குழந்தைநேயப் பள்ளிகளை கட்டமைப்போம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 10, 2019

Comments:0

குழந்தைநேயப் பள்ளிகளை கட்டமைப்போம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆண்டுதோறும் “ குழந்தைகள் தினம்” வெறும் சடங்காகக் கொண்டாடப்படுவதை விடுத்து உண்மையில் ஆண்டு முழுவதுமே பள்ளிகளில் குழந்தைகளைக் கொண்டாடும் சூழல் ஏற்படுத்தப்படவேண்டும். குழந்தைகள் விழித்திருக்கும் நேரத்தில் அதிக நேரம் இருப்பது பள்ளி வளாகத்தில்தான். அதன் பொருட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் “குழந்தைநேயப் பள்ளிகளாக” பரிணமிக்க வேண்டும் என குழந்தைநலச் செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இப்போது நம் குழந்தைகள் பயிலும் பள்ளிகள் குழந்தைநேயப் பள்ளிகளாக இல்லையா, தற்போது இதைப்பற்றி பேசுவதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கை. நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போவது இன்றைய குழந்தைகள்தான். அவர்கள் பள்ளிகளில் எவ்வாறு வார்த்தெடுக்கப்படுகிறார்களோ அதைப் பொறுத்துதான் அவர்களின் எதிர்காலம் அமையும். நேசமிக்க வகுப்பு மற்றும் பள்ளிச்சூழல்தான் அன்பு நிறைந்த எதிர்காலச் சமுதாயத்தை உருவாக்கும்.
தற்போது மாலையில் பள்ளி நேரம் முடிந்ததற்கான மணி அடிக்கும்போது என்ன மாதிரியான மகிழ்ச்சியான மனநிலையை குழந்தைகள் கொண்டிருக்கிறார்களோ, அதே மனநிலையை காலையில் பள்ளிக்கு வரும்போதும் குழந்தைகளிடம் உருவாக்குவது தான் “குழந்தைநேயப் பள்ளி”. 90-களின் இறுதி வரை ஆசிரியர் என்றாலே ஒரு கையில் பிரம்பு கம்புடன் உள்ள பிம்பம்தான் ஓவியர் முதல் அனைவரின் மனதிலும் தோன்றும். ஆனால் இப்போது நிலைமை வேறு. குழந்தைகளை பிரம்பால் அடிப்பது, முட்டிக்காலில் நிற்கச் செய்வது போன்ற வகுப்பறை வன்முறைகள் வெகுவாகக் குறைந்துவிட்டன என்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் குழந்தைகளை அடிக்காமல் இருப்பது மட்டும் குழந்தைநேயப் பள்ளி ஆகிவிடாது. ஒற்றைச் சடை பின்னக்கூடாது, தலையில் பூ வைக்கக்கூடாது, வண்ணப்பொட்டு நெற்றியில் வைக்கக்கூடாது என்பதும் மாணவர்களை மற்ற மாணவர்கள் முன்னிலையில் பட்டப்பெயர் சொல்லி அழைப்பது, உருவ அமைப்பை வைத்து கிண்டல் செய்வது, ஒரு மாணவர் செய்யும் தவறை மற்ற ஆசிரியர்கள் அல்லது மாணவர்களிடம் பகிர்தல், காலை இறைவணக்கம் கூட்டத்தில் மாணவர்கள் அறியாமல் செய்த தவறுகளை பகிரங்கப்படுத்துதல், பாடம் நடத்த தொடங்கிய பிறகு சிறுநீர் கழிக்க, குடிநீர் அருந்த அனுமதி மறுத்தல் போன்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் வகுப்பறைகளில் இன்னமும் “சில” ஆசிரியர்கள் அவர்கள் அறியாமலே நிகழ்த்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி ஆசிரியர்கள் தாங்கள் என்ன தவறு செய்கிறோம் எற்பதை உணர்வதேயில்லை. அவை குழந்தைகள் மனதில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று புரிந்துகொள்வதில்லை. சாதாரணமாக மற்ற மாணவர்கள் முன்பாக ஒரு மாணவனை பட்டப்பெயரிட்டு அழைக்கும் ஒவ்வொரு முறையும் அவன் செத்துச் செத்து பிழைக்கிறான். அவனுடைய திறன்கள் மழுங்கடிக்கப்படுகின்றன என்கின்றனர் குழந்தை உளவியலாளர்கள். ஆனால், இதுபோன்ற குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை நிகழ்த்த வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏன் எழுகிறது என்று இந்த ஆசிரியர்களிடம் விசாரித்தால் மிக எளிதான பதில் கிடைக்கிறது‌. மாணவர்களை படிக்க வைக்க , ஒழுக்கமாக வளர்க்க இதுபோன்ற நடைமுறைகள் அவசியம்தான் என்கின்றனர். உண்மையில் மாணவர்கள் மீதுள்ள அக்கறையால் தான் இதை செய்கின்றனர்.
வகுப்பறையில் கற்பிக்கும்போது நிகழவேண்டிய மூன்று அம்சங்கள். *கற்பித்தல் *மாணவர்களிடையே ஒழுக்கத்தைக் கற்பித்தல் *தவறு செய்யும் மாணவனை திருத்துதல். இம்மூன்றும் மிகச்சவாலான விஷயங்கள். இதை சரியாக கையாளத்தெரியாத ஆசிரியர்கள் சிக்கல் ஏற்படும்போது ஒரு நூலிழை தவறினாலும் எதிர்மறை திசையில் செல்கினறனர். அது வேறு மூன்று விஷயங்களைச் சென்றடைகிறது. அவை... *குழந்தைகளின் உரிமைகளை மறுத்தல் *தண்டித்தல் *குழந்தைகள் மீதான வன்முறை. குழந்தைகளைச் சரியாக கையாள்வது என்பது எளிதான விஷயம் கிடையாது. அதற்கு போதிய பயிற்சி வேண்டும். ஒரு மனநல மருத்துவருக்கு இணையாக குழந்தை உளவியல் பற்றி ஆசிரியர்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர் பயிற்சியிலும் கல்வியியல் கல்லூரிகளிலும் “குழந்தை உளவியல்” ஒரு பாடமாகக்தான் இருக்கிறது. கற்பித்தல் முறைகளுக்கு இணையாக குழந்தை உளவியலுக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும். ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பிறகும் பணியிடைப் பயிற்சியாக குழந்தை உளவியல் பற்றிய பயிற்சியை அவ்வப்போது அளிக்க வேண்டும். தாய் தந்தை பிரிந்து வாழும் குடும்பத்துக் குழந்தைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், காலை உணவு சாப்பிடாமல் வரும் குழந்தைகள், மாற்றாந்தாய் இட்ட வேலைகளைச் செய்து முடித்துவிட்டு பள்ளிக்கு வரும் குழந்தைகள் இப்படி மனரீதியாக அழுத்தம் அடைந்துள்ள பலதரப்பட்ட குழந்தைகளை அனுதினமும் ஆசிரியர்கள் சந்திக்கின்றனர்.
இந்த மாணவர்களை நேர்த்தியாக வழிநடத்தி கற்பிக்க அதிக கவனமும் நேரமும் தேவை. ஆனால், இதற்கெல்லாம் ஆசிரியர்களுக்கு நேரமில்லை . ஆசிரியர்ளுக்கு குழந்தைகளைக் கவனிப்பதை விட காலை பள்ளிக்கு வந்தவுடன் கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் “ஆப்”களை அப்டேட் செய்து பதிவேற்றம் செய்ய , எண்ணற்ற பதிவேடுகள் மற்றும் படிவங்களை நிரப்பிடத் தான் நேரம் சரியாக இருக்கிறது. குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்பது பாடம் நடத்தாமல் இருப்பது என்ற தவறான புரிதல் சிலரிடம் உள்ளது. “குழந்தைகள் உரிமைகளை மதித்து அவர்கள் விரும்பும் வகையில் கற்பிப்பதுதான் குழந்தைநேயப் பள்ளி” என்று யுனிசெப் வரையறுக்கிறது. கோவில், சர்ச், மசூதி போன்ற மக்கள் பாதுகாப்பாக உணரும் இடங்களில் கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கைகளை பிடித்தபடியே இருப்பதை பார்த்திருப்போம். ஆனால், பள்ளிகளுக்கு வரும் பெற்றோர்கள் நுழைவாயில் வந்ததும் தங்கள் குழந்தைகளை நம்பிக்கையுடன் விட்டுச் செல்கின்றனர். இதன் மூலம் கடவுளை விட ஆசிரியர்கள் மீது பெற்றோர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். பெற்றோர்களின் இந்த நம்பிக்கையை வலுவாக்கும் விதமாக “குழந்தைநேயப் பள்ளிகளை” உருவாக்க அரசும் ஆசிரியர்களும் கரம் கோர்க்க வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews