தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி தெரிவித்தனர். 'பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்' என, முதல்வர் உருக்கமாக தெரிவித்தார்.சென்னை, பெரியமேட்டில் உள்ள, நேரு விளையாட்டு அரங்கத்தில், 2020 -- 21ம் கல்வியாண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது.
இந்த கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது; நாளை முடிகிறது.இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள்என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.முதல் நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
அரசின் கொரோனாவழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கவுன்சிலிங் துவங்கியது. தர வரிசையின் அடிப்படையில், மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகளை தேர்வு செய்தனர்.தரவரிசையில் முதலிடம் பிடித்த மாணவர் ஜீவித்குமார் உட்பட, முதல் ஏழு இடங்களை பிடித்த, அன்பரசு, திவ்யதர்ஷினி, குணசேகரன், பூபதி, சிவரஞ்சனி, சூர்யலட்சுமி ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லுாரியை தேர்வு செய்தனர். எட்டாம் இடம் பிடித்த இந்திராதேவி, சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரியையும், தொடர்ச்சியாக சரத்குமார், ரம்யா ஆகியோர், சென்னை மருத்துவக் கல்லுாரியையும் தேர்வு செய்தனர்.அதன்படி, 18 மாணவர்களுக்கு, முதல்வர் இ.பி.எஸ்., மாணவர் சேர்க்கை ஆணையை வழங்கியதோடு, அவர்களுக்கான வெள்ளை நிற அங்கி, 'ஸ்டெதஸ்கோப்' மற்றும் உடற்குறியியல் உபகரணங்கள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினார்.
இவர்களில், அர்ச்சனா என்ற மாணவிக்கு, அவரே வெள்ளை நிற அங்கியையும், ஸ்டெதஸ்கோப்பையும் கையில் கொடுத்து அணிய செய்தார். அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த மாணவர்களும், பெற்றோரும், முதல்வர்இ.பி.எஸ்., காலில் விழுந்து, நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை உறுதி செய்த, அரசு பள்ளி மாணவர்களுடன், முதல்வர் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, மாணவர்கள், '7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி' என்ற, வாசகங்கள் எழுதப்பட்ட பலுான்களை பறக்க விட்டனர்.
இந்நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:இந்த நாள், என் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான, மறக்க முடியாத நாள். தமிழக வரலாற்றில், ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில், திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள்.இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.இந்த அரசு, 'நீட்' தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியும், நேரில் சந்தித்தும் விலக்கு கோரப்பட்டுள்ளது. பல்வேறு சட்ட போராட்டத்தையும் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.நீட் தேர்வு நடைபெறும் மூன்று ஆண்டுகளில், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேருவது குறைந்து விட்டது. அரசு பள்ளி மாணவர்கள், திறமையானவர்களாக இருந்தபோதும், நீட் தேர்வை எதிர்கொள்ள தேவையான, வசதியும், வாய்ப்பும் குறைவு.அதனால், பிற மாணவர்களுடன் போட்டியிட்டு தேர்ச்சி பெற்றாலும், அதிக மதிப்பெண் பெற முடியாமல் போகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 படிப்பவர்களில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். கடந்தாண்டில், ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் தேர்வாகினர். இந்நிலையை மாற்ற, நான் உறுதியாக இருந்தேன்.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்து, பல தடைகளை தாண்டி, சட்டத்தை கொண்டு வந்து, ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. இதுவரை, உங்களது குடும்பம், எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல், 'மருத்துவர் குடும்பம்' என்றே, அடையாளம் காணப்படும்.
மேலும், இம்மாணவர்களின் ஏழ்மை நிலைமை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, ‛போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவி தொகை மற்றும் இதர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைப்பதற்கு, எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை; மக்களும் கருத்து தெரிவிக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும், 41 சதவீதம் மாணவர்களில், ஆறு பேர் தான் மருத்துவ படிப்பில் இடம் பெற்றனர் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் என்ற அடிப்படையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.
ஏழைகளுக்கும், மருத்துவ கல்வி கிடைக்கக்கூடிய வசதியை, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை, ஏழைகள் நிறைந்த பகுதியில், நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய, இப்படிப்பட்ட மாணவர்களை, அரசு ஊக்குவிக்கும். ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்பதால், அர்ப்பணிப்புடன், கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவையை, இம்மாணவர்கள் செய்வர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதே முகம் தானா?
மருத்துவ மாணவர் சேர்க்கையின் போது, ஆள்மாறாட்டத்தை தடுக்கும் வகையில், முக ஒப்பிட்டு முறையை, மருத்துவ கல்வி இயக்ககம்,இந்தாண்டு முதல் செயல்படுத்துகிறது. அதன்படி, கவுன்சிலிங்கிற்கு வரும் போது, மாணவர்களை புகைப்படம் எடுக்கின்றனர். அந்த புகைப்படத்தை, 'நீட்' தேர்வுக்கான விண்ணப்பம், மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் உள்ள புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்த பின், ஒதுக்கீடு ஆணை வழங்கப்படுகிறது.அதில், விண்ணப்பத்தின் புகைப்படத்தில், மாணவர்கள் கண்ணாடி அணிந்து, தற்போது அணியாமல் வந்தால், பல்வேறு கட்ட சோதனைக்கு பின், ஆணை வழங்கப்படுகிறது.எனவே, விண்ணப்பத்தின் போது அளித்த புகைப்படத்தில் இருப்பது போன்றே, கவுன்சிலிங் வளாகத்திற்கு மாணவர்கள் வர வேண்டும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
* ‛நீட்' தேர்வில், நான் பெற்ற மதிப்பெண்ணுக்கு, மருத்துவ படிப்பில் சேர முடியாது என, வருத்தப்பட்டேன். தமிழக அரசு அமல்படுத்திய, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வாயிலாக, இப்போது எனக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்து இருக்கிறது. இதற்காக, தமிழக அரசுக்கு நன்றி.- மேகா, திருச்செங்கோடு---
* பயிற்சி முடித்து, முதல் முயற்சியிலேயே, நீட் தேர்வில் வெற்றி பெற்றேன். என்னுடைய மதிப்பெண்ணுக்கு, மருத்துவ படிப்பு கிடைப்பது சந்தேகம். அரசின் வரலாற்று சிறப்புமிக்க, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவ கல்வி படிக்க, எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. புத்தகங்கள், சைக்கிள், சீருடை, பஸ் பாஸ் உள்பட கல்வி உபகரணங்களை, அரசு இலவசமாக வழங்கியது. இவை, என் படிப்புக்கு ஊக்கம் அளித்தன. என்னுடைய மருத்துவ கனவை நனவாக்கிய முதல்வருக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.ஹரிகிருஷ்ணன், திருச்சி----
* அப்பா ரொம்ப கஷ்டப்பட்டு, என்னை படிக்க வைத்தார். மருத்துவ படிப்பை கனவில் கூட நினைத்து பார்க்க முடியாது. இப்போது, அது, நனவாகி விட்டது. முதல்வருக்கு நன்றி.அர்ச்சனா, திண்டுக்கல்--
* நான் ஒரு கூலி தொழிலாளி. எனக்கு வார்த்தை வரவில்லை. என் மகளை, டாக்டராக பார்க்க ஆசைப்பட்டேன். அரசு பள்ளியில் படிக்க வைத்து, எப்படி டாக்டராக முடியும் என, நினைத்து அழுதேன். அரசு அறிவித்த, 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டு வாயிலாக, இந்த சமுதாயத்தில், என் மகளும் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். அதற்கு காரணமான முதல்வர், 100 ஆண்டுகள் நன்றாக இருக்க வேண்டும் என, கடவுளிடம் வேண்டுகிறேன்.அர்ச்சனாவின் தந்தை சக்திவேல்---
* என்னுடைய மகளை, மருத்துவ படிப்பில் சேர்க்க ஆசைப்பட்டேன். பணம் கட்டி, என்னால் படிக்க வைக்க முடியாது. அதனால், நன்றாக படிக்க வேண்டும் என, மகளிடம் கூறி வந்தேன். அவரும் நல்ல மதிப்பெண் எடுத்தார். எனினும், மருத்துவ படிப்பில் இடம் கிடைக்குமா என்ற, அச்சம் இருந்தது. 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டு வாயிலாக, அரசு அந்த அச்சத்தை போக்கி விட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.மாணவி, மோனிஷாவின் தாய் ரேவதி
வீட்டு வேலை செய்யும் பெண்ணின் மகனுக்கு கிடைத்தது டாக்டர், 'சீட்'
சென்னை சூளைமேடு, அருணாசலம் நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி நாகலட்சுமி, பல வீடுகளில் வேலை செய்து வருபவர்.
இவர்களின் மகன் நரசிம்மன், கோடம்பாக்கம் பதிப்பக செம்மல் க.கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பிளஸ் ௨ படித்தார். டாக்டர் கனவுடன், 'நீட்' தேர்வு எழுதினார். ஆனால், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.
எனினும், அம்மா கொடுத்த ஊக்கத்தால், இந்தாண்டும், 'நீட்' தேர்வுக்கு தயாரானார். பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்த அவர், ௫௦௮ மதிப்பெண் பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டத்தால், நரசிம்மனின் டாக்டர் கனவு நனவாகிறது. சென்னையில் நேற்று நடந்த கலந்தாய்வில், மாணவர் விரும்பியபடி, சென்னை அரசு மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தது. இதுகுறித்து, மாணவர் நரசிம்மன் கூறியதாவது:
பயிற்சி மையத்தில் சேர, அம்மாவின் நகைகளை ஒரு லட்சம் ரூபாய்க்கு அடகு வைத்தோம். அது போதாதால், அப்பா வட்டிக்கு பணம் வாங்கினார். இரவு, பகல் பாராமல் ஆட்டோ ஓட்டினார். அம்மா பல வீடுகளுக்கும் வேலைக்கு சென்றார்.
பெற்றோர் சுமையை குறைக்க, நானும், மருந்து கடையில் பகுதி நேர வேலை பார்த்தபடி படித்தேன். என்ன தான் இருந்தாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, அரசு உள் ஒதுக்கீடு அளித்ததால், தற்போது, விரும்பிய கல்லுாரியில், டாக்டர் சீட் கிடைத்துள்ளது; அரசுக்கு நன்றி.
இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.