மருத்துவக்கல்வி முதுநிலை படிப்பு அரசு டாக்டர்களின் வாய்ப்பு பறிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 26, 2020

Comments:0

மருத்துவக்கல்வி முதுநிலை படிப்பு அரசு டாக்டர்களின் வாய்ப்பு பறிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க கோரிக்கை
* அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைக்காது
* நீட், நெக்ஸ்ட் தேர்வுகள் மூலம் தமிழகம் முடக்கம்?
* பறிபோகும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் வாய்ப்பு
முதுநிலை மருத்துவப் படிப்பில், கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் மொத்த இடங்களில் 50% இடங்கள் கிராமங்களில், தொலைதூர பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் சேவையாற்றிய மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும், அவர்கள் தொடர்ந்து கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற ஊக்குவிக்கும் வகையிலும் இந்த சலுகை அளிக்கப்பட்டது. ஆனால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான மாணவர் சேர்க்கை முறை தேவை என்று கூறி, நாட்டிலேயே தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட சிறப்பான முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறையை இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2017ம் ஆண்டு ரத்து செய்தது.
இதையடுத்து, கிராமப்புற பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர ஊக்க மதிப்பெண் வழங்கும் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. அதில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறி, அத்திட்டத்தை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதனால் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பும் மருத்துவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்தது. அடுத்த சில ஆண்டுகளில் கிராமப் பகுதிகளில் மட்டுமல்ல, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு கூட மருத்துவர்கள் முன்வர மாட்டார்கள். எனவே, கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டும் என்பதில் மத்திய அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், முதுநிலை மருத்துவப் படிப்புகளில், கிராமப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் செயல்படுத்த மாநில அரசுகளை ஊக்குவிக்க வேண்டும் என்கின்றனர் கிராமப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள்.
தமிழகத்தில் தான் அதிக இடம்: நாட்டிலேயே அதிக பட்சமாக தமிழகத்தில் தான் எம்எஸ், எம்டி, டிஎம், எம்சிஎச் போன்ற மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளுக்காக அதிக இடங்கள் உள்ளன. மாநிலத்தில் உள்ள 24 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில், 1,700க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தலைநகர் டெல்லியில் கூட இதைவிட குறைவான இடங்களே உள்ளன. தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பில் உள்ள 50 சதவீத இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கியது போக, மீதம் உள்ளவற்றில் 50 சதவீதம் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து வரும் மருத்துவர்கள், இந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை பயன்படுத்தி படித்தனர். கடந்த 2017ம் ஆண்டு அந்த ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால், தமிழக மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள், மற்ற மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. தமிழகத்திலேயே படித்து, தமிழகத்திலேயே பணிபுரியும் மருத்துவர்களின் உயர்படிப்பு வாய்ப்பு பறிபோனது. அதேசமயம் இங்கு வந்து உயர் படிப்பு படிக்கும் வெளிமாநிலத்தவர்கள், படிப்பு முடிந்தவுடன் அவர்களது மாநிலங்களுக்கு சென்று விடுவார்கள். இதனால், இங்குள்ள மருத்துவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு, நமது மக்களுக்கான உயர் மருத்துவ சேவை என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுவிடும்.
50% இடஒதுக்கீடு தேவை முதல் ஆண்டில் 10 சதவீதம் என்றிருந்த நிலையில், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகரித்து, தற்போது, தமிழகத்தில் உள்ள உயர் படிப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் வடமாநிலத்தவர்கள் தான் உள்ளனர். இதே நிலை நீடித்தால், தமிழக மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு என்ற ஒன்றே இல்லாத நிலை உருவாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அடுத்தடுத்து மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றின் மூலம் பட்ட மேற்படிப்பு இடங்கள் பல மடங்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத இடஒதுக்கீடு இல்லையெனில், அந்த இடங்களில் தமிழர்கள் ஒருவர் கூட சேரமுடியாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே இந்த விஷயத்தில் தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொன்றாக தகர்க்கப்படும் கனவுகள் முதலில் நீட் தேர்வு மூலம் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை தகர்த்தது மத்திய அரசு. அதன் பின்னர் நெக்ஸ்ட் தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மேல்படிப்பு படிக்கும் வாய்ப்பையும் அரசு மருத்துவர்களுக்கு கிடைக்காமல் செய்துள்ளது. மருத்துவக் கல்வியில் தரத்தை உயர்த்த வேண்டும் என்றால், அதன் பாடத் திட்டம் மற்றும் பயிற்சி, மருத்துவமனைகளில் பணிபுரிதல் மூலம் அனுபவம் பெறுதல் போன்றவற்றை மேம்படுத்தலாம். அதைவிட்டுவிட்டு மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அந்த மாநில மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கலாமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், பதில் தான் இல்லை.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews