தமிழக மக்கள் கடும் பொருளாதார சிக்கலில் தவிப்பதால் பள்ளி, கல்லூரி, தியேட்டர், பார் தவிர மற்ற அனைத்தையும் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு விரைவில் அறிவிக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இன்றுடன் 158 நாட்கள் ஆகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த கால கட்டங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காய்கறி, மளிகை, மருந்து கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டது. தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், மற்ற கடைகள் உள்ளிட்ட அனைத்தும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் தினசரி கூலி வேலை செய்பவர்கள், ஆட்டோ, கால் டாக்ஸி, வேன் ஓட்டுநர்கள், வேலைக்கு சென்றால்தான் சம்பளம் என்ற நிலையில் உள்ள கோடிக்கணக்கானவர்கள் அன்றாட செலவுக்கு கூட பணம் இல்லாமல் திணறினர். இந்த காலக்கட்டத்தில் தமிழக அரசு பொதுமக்கள் செலவுக்காக அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 மட்டுமே உதவித்தொகை வழங்கியது.
அதேநேரம், சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் தவித்த இளைஞர்கள் இரண்டு மாதங்களுக்கு மேல் வேலை இல்லாமலும், சொந்த ஊருக்கு செல்ல முடியாமலும் தவித்தனர். காரணம் விமானம், ரயில், பேருந்து உள்ளிட்டவைகள் நிறுத்தப்பட்டன. அப்படி சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் பெற வேண்டும். அதுவும் இறப்பு, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பல லட்சக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் சென்னையில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பலர் மூட்டை முடிச்சுகளுடன் சாலைகள் மற்றும் தண்டவாளம் வழியாக நடந்தே சென்ற அவலமும் நேரிட்டது.
வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை கொடுக்க முடியாமலும், உணவு கிடைக்காமலும் பல லட்சம் பேர் பரிதவித்தனர். அரசு முகாம்களில் தரம் இல்லாத உணவுகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கையில் காசு இருந்தாலும், ஓட்டல்கள் திறக்கப்படாததால் நல்ல சாப்பாடு கூட வாங்கி சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டனர். வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய இஎம்ஐ 6 மாதம் கட்ட தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்தாலும், வங்கிகள் இஎம்ஐ தொகைக்கு வட்டிக்கு வட்டி போட்டு கொடுமைப்படுத்தினர். இதுபற்றி மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை.
மூன்று மாதம் வேலையே இல்லாமல் வீட்டில் இருப்பவர்கள் எப்படி வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியும் என்று எந்த அரசும் கவலைப்படவும் இல்லை, உதவியும் செய்யவில்லை. பல தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு, சம்பளத்தில் பிடித்தம் செய்ததால் செய்வதறியாது மக்கள் திணறி வருகிறார்கள். ஒரு பக்கம் கொரோனாவுக்கு பயந்து வீட்டிலேயே இருக்கலாம் என்றால், மறுபக்கம் வறுமையில் கஷ்டப்படும் சூழ்நிலை உருவானது. இதனால் தற்போது தமிழக மக்கள் கொரோனாவோடு வாழ பழகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில்தான் தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள், கடைகள், சலூன்கள், ஆட்டோ, டாக்ஸி, உடற்பயிற்சி கூடங்கள், வழிபாட்டு தலங்கள், டாஸ்மாக் கடைகள், ஜவுளி கடைகள் என ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர தொடங்கி விட்டார்கள். சொல்லப்போனால், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இருந்த கூட்டத்தைவிட அதிக கூட்டங்கள் தற்போது சாலைகளில் உள்ளது என்றே கூறலாம். காரணம், பேருந்து மற்றும் ரயில்கள் இயக்கப்படாததால் அனைவரும் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் அல்லது ஆட்டோ, டாக்ஸி, வேன்களில் வேலைக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் சென்னை உள்ளிட்ட நகர் பகுதிகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக உள்ளது. மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வு ஓரளவு ஏற்பட்டுள்ளது. அனைவரும் மாஸ்க் அணிய பழகியுள்ளனர். ஆனால், சமூக இடைவெளி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சிலர் தொடர்ந்து மாஸ்க் அணிய முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். இதனால் கொரோனா பரவும் ஆபத்தும் உள்ளது.
இந்நிலையில் நாளை மறுதினத்துடன் (31ம் தேதி) தமிழக அரசு அறிவித்த 7வது கட்ட ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. மீண்டும் செப்டம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது கைவிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அல்லது நாளை அறிவிக்கிறார். அதன்படி தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, தியேட்டர், பார் உள்ளிட்டவைகள் தவிர மற்ற அனைத்தையும் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பேருந்து போக்குவரத்து, ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வருமானம் வரும் வழிபாட்டு தலங்கள், விளையாட்டு மைதானங்கள், பெரிய வணிக வளாகங்கள், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி, லாட்ஜ்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட அனைத்தையும் திறந்துவிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கடைகளை இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் வருகிற 28ம் தேதி திறக்கப்பட உள்ளது. செப்டம்பர் 18ம் தேதி உணவு, தானிய கடைகள் திறக்கப்பட உள்ளன.
இப்படி அனைத்தையும் திறந்துவிடுவதன் மூலம் பொதுமக்களின் பொருளாதார தேவையையும் அதன்மூலம் அரசின் பொருளாதாரத்தையும் அதிகரிக்க முடியும் என்று தமிழக அரசு கருதுகிறது. அதேநேரம், அனைத்தையும் திறந்துவிட்டால் பொதுமக்கள் நடமாட்டம் இன்னும் அதிகரிக்கும். கொரோனா பரவலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், பொதுமக்களின் தற்போதைய தேவை, கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர வேண்டும் என்பதுதான். அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் அரசின் உதவியை அல்ல, எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் தங்களை சுதந்திரமாக நடமாட விடுங்கள் என்றுதான் கூறுகிறார்கள்.
'அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் தனியார் ஊழியர்களுக்கு செலவு'
தமிழகத்தில் கடந்த 158 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இரண்டு மாதம் ஊரடங்கில் அரசு, தனியார் ஊழியர்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். பின்னர் ஜூன் மாதம் முதல் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் தற்போது வரை பேருந்து, ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தினசரி வேலைக்கு சென்று வர மட்டும் கூடுதல் சலுகையாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால், தனியார் ஊழியர்கள் தினசரி அலுவலகம் மற்றும் வேலைக்கு சென்றுவர இரண்டு சக்கர வாகனம், கார் அல்லது அதிக பணம் கொடுத்து ஆட்டோவில் சென்றுவர வேண்டியுள்ளது.
தனியார் ஊழியர்கள் குறைந்த சம்பளமே வாங்குகிறார்கள். இப்படி வாங்கிய சம்பளத்தை பெட்ரோலுக்கும், ஆட்டோவுக்கும் அதிகளவில் கொடுப்பதால் முன்பைவிட செலவு அதிகரித்துள்ளது. அதனால் தனியார் ஊழியர்கள் வேலைக்கு சென்றுவர அரசு பேருந்து மற்றும் மின்சார ரயில் போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups