2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 15ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் - - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 05, 2021

Comments:0

2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 15ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் -

2000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் 15ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும்..
11ம் தேதி முதல் 14ம் தேதி வரை டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் வகையில், வாழ்வாதாரம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கிட, பொது விநியோகத் திட்டத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்க ஆணையிட்டு, அதில் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் கடந்த மே மாதம் வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கவும், 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருட்கள் தொகுப்பினை பொது விநியோகத் திட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 அன்று இத்திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்கள்,
இதுமட்டுமன்றி, பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் அனைத்துப் பொருட்களையும் கொள்முதல் செய்யும் முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென்பதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கொள்முதல் செய்யும் நெறிமுறைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இதனால், முதல் மாத கொள்முதலிலேயே அரசுக்கு 80 கோடி ரூபாய் வரையில் சேமிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான வழக்குகளின் காரணமாக, பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களின் வழக்கமான விநியோகம் ஒரு வார காலம் தாமதமாக தொடங்கிட நேரிட்டு, ஜூன் 10 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. எனவே, 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்களின் தொகுப்பினை வழங்குவதற்கான டோக்கன்கள் 11-6-2021 முதல் 14-6-2021 வரை நியாய விலைக் கடைகள்மூலம் வழங்கப்படும். இந்த டோக்கன்களின் அடிப்படையில், 2 ஆயிரம் ரூபாய் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை 15-6-2021 முதல் தொடர்புடைய நியாய விலைக் கடைகளில் காலை 8-00 மணி முதல் நண்பகல் 12-00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். குடும்ப அட்டைதாரர்கள் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பினையும், கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணையான 2 ஆயிரம் ரூபாயினையும், ஒரே நேரத்தில் பெற்றுச் செல்லும் வகையில், மளிகைப் பொருள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகை ஒன்றாகவே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.
முன்னர் வழங்கப்பட்ட நலத் திட்ட உதவிகள் பெறும்போது எழுந்த தனி மனித இடைவெளி சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, 75 முதல் 200 வரையிலான பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை மற்றும் உள்ளூர் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் குறைகளுக்கு இடமளிக்காமல், இவ்விரு நலத் திட்ட உதவிகளை உரிய முன்னறிவிப்புடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் எவ்வித விடுதலுமின்றி, இரண்டாம் தவணைத் தொகை 2 ஆயிரம் ரூபாய் மற்றும் 14 பொருட்கள் அடங்கிய மளிகைப் பொருள் தொகுப்பு வழங்கப்படும் என்பதால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில், தொடர்புடைய நியாய விலைக் கடையிலிருந்து எவ்வித சிரமமுமின்றி பெற்றுச் செல்லலாம். அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதால், குறித்த நாள் மற்றும் நேரத்தில் பெற இயலாதவர்கள், வருகின்ற மாதத்தில் அவர்களுக்கான மளிகைப் பொருட்கள் தொகுப்பு மற்றும் நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், கொரோனா நோய்ப் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்தும், அதாவது, தனி நபர் இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதுடன், சமூகத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் வகையில் செயல்பட்டு, இரண்டாம் தவணைத் தொகையான 2 ஆயிரம் ரூபாயையும், 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினையும் பெற்றுச் செல்ல அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews