தேசிய கல்விக் கொள்கை குறித்த சில கட்டுக்கதைகளும், தவறான கருத்துகளும்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 08, 2021

Comments:0

தேசிய கல்விக் கொள்கை குறித்த சில கட்டுக்கதைகளும், தவறான கருத்துகளும்: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி விளக்கம்

நாட்டின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே புதிய தேசிய கல்விக்கொள்கை (NEP) உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றில் உண்மையில்லை. தமிழக அரசு மாநிலத்தின் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்களைச் செய்து இந்த தேசிய கல்விக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்றுஅண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறிய தாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது கல்விதான். பல மொழிகள், பல கலாச்சாரங்கள், மாநிலங்கள் அளவில்ஏற்றத் தாழ்வுகள் கொண்ட இந்தியாவைபோன்ற தேசத்துக்கு தேவையான, வலுவான இலக்குகளை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த கல்வி குறித்த ஒரு தேசிய கொள்கை இன்றியமையாதது.

தொலைநோக்கு சீர்திருத்தங்கள்
உலக அளவிலான மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 130-வது இடத்தில் இருக்கிறது. எனவே இந்தியாவின்கல்விக் முறையை மாற்றியமைப்பதற்காக புதிய தேசிய கல்விக் கொள்கை (NEP) சரியான தருணத்தில் கொண்டுவருவது அவசியமாகும்.
புதிய கல்விக் கொள்கை தொடக்கக்கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்துநிலைகளிலும் தொலைநோக்கு சீர்திருத்தங்களைக் கொண்டுள்ளது. மாநிலங்களே தங்களின் தேவைகளுக்கு ஏற்ப சில பரிந்துரைகளை வடிவமைத்துப் பயன்படுத்திக் கொள்வதற்கு முழுச் சுதந்திரமும் நெகிழ்வுத் தன்மையும் இதில் உள்ளது. எந்த மொழியும் திணிக்கப்படாது
ஆனால், இப்புதிய கல்விக் கொள்கைகுறித்த சில கட்டுக் கதைகளும் தவறான கருத்துகளும் நிலவுகின்றன. அதாவது, தமிழக மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், எந்த மாநிலத்திலும் எந்த மொழியும் திணிக்கப்பட மாட்டாது என தெளிவாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல, மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையாக இருக்கும்என்று கூறப்படுகிறது. மும்மொழித் திட்டம் என்பது பள்ளிகளில் 2 இந்திய மொழிகளுடன் ஒரு வெளிநாட்டு மொழியைக் கற்க வாய்ப்பு அளிப்பதாகும். எந்த 3 மொழிகளை கற்பிக்க வேண்டும் என்று அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்கள் வடிகட்டப்படுவர் என்றதவறான கருத்து நிலவுகிறது. மாணவர்களின் கற்றல் திறனை மதிப்பிடுவதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடங்களே அந்தத் தேர்வுகளை நடத்த வேண்டுமேயன்றி, மேல் வகுப்புக்கு மாணவர்கள் செல்வதைத் தடுப்பதற்காக அல்ல என்று தேசிய கல்விக் கொள்கை தெளிவாக கூறுகிறது.
அடுத்ததாக, மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்ததும் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை உருவாக்கித் தருவதற்காக தொழிற்கல்வி வழங்க இதில் வழிசெய்யப்பட்டுள்ளது. இது ‘குலக் கல்வி’ முறையை மீண்டும் ஏற்படுத்தும் என கருதுவதும் தவறானது. சமூக நீதிக்கு பாதிப்பு இல்லை
மேலும் இது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரானது அல்ல. அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு இதில் கிடைப்பதால் சமூக நீதிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இட ஒதுக்கீடு குறித்து இப்புதிய கல்விக் கொள்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே இது தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதையே உணர்த்துகிறது.
கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான வழிகாட்டுதல்கள், பொறுப்பு நடவடிக்கைகள் இப்புதிய தேசிய கல்விக் கொள்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளன. கல்வி பொதுப் பட்டியலில் இருக்கும் நிலையில், இப்புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த விரும்பாத மாநிலங்கள் தங்களின் உயர்கல்விநிறுவனங்களை நிர்வகிப்பதில் சிலஇடையூறுகளைச் சந்திக்க நேரிடும்.பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் குழு, இந்திய மருத்துவக் கவுன்சில் போன்ற தேசிய அளவிலான கல்வித் தரக் குழுமங்களுடன் இணங்கிச் செயல்படுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரும்.
பல்வேறு கல்வி மேம்பாட்டு மத்திய ஒழுங்காற்றுஅமைப்புகளிடமிருந்தும் மத்திய அரசின்துறைகளிடமிருந்தும் நிதியுதவி பெறுவதில் இடையூறுகளை எதிர்கொள்ள வும் நேரிடும்.
எனவே, எதிர்கால இந்தியக் கல்வி குறித்து இதுவரை வரையப்படாத, விரிவான, தீவிர மாற்றத்துக்கான, நுட்ப அறிவுள்ள இந்த தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு, மாநிலத்தின் தேவைகள், விருப்பங்களுக்கு ஏற்ற மாற்றங்களுடன், நிச்சயமாக மிகவும் சிறப்பாகச் செயல்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறோம்.
இவ்வாறு பாலகுருசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews