மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் - செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு எண்:274 - நாள்: 15.06.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، يونيو 15، 2021

Comments:0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டம் - செய்தி வெளியீடு - செய்தி வெளியீடு எண்:274 - நாள்: 15.06.2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (15.6.2021) தலைமைச் செயலகத்தில், புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். அரசு சார்பாக மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி உள்ளதையும், படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளதையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்துக் கூறினார்கள். மேலும், ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி உள்ளதையும், ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாத நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளதையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் சுட்டிக்காட்டினார்கள்.

மேலும், கல்வியில் வேலைவாய்ப்பில் சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்தார்கள்.

வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு!

மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி! குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்! எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!

உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்! அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
ஆகிய 7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று தெரிவித்தார்கள்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும் என்றும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாக - தரமானதாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும். நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காலிப் பணியிடங்களைத் தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். மாநில அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இணைந்து பணியாற்றி சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.

தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா. இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் திரு. பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة