அஞ்சல் துறையில் நியாயமற்ற பணி நியமனங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 23, 2020

Comments:0

அஞ்சல் துறையில் நியாயமற்ற பணி நியமனங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திராவிட இயக்கம் மற்றும் தந்தை பெரியார் போன்றவர்களின் போராட்டத்தால் இடஒதுக்கீட்டு முறை உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் சிறிதுசிறிதாக முன்னேறத் தொடங்கினர். இடஒதுக்கீடுதான் அவர்களைக் கடைத் தேற்றியது. விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கழிந்த பிறகும், உயர் சாதியினருக்கு இணையான செல்வாக்கு மிக்க பதவிகளில் ஒப்பீட்டளவில் ஏனைய சமுதாயத்தினர் இன்னும் கூட அமர முடியவில்லை என்பதுதான் உண்மை.
இப்படிப்பட்ட இழிநிலை தொடரும் இந்தக் காலகட்டத்தில் மென்மேலும் உயர் சாதியினருக்குத் தொடர்ந்து அரசுப் பணிகளை வாரி வழங்குகிறது தற்போதைய மத்திய அரசு. ஒரு கண்ணுக்கு வெண்ணெயும் மற்றொரு கண்ணுக்குச் சுண்ணாம்பும் வைப்பது போல், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினருக்குக் கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்புகளை மோசடியாக உயர்சாதியினருக்கு அடுக்கடுக்காக வழங்கி மிகப்பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் கிளை அதிகாரி, துணை கிளை அதிகாரி ஆகிய 4,442 பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, வேலை கிடைக்கப் பெற்றவர்களது விவரத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
Cut-off விவரம் (மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு) பொருளாதார வகையில் பின்தங்கிய பிரிவினர் எனும் உயர்சாதியினருக்கு - 42%, ST-க்கு - 89.6%, SC-க்கு - 94.8%, OBC-க்கு - 95%, பொதுப்போட்டியாளருக்கு - 95.2%, உயர்சாதியினருக்கு 42% (Cut off) மதிப்பெண் எனும் அடிப்படையில் 453 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யார் இந்த ஏழைகள்?
* பிறப்பால் உயர்சாதியினர் மட்டும் (ஐயர்/ஐயங்கார் போன்றோர்)
* ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளவர்கள்.
* 5 ஏக்கர் நிலம் உள்ளவர்கள்.
* 1,000 சதுர அடி வீடு உள்ளோர்.
தகுதி: பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள்.
தேர்வு: தேர்வு ஏதும் இல்லை. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு. இவர்கள் சம்பளம் ரூ.12,000 முதல் ரூ.15,480 வரை. சொந்த ஊரிலேயே சொகுசான மத்திய அரசு வேலை. பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டம் என வாங்கிய பிறகும் நமது இளைஞர்கள் பியூன் வேலைக்கும், குப்பை அள்ளும் வேலைக்கும் விண்ணப்பிக்கும் காலத்தில், உயர் சாதி பிரிவினருக்கு எப்படி ஒரு சொகுசான வேலையை மத்திய அரசு அள்ளி வழங்கியுள்ளது பாருங்கள்?
மாற்றுத்திறனாளிகள் (Cut off) மதிப்பெண் விவரம் (Out of 100)
PH - HH எனும் செவித்திறன் சிக்கல் உள்ளோருக்கு - 64.2%
PH - OTR எனும் வேறு உடல்திறன் சிக்கல் உள்ளோருக்கு - 78.4%
PH - VH எனும் பார்வைத்திறன் சிக்கல் உள்ளோருக்கு - 85.8%
PH - OH எனும் கை கால் முடக்கம் போன்ற சிக்கல் உள்ளோருக்கு - 88.8%
பார்வைத் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கு - 85.8%
ST மக்களுக்கு - 89.6% 95.2 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற OBC மக்கள் மட்டும் 1944 பேர். அப்படியென்றால் 42 முதல் 95.2 மதிப்பெண்ணுக்குள் எவ்வளவோ கோடி தகுதியான SC, ST, OBC மக்கள் இருப்பார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு, ஒப்பீட்டளவில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்ற 453 அரிய வகை ஏழைகளைத் தேடிக் கண்டுபிடித்து வேலை தந்துள்ளார்கள். நமது பிள்ளைகள் சமச்சீர் கல்வியில் படித்து, 500-க்கு 450 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்திருந்தாலும் மனப்பாடம் செய்து பெற்ற மதிப்பெண் எனவும் மாநிலக் கல்வி தரம் இல்லை எனவும் வாய் சவடால் பேசும் இவர்கள், 42% மதிப்பெண்ணுக்கு ஓடி ஓடி வேலை கொடுக்கும் அநீதியை என்னவென்பது? 500-க்கு 210 மதிப்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் மிக அதிக மதிப்பெண்கள் பெற்று, முழுத் தகுதியோடு காத்திருக்கும்போது, பத்தாம் வகுப்பில் 500-க்கு வெறும் 210 மதிப்பெண் பெற்ற மக்குகளுக்கு வேலை கொடுத்திருக்கிறார்களென்றால், அது எவ்வளவு பெரிய மோசடி!
உயர் சாதியினராகப் பிறந்திருந்தால் போதும்! இப்படிப்பட்ட அரிய வகை ஏழைகளை வீடு வீடாகத் தேடிப் போய் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது மத்திய அரசு! உயர்சாதியினர் இடஒதுக்கீடு இல்லாமல் பொதுப் போட்டியிலேயே 1736 பேர் அதாவது 25% வேலை பெற்றுள்ளனர். முன்னேறிய சாதிகளுக்கு அவர்கள் மக்கள்தொகையை ஒப்பிட, ஏற்கெனவே போதுமான வாய்ப்புகள் உள்ளன. சமூகநீதிக்கு எதிராக இருப்பதால், தனியாக இடஓதுக்கீடு அவர்களுக்குத் தேவையில்லை எனும் வாதம் பொருத்தமானதாகும். இவ்வளவு சலுகைகள் இருந்தும், இது போதாது என முடிவெடுத்து பொருளாதாரத்தில் எளிய பிரிவினருக்கு என்ற அடிப்படையில் இன்னும் 10% என வழங்கியுள்ளனர்.
3% மக்களுக்கு 35% வேலை வாய்ப்புகளை கொள்ளை அடித்துக்கொண்டு போகின்றனர். ஆனால், 97% மக்கள் 65% இடங்களுக்கு முட்டி மோதிக்கொண்டுள்ளனர். இதே பொதுப் பட்டியலில், 800 இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் (OBC), 4 பழங்குடியினர் (ST), 64 பட்டியலினப் பிரிவினர் (SC) இடம்பெற்றுள்ளனர். முதல் மதிப்பெண் 99.8 எடுத்தவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, தகுதியில்லாதவர்கள்தான் மற்றவர்களது இடங்களை அள்ளிப்போகிறார்கள் என்று வைத்த குற்றச்சாட்டு எவ்வளவு பெரிய பொய் என்பது இப்போது அம்பலமாகிவிட்டது. வெறும் 42 மதிப்பெண்கள் பெற்று தகுதியே இல்லாமல் அரசுப் பணியிடங்களைக் கமுக்கமாகத் திருடிக்கொண்டு போவது யார் என்பது புரிகிறதா? எனவே, சிறிதளவும் நியாயமற்ற இந்த நியமனங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews