+2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 02, 2021

2 Comments

+2 பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள்!

+2 பொதுத் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான், கல்லூரிகளில் உயர் கல்விக்கான சேர்க்கை நடைபெறுவது வழக்கம் என்பதால், 2020-21 ஆம் கல்வி ஆண்டில், +2 பொதுத் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும்.
அப்போது தான் திறமை உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில், தரமான கல்லூரியில், விரும்பிய பாடப்பிரிவு கிடைக்கும்.
பொதுத் தேர்வு நடைபெறா விட்டால், கல்லூரி சேர்க்கையில் சிக்கலை ஏற்படுத்தி விடும்.
பல கல்லூரி நிர்வாகங்கள் முக்கிய பாடங்களுக்கான சேர்க்கைக்கு இலட்சக் கணக்கில் நன்கொடை வசூலிக்கும் நிலையை ஏற்படுத்தி விடும். இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
மேலும், ஒவ்வொரு தனிப்பட்ட கல்லூரியும் தனித்தனி நுழைவுத் தேர்வு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
சில கல்லூரி நிர்வாகங்கள், வினாக்களை மிகக் கடினமாக அமைத்து, இதன் மூலம் நன்கொடை வசூல் வேட்டைக்கு வித்திடும் வாய்ப்பு ஏற்படும்.
இது மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் அதிக செலவினம் மற்றும் மன உளைச்சலையும், தேவையற்ற அலைச்சலையும் உருவாக்கும். பள்ளி அளவில் நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கினால், ஒரு சில தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக மதிப்பெண்கள் வழங்கக் கூடிய அபாயமும் உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், +2 பொதுத் தேர்வின்றி தேர்ச்சி அளிப்பதால், பிற்காலத்தில் மாணவர்களின் வேலை வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்தும் நிலையும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து கொண்டு வருகிறது.
ஜூலை முதல் வாரத்தில் கிட்டத்தட்ட தொற்று மிக மிக குறைவான நிலைக்கு வந்து விடும்.
ஆகவே ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை, மொழிப் பாடங்களைத் தவிர்த்து, இதர முக்கிய 4 பாடங்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தலாம்.
மொழிப் பாடங்களுக்கு மட்டும், பள்ளி அளவிலேயே மதிப்பெண்களை வழங்க அனுமதிக்கலாம்.
அல்லது
மொழிப் பாடங்கள் இரண்டையும் சேர்த்து தமிழ் 50 மதிப்பெண்கள் + ஆங்கிலம் 50 மதிப்பெண்கள், ஆக மொத்தம் 100 மதிப்பெண்கள் என ஒரே நாளில் (தமிழ் 1 மணி நேரம் + ஆங்கிலம் 1 மணி நேரம் = மொத்தம் 2 மணி நேரம்) தேர்வு நடத்தலாம்.
இரண்டு மொழிப் பாடங்களுக்கும் சேர்த்து 100 மதிப்பெண்கள், இதர பாடங்கள் 400 மதிப்பெண்கள்.
ஆக மொத்தம் 500 மதிப்பெண்கள் என கணக்கிடலாம்.
தேர்வு எழுதும் மாணவர்கள்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்கலாம்: +2 படிக்கும் ஒரு மாணவர், தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் எந்த மேல்நிலை அல்லது மெட்ரிக் பள்ளியில் படித்தாலும், பிளஸ் டூ பொதுத் தேர்வினை, மாணவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள மெட்ரிக் / CBSE / மேல்நிலை / உயர்நிலை / நடுநிலைப் பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கும் வகையில், தேர்வு மையங்கள் அதிகரிக்கப் பட வேண்டும்.
இடம் தேவைப்பட்டால் அருகில் உள்ள கல்லூரிகளையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
ஏனென்றால், கொரோனா பாதிப்பால் சிலர் ஊர் விட்டு ஊர் புலம் பெயர்ந்து இருக்கலாம்.
பெற்றோரை இழந்து, சொந்த ஊர் சென்றிருக்கலாம்.
ஒரு சில பள்ளிகளில் +2 வகுப்பில் மட்டும் 1000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயிலக் கூடும். இதனால் தேர்வு நேரத்தில் இங்கு கொரோனா பரவும் அபாயமும் உண்டு. தனி மனித இடைவெளியும் இங்கு கடைபிடிக்க முடியாது.
ஆகவே, தன் வீட்டருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, தேர்வு கூட அனுமதி சீட்டு / பள்ளி அடையாள அட்டை / ஆதார் கார்டு ஆகிய மூன்று ஆவணங்களையும் பயன் படுத்தி தேர்வு எழுத அனுமதிக்கலாம்.
தான் பயின்ற பள்ளியில் தேர்வு எழுதாமல், வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தேர்வு எழுத, அப்பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் மூலம், முறைப்படி விண்ணப்பிக்க உரிய வழிவகைகளை ஏற்பாடு செய்து, வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகே, நடந்து செல்லும் தூரத்தில் அல்லது இரு சக்கர வாகனம் அல்லது மிதி வண்டியில் செல்லும் தூரத்தில் உள்ள பள்ளியில் சென்று தேர்வு எழுதுவதாலும், பொதுப் போக்குவரத்தை பயன் படுத்தத் தேவையில்லை என்பதாலும், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை.
முடிந்த வரை உண்டு உறைவிடப் பள்ளிகளில் தங்கி, தேர்வு எழுதுவதை தவிர்ப்பது நல்லது.
ஒரு தேர்வறைக்கு 10 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட வேண்டும்.
மாணவர்கள் படிக்க தேவையான கால அவகாசம் வழங்கும் வகையில், வாரம் ஒரு தேர்வு தான் வைக்கப் பட வேண்டும்.
எழுத்துத் தேர்வுக்கான 70 மதிப்பெண்களில், 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள் புறவய வினாக்களாக இருக்க வேண்டும்.

(Multiple Choice).
அடுத்த 30 மதிப்பெண்களுக்கான விடைகள் சிறு வினாக்களாகவும் (15 x 2 = 30), மீதமுள்ள 20 மதிப்பெண்கள் விரிவான விடை எழுதும் வகையிலும் (4 x 5 = 20) வடிவமைக்கப் பட வேண்டும்.
தேர்வு நேரம் காலை 10.00 மணி முதல் மதியம் 12.15 மணி வரை மட்டுமே நடத்தப் பட வேண்டும். இதில் 10.00 மணி முதல் 10.15 வரை வினாக்களை படிக்க நேரம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
+2 பொதுத் தேர்வுக்காக, முக்கிய 4 பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் / கணினி அறிவியல் பாடங்களில், ஒவ்வொரு பாடத்திற்கும் (Subject க்கும் - Not Lesson) தலா 10 வினா வங்கிகள் தயார் செய்து உடனடியாக மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். +2 பொதுத் தேர்வில் இந்த வினா வங்கியிலிருந்து மட்டும், 80% வினாக்கள் கேட்கப் பட வேண்டும்.
மீதமுள்ள 20 % வினாக்கள் பாடப்புத்தகத்தில், பாடங்களின் இறுதியில் உள்ள பயிற்சிகளிலிருந்து கேட்கப் பட வேண்டும்.
இதில் 10% சற்று கடினமாகவும், மீதமுள்ள 10% சற்று கூடுதல் கடினமாகவும் கேட்கலாம்.
+2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, கல்வித் தொலைக்காட்சியில் பாடங்களை அதிக நேரங்களை ஒளி பரப்ப வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் மூலம், ஐயப்பாடுகளை தொலைபேசி மூலம் தீர்க்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இது பெருந்தொற்று மற்றும் அசாதாரண சூழல் காலம் என்பதால், மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம் தரும் வகையில், பாடங்களின் உள்ளிருந்து (பயிற்சி வினாக்களைத் தவிர) எவ்வித கேள்வியும் இடம் பெறக் கூடாது.
மாணவர் எந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினாலும், பார் கோடு இருப்பதால் மதிப்பீடு செய்தவுடன் சரியாக டேட்டா சென்டருக்கு மதிப்பெண் சென்று விடும். தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை, பட்டதாரி, கலை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களை பயன் படுத்த வேண்டும்.
தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும், முன்னுரிமை அடிப்படையில் ஜூன் 15 ஆம் தேதிக்குள் தடுப்பூசி போடப்பட வேண்டும்.
45 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தேர்வுப் பணி வழங்கும் போது, அவர்கள் குடியிருக்கும் கல்வி மாவட்டத்திலேயே தேர்வுப் பணியை வழங்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு +2 பொதுத் தேர்வை திட்டமிட்டு நடத்தினால், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனாத் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து, தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்கலாம்.
மிக்க நன்றி!

2 comments:

  1. It's much better to cancel public examination of 12th students. In this pandemic situation, the examination can cause lose of many lives and also increases the covid19 position in Tamilnadu. So I'll kindly suggest that cancellation of public examination is a great way of saving students from stress and also from covid19. So consider this as my request. Let me believe that government of Tamilnadu will take a right decision and cancel❌ examination and do some justice for the 12th students.

    JAI HIND

    ReplyDelete
  2. It's not possible in Tamil Nadu
    Corona cases lesser only in August and September. This is too much delay of +2 students. Exams cancel only the good way now.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews