மாணவர்களுக்கு கோடை வகுப்புகள், முகாம்கள் நடத்த அனுமதியில்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 18, 2021

Comments:0

மாணவர்களுக்கு கோடை வகுப்புகள், முகாம்கள் நடத்த அனுமதியில்லை

மாணவர்களுக்கு கோடை காலத்தில் நடத்தும் முகாம்கள், வகுப்புகள் பாதுகாப்பானவை அல்ல என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த வகுப்புகள், முகாம்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 24 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இந்த ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்தது. சுமார் 8 மாதங்கள் கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் ஏற்பட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. இதையடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மக்கள் ஓரளவு சகஜ நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், தற்போது கொரோனாவின் 2வது அலை தாக்குதல் தொடங்கி நாடு முழுவதும் தினமும் 1 லட்சத்திற்கும் மேல் பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினமும் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. தேர்வுகளும் பெரும்பாலும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்கள் மத்தியில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாகவே இருந்தது. இதனால், பள்ளிகளை படிப்படியாக திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, பல தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேவைப்பட்டால் வகுப்புகளை எடுக்க அரசு உத்தரவிட்டது. மற்ற அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதி தேர்வுகள் நடைபெறும் நிலையில், கோடை விடுமுறையில் நடைபெறும் முகாம்கள், வகுப்புகளுக்கு சில அமைப்புகள் தயாராகி வருகின்றன. 4 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவர்களுக்கு நீச்சல், யோகா போன்ற பயிற்சிகளை இந்த அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், தாம்பரத்தை சேர்ந்த கோடை முகாம் நடத்தும் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறும்போது, 4 முதல் 14 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு உடல் ஆரோக்கியத்திற்காக இந்த கோடை முகாம் நடத்தப்படுகிறது. தினமும் 2 மணி நேரம் மட்டுமே நடத்தப்படும் இந்த முகாம்களை கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றியே நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். மற்றொரு அமைப்பை சேர்ந்த முகாம் பயிற்சியாளர் கூறும்போது, இந்த ஆண்டு கோடை வகுப்புகளை நடத்தலாமா, கூடாதா என்பது குறித்து எந்த நிலையான அறிவிப்பும் வரவில்லை. அரசுதான் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றார். இதற்கிடையே, இந்த ஆண்டு கோடை முகாம்கள் மற்றும் வகுப்புகளை நடத்துவது பாதுகாப்பானதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கோடை முகாம்கள், வகுப்புகளை நடத்த அனுமதி தரப்படவில்லை. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஏப்ரல் 8ம் தேதி வெளியிட்டுள்ள ஆணையில் கொரோனா ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தொடர்ந்து அமலில் உள்ளது. அனைத்து சமூக நிகழ்ச்சிகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்கள் செயல்பாடு, விளையாட்டு மற்றும் கலை விழாக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கட்டுப்பாடு விதிகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கோடை முகாம்கள் என்பது சிறுவர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். சிறுவர்கள் மற்றவர்களுடன் நெருங்கி ஆலோசிப்பது, விளையாடுவது போன்றவை நடத்தப்படுவது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதுவரை எத்தனை குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இல்லை. குழந்தைகள் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதனால், இதுபோன்ற வகுப்புகளை நடத்தக் கூடாது, அதற்கு அனுமதியும் இல்லை’’ என்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இந்திய மூச்சு ஆராய்ச்சி பவுண்டேசன் தலைவர் டாக்டர் ஆர்.நரசிம்மன் கூறும்போது, ‘‘14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் எளிதாக கொரோனாவை பரப்பக்கூடியவர்கள். அவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் இருப்பதே சரியானதாகும்’’ என்றார். கோடை முகாம்கள் சிறுவர்களிடையே அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் தொற்று பரவல் அதிகரிக்கும். அதனால், இதுபோன்ற வகுப்புகளை நடத்தக் கூடாது, அதற்கு அனுமதியும் இல்லை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews