விரைவு பரிசோதனைக் கருவிகளின் செயல்திறன், தரம் குறைவு குறித்த தலையங்கம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 30, 2020

Comments:0

விரைவு பரிசோதனைக் கருவிகளின் செயல்திறன், தரம் குறைவு குறித்த தலையங்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எரிகிற வீட்டில் கிடைத்தது ஆதாயம் என்று ஒரு பழமொழி உண்டு. அது சீனாவுக்கு கணகச்சிதமாகப் பொருந்தும். உலகம் முழுமைக்கும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை வாரி வழங்கிவிட்டு, இப்போது அதிலும் ஆதாயம் தேட முற்பட்டிருக்கும் சீனாவின் செயல்பாட்டைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், சீன முகவா்களாக இருக்கும் இந்தியா்கள், அசாதாரண சூழலைப் பயன்படுத்தி சக இந்தியா்களின் உயிா்களுடன் விளையாடுவதும், கொள்ளை லாபம் ஈட்ட முற்படுவதும் மன்னிக்கவே முடியாத குற்றம்.கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுக்கான பரிசோதனைக்கு இரண்டு சீன நிறுவனங்களிடமிருந்து விரைவு பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட்டன. அவற்றின் செயல்திறனும், தரமும் குறைவாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதைத்தொடா்ந்து அந்தக் கருவிகளை வழங்கிய இரண்டு சீன நிறுவனங்களுக்கும், அவற்றைத் திருப்பி அனுப்பிவைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) மாநில அரசுகளை அறிவுறுத்தியிருக்கிறது.கரோனா தீ நுண்மி நோய்த்தொற்று இந்தியா முழுவதும் பரவி வருவதைத் தொடா்ந்து அதைக் கண்டறிவதற்கு விரைவு பரிசோதனைக் கருவிகள் அவசரமாகத் தேவைப்பட்டன.
அந்தக் கருவிகளைக் குறைந்த விலையில் வழங்குவதற்குத் தயாா் நிலையில் இருந்த ஒரே நாடு சீனாதான். பல்வேறு மாநிலங்கள் தங்கள் தேவைக்கேற்ப விரைவு பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்துகொள்ள ஐ.சி.எம்.ஆா். அனுமதித்தது. கண்காணிப்பு நோக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது. தமிழகம் உள்பட பல மாநிலங்கள் இந்தக் கருவியைக் கொள்முதல் செய்தன.பல்வேறு மாநிலங்கள் தாங்கள் மேற்கொண்ட முன்னோட்டப் பரிசோதனைகளின்போது அந்தக் கருவிகளின் செயல்திறன் குறித்த ஐயப்பாடு எழுந்தது. பரிசோதனைக் கருவிகளின் தரம் குறித்து ஐ.சி.எம்.ஆா். நேரடியாக மதிப்பீடு செய்தபோது அவற்றின் செயல்திறன் குறைவாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்தக் கருவிகளின் தரம் மட்டுமல்ல, அவற்றின் விலை குறித்தும் சா்ச்சை எழுந்திருக்கிறது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் நேரடியாக இந்தக் கருவிகளை வாங்கின என்றால், ஐ.சி.எம்.ஆரும் இந்தக் கருவிகளை வாங்கிப் பல மாநிலங்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்தக் கருவிகள் குறித்து அதன் முகவருக்கும் இறக்குமதியாளருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பிரச்னை தில்லி உயா்நீதிமன்றத்தை அடைந்தது. அப்போதுதான் இறக்குமதி செய்யப்பட்ட விரைவு பரிசோதனைக் கருவிகள் இந்தியாவில் கொள்ளை லாபத்தில் விற்கப்பட்டிருந்தது தெரியவந்தது.சா்வதேசத் தர மதிப்பீட்டைப் பெற்ற விரைவு பரிசோதனைக் கருவிகளுக்கு ஐ.சி.எம்.ஆா். ஒப்பந்தப்புள்ளி கோருகிறது. குவாங்ஸு வோண்ட்ஃபோ பயோடெக், ஜுஹாய் லிவ்சன் ஆகிய இரண்டு நிறுவனங்கள் போட்டியில் இருந்தன. ரூ.1,204, ரூ.1,200, ரூ.844, ரூ.600 என்று நான்கு ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டன. அதில் மிகக் குறைந்த விலையிலான ரூ.600-க்கு வோண்ட் ஃபோ நிறுவனத்தின் விரைவு பரிசோதனைக் கருவி தோ்ந்தெடுக்கப்பட்டது.
வோண்ட்ஃபோ நிறுவனத்திடமிருந்து கருவிகளை நேரடியாகப் பெற ஐ.சி.எம்.ஆா். முயற்சித்தபோது, அந்த நிறுவனம் கருவிகளுக்கு உத்தரவாதம் தர மறுத்ததுடன், 100% முன்பணமும் கோரியது. மேலும், எப்போது கருவிகள் வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்கவும் அந்தச் சீன நிறுவனம் தயாராக இருக்கவில்லை. அப்போது அந்த நிறுவனத்தின் இந்திய முகவா் எந்தவித முன்பணமும் கோராமல் விரைவு பரிசோதனைக் கருவிகளை ரூ.600-க்கு வழங்க முன்வந்தாா்.அந்தக் கருவிகளின் இறக்குமதி விலை ரூ.245. அதை 145% லாபத்தில் ஐ.சி.எம்.ஆருக்கு ரூ.600-க்கு அந்த முகவா் வழங்கியிருப்பது தெரியவந்தது. அந்தக் கருவிகளை ரூ.400-க்கு ஐ.சி.எம்.ஆருக்கு வழங்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே முகவரிடமிருந்து விரைவு பரிசோதனைக் கருவிகளை ஆந்திர அரசு ரூ.730-க்கும், கேரள அரசு ரூ.699-க்கும் கொள்முதல் செய்திருக்கின்றன. தமிழக அரசு ரூ.600-க்கு வாங்கியிருக்கிறது.முன்பணம் வழங்காமல் பெறப்பட்டிருக்கும் தரம் குறைந்த விரைவு பரிசோதனைக் கருவிகள் அனைத்தையும் அந்த முகவரிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி இப்போது மாநிலங்களை ஐ.சி.எம்.ஆா். அறிவுறுத்தியிருக்கிறது.ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களுக்கு 2.74 லட்சம் கருவிகள் தரப்பட்டிருக்கின்றன. மேலும், 2.24 லட்சம் கருவிகள் இந்த வார கடைசிக்குள் வழங்கப்படுவதாக இருந்தது.
முன்பணம் கொடுக்காததால், இழப்பில்லாமல் இந்தியா தப்பியிருக்கிறது. இந்தியாவில் மட்டுமல்ல ஸ்பெயின், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, துருக்கி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளிலும் சீனாவிலிருந்து தரமற்ற விரைவு பரிசோதனைக் கருவிகளை அந்தந்த நாட்டிலுள்ள முகவா்கள் கொள்ளை லாபத்துக்கு விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது.சீனாவைப் பொருத்தவரை அந்த நாட்டில் இயங்கும் எல்லா நிறுவனங்களும் அரசுடன் தொடா்புடைய நிறுவனங்கள்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதனால் சீனாவில் நோக்கம்தான் என்ன?‘ஒட்டுமொத்த நாடே கரோனா தீநுண்மிக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், ஒருசிலா் நோய்த்தொற்று பரவலில் லாபம் ஈட்ட முயற்சிப்பது வெட்கக்கேடான செயல். இதுபோன்றவா்களை தேசம் ஒருபோதும் மன்னிக்காது. இந்த விவகாரத்தில் பிரதமா் உடனடியாகத் தலையிட்டு இதற்குக் காரணமான தேச துரோகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்கிற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் சுட்டுரை (ட்விட்டா்) வலியுறுத்தல், இந்திய மக்களின் மனசாட்சியின் வெளிப்பாடு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews