

பழங்குடியின மாணவர்களுக்குத் தனிச் செயலி வழியாக ஆன்லைன் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓவியா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''தமிழகத்தில் 225 பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. கரோனா பரவல் காரணமாக விடுதிகள் மூடப்பட்டதால் பழங்குடியின மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கப் போதுமான வசதிகள், அவர்கள் வசிப்பிடங்களில் இல்லாததால் அவர்களின் எதிர்காலக் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பழங்குடியினர் மாணவர்கள் ஆன்லைன் கல்வி கற்கப் போதுமான வசதிகளை ஏற்படுத்தவும், கரோனா தொற்றுக்கு ஆளாகும் பழங்குடியினரைத் தனிமைப்படுத்த வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் கரோனா சிகிச்சை நிலையம் அமைக்கவும் உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ''இந்தியா முழுவதும் 52,367 பழங்குடியின மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்க "ஏகலைவா" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் 15,083 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மீதமுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பழங்குடியின மாணவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் மத்திய அரசுக் கட்டுப்பாட்டில் 6 பழங்குடியினப் பள்ளிகள் செயல்படுகின்றன'' எனக் கூறப்பட்டிருந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வாதிடுகையில், ''பழங்குடியினர் பலர் வனப்பகுதியில் வசிப்பதால் வனப்பகுதியில் தேவையான இணையதள வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்'' எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ''வனப்பகுதிகளில் இணையதள வசதியை ஏற்படுத்தினால் வனவிலங்குகள் கடத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழங்குடியின மாணவர்களுக்குச் சத்தான உணவு வழங்குவது, கரோனா சிகிச்சை மையம் அமைப்பது, வனப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி கற்பித்தலுக்கான வசதி ஏற்படுத்துதல் தொடர்பாகத் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews