Search This Blog
Monday, October 07, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எதிலும் தமிழ் என்ற தமிழர்களின் முழக்கம், அதன் தொன்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால், சமீபகாலமாக தமிழுக்கு ஆபத்து வந்து விட்டது. ஏதோ தெரியாமல் செய்த பிழை என்பதெல்லாம் போய், மத்தியில் உள்ள பாஜ அரசு, ‘பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும்’ கலையை செய்ததெல்லாம் போய், இப்போது பகிரங்கமாகவே தமிழை புறக்கணிக்கும் போக்கை கடைபிடிக்க தயாராகி விட்டது என்று தமிழ் ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர். நீட் தேர்வில் ஆரம்பித்தது தமிழ் புறக்கணிப்பு; போராடி பின்னர் தமிழில் எழுதும் உரிமை மீட்கப்பட்டது. ஆனால், ரயில்வே தேர்வில் ஆரம்பித்து சமீபத்தில் தமிழக அரசின் குரூப் 2 வரை தமிழை மெல்ல மெல்ல கழற்றி விடும் போக்கு தெளிவாக தெரிகிறது. இன்னொரு பக்கம் 5 ம் வகுப்பு, 8 ம் வகுப்பு பொதுத்தேர்வில் கூட தமிழ் பாடங்கள் குறைக்கப்படுகின்றன. கணியன் பூங்குன்றனார் பாடலை சொன்னதால் அமெரிக்காவில் தமிழ் மொழி பெருமை உணர்ந்தனர் மக்கள் என்று பிரதமர் மோடி பெருமிதப்பட்டு சொன்னார்.
ஆனால், அவரின் கீழ் உள்ள அமைச்சர்கள் செயல்பாடு வேறுவிதமாக இருக்கிறது என்ற ஆதங்கமும் தமிழ் ஆர்வலர்களிடம் உள்ளது. இதில் இன்னொரு வேதனை என்ன தெரியுமா? கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ் பண்பாடு என்று சொல்லக்கூடாது; பாரத பண்பாடு என சொல்ல வேண்டுமாம். தமிழக அமைச்சர் ஒருவரே இப்படிச் சொல்கிறார். தமிழ் மொழிக்கு, அதன் தொன்மைக்கு ஏற்பட்டு வரும் இழுக்கு, புறக்கணிப்பு எல்லாம் எதிர்கால சந்ததியினருக்கு பெரும் இழப்பு என்பதை சுலபமாக சிலர் மறந்து விடுகின்றனர். எல்லா தேர்வுகளிலும் தமிழ் பங்கு குறைப்பு, புறக்கணிப்பு தொடர்ந்தால், தமிழ் இனி மெல்ல சாகடிக்கப்படுகிறது என்று தானே பொருள். இதோ நான்கு திசைகளில் நான்கு விஐபிக்களின் பார்வை
தமிழர் நலன்களை காக்க அரசு தயங்கியதே இல்லை: மா.பா.பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்
தமிழ் மொழிக்கும் தமிழர் நலனுக்கும் அரசு எப்போதும் பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறது. கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் அதை தெளிவாக அறிந்து கொள்ளலாம். பழம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறைகளில் பல புதிய பார்வைகளை கொடுக்கும் வகையில் இந்த அகழ்வாய்வு உள்ளது. கீழடியில் மிக அர்ப்பணிப்போடு நடந்து வரும் இந்த அகழ்வாராய்ச்சி முயற்சிகளுக்கு தமிழக அரசு தனது முழு ஒத்துழைப்பை முழுமையாக அளித்து வருகிறது. அகழ்வாராய்ச்சியின் ஒவ்வொரு நகர்வுக்கும் அரசு கொடுத்து வரும் ஆதரவும் ஒத்துழைப்பும், அதில் எந்த சுணக்கமும் தொய்வும் ஏற்படாது, பணிகள் செவ்வனே தொடர வழிவகை செய்கிறது. எல்லா வகையிலும் நாங்கள் அதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். தமிழர் பண்பாட்டை பறைசாற்ற வேண்டும் என்று தீவிரமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழர் நலன்களை காக்க எங்கள் அரசு எப்போதும் தயங்கியதே இல்லை.
இப்போது நான்காம் கட்ட அகழ்வாய்வு பணிகள் முடிந்துள்ளன. இதில் கண்டறிப்பட்ட தரவுகளைக் கொண்டு, நான்காம் கட்ட அகழ்வாய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக ஐந்தாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடு ஏற்கனவே முடிந்து விட்டது. எனினும் துல்லியமான ஆய்வுகள் மேற்கொள்ளும் வசதிக்காக மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி இன்னும் ஒரு வாரத்தில் ஐந்தாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விடும். அதன்பிறகு அது தொடர்பான ஆய்வறிக்கை மூன்று மாதங்களில் வெளியிடப்படும். கீழடியில் அகழவாய்வு பணிகள் தடையில்லாமல் மேற்கொள்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் 15 கோடி நிதி கேட்டுள்ளோம். அருங்காட்சியகம் அமைப்பதற்காக தமிழக அரசு ஏற்கனவே 1 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதை வைத்து தமிழக அரசு டெண்டர் விட முடிவு செய்துள்ளது. பெரிய அளவில் அருங்காட்சியகம் அமைந்திட வேண்டும். அதற்கு வேண்டிய நிதி திரட்டும் முயற்சி நடக்கிறது. நாங்கள் நேரடியாக மத்திய அமைச்சரை சந்தித்து நிதி கேட்டோம். மத்திய அரசு பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. அருங்காட்சியகம் அமைப்பதற்கான நிதி தருவது தொடர்பாக இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். அகழ்வாய்வுப் பணிகள் நடைபெற்று வரும் கீழடியை பார்வையிட தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். நாளுக்கு நாள் அகழாய்வு நடைபெறும் பகுதிகளுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. அங்கு வந்து என்ன நடக்கிறது என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக உள்ளனர். இதனால் கீழடியில் ஆய்வு பணியை முடிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது.
கீழடியில் உலகத்தரமான அருங்காட்சியகம் அமைப்பதில் எந்த தடைகளும் இல்லை. நிச்சயம் அந்த இடத்தில் அருங்காட்சியகம் வைப்பதற்கான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கிடையில், கீழடி அகழ்வாய்வின் வழியில் கிடைத்த தரவுகளை தமிழர் பண்பாடு என சொல்வதை விட பாரத பண்பாடு என சொல்ல வேண்டும் என நான் கூறியதாக சொல்கிறார்கள். உண்மையில் நான் அப்படி எதுவும் சொல்லவில்லை. அது தவறான தகவல்.கீழடியில் உலகத்தரமான அருங்காட்சியகம் அமைப்பதில் எந்த தடைகளும் இல்லை. நிச்சயம் அந்த இடத்தில் அருங்காட்சியகம் வைப்பதற்கான நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
தமிழக இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி: ரவிக்குமார், எம்பி
அண்மைகாலமாக பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்கள் பலவற்றில் மாநில வேலைவாய்ப்புகளில் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்குவதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் அப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மாநில அரசு வேலை வாய்ப்புகளும் பிற மாநிலத்தவருக்கு திறந்து விடப்படுகிறது. மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநிலத்தவர் கொண்டு வந்து குவிக்கப்படுகின்றனர். போதாக்குறைக்கு மாநில அரசும் தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2ம் தேர்வில் முதல் நிலை தேர்வில் மொழிப்பாடம் அகற்றப்பட்டு இருப்பது பிற மாநிலத்தவர்கள் வேலையை வந்து அபகரிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் எந்த ஒரு மாநில அரசு பணிகளுக்கும் பிற மாநிலத்தவர் பங்கேற்க முடியாது என்ற தடை இல்லை. இதனால், இங்கே படித்து முடித்து வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. பிற மாநிலங்களில் தமது மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போது, நமது மாநில அரசு அது பற்றி கவலைப்படாமல் மத்தியில் ஆளும் பாஜவினர் திருப்திபடுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதனால், தான் மக்கள் தமது உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி போராடும் போது அவர்களை எல்லாம் குறுகிய நோக்கம் ெகாண்டவர்களாகவும், பிரிவினை வாதிகளை போலவும் பாஜவினர் அதன் பரிவாரங்களும் சித்தரிக்கின்றனர்.
நாம் போராடுவது, நம்மை தற்காத்து கொள்வதற்காக தான். ஆக்கரமிப்பில் இருந்து தமிழகத்தை காப்பாற்றி கொள்ளதான். இதை பிரிவினைவாதம் என்று கூறுபவர்கள் தமிழக நலனில் அக்கறை இல்லாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்தி மொழி ஆதிக்கம் எல்லா தளங்களிலும் வழிந்து திணிக்கப்படுகிறது. மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றான தமிழை ஆக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை மத்திய அரசால் பரிசீலிக்கப்படவே இல்லை. அரசியலமைப்பு சட்டத்தில் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் மத்தியில் ஆட்சி மொழிகளாக்க வேண்டும். அதுமட்டுமின்றி மேலும் 38 மொழிகள் தம்மை 8வது அட்டவணையில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்து காத்திருக்கின்றன. அதையும் சேர்க்க வேண்டும். தமிழகம் கோரியது சுயநலன் அடிப்படையிலான கோரிக்கை அல்ல. அது ஜனநாயகத்துக்கான கோரிக்கை. அதனால் தான் அனைத்து மொழிகளையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகிறோம். ஆனால், ஆட்சியில் உள்ளவர் இந்தியை திணிக்க முயற்சிக்கின்றனர்.
இந்திக்கு கொடுக்கும் முன்னுரிமை என்பது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 351ன் மூலம் வழங்கப்படுகிறது. அந்த பிரிவு உருவாக்கப்படும் போது, மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படவில்லை. 1956ம் ஆண்டுக்கு பிறகு தான் மாநிலங்கள் மொழி அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டன. எனவே, இந்திக்கு முன்னுரிமை அளிக்கும் 351யை திருத்த வேண்டும். இந்த கோரிக்கையை தமிழகம் வலுவாக எழுப்ப வேண்டும். நாம் தற்காப்பு போராட்டத்தில் மட்டுமே நடத்தி கொண்டிருப்பதால் நம்மை பலவீனமானவர்கள் என்று இந்தி ஆதிக்கவாதிகள் கருதுகின்றனர். எனவே, நாம் முன்னோக்கி நகர வேண்டும். நமது கோரிக்கைகள் இன்னும் வலுவாக உலக அரங்கில் எடுத்துரைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான் தமிழை பாதுகாக்க முடியும்.மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழை ஆக்க வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இதுவரை மத்திய அரசால் பரிசீலிக்கப்படவே இல்லை.
தமிழருக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் தேவை: பழ.கருப்பையா, முன்னாள் எம்எல்ஏ
கீழடி நாகரிகம் சிறந்த நகர நாகரிகம். சங்க கால பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள நாகரீகத்திற்கான புறச்சான்றுகள். இதை போய் பாரத தேசம் நாகரிகம் என்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். தமிழின் பெருமையை அமெரிக்காவில் பேசியதாக தமிழ்நாடு வந்து தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர் மோடி. கீழடி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்று சொன்னால் மோடி நிதி தரமாட்டார் என்பதற்காக அதை பாரத தேச நாகரிகம் என்று சொன்னதாக சொல்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். அப்படியானால் மோடியின் உண்மையான முகம் தான் என்ன? கீழடி நாகரீகத்தை பாரத தேச நாகரிகம் என்று சொல்கிறாரே பாண்டியராஜன், அப்போது பாரத தேசம் இருந்ததா. இனி வள்ளுவனையும் பாரத தேசத்தின் புலவர் என்பார் அமைச்சர். சிலர் இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறீர்களா என்றால் உங்கள் புண்ணியத்தில் நன்றாக இருக்கிறோம் என்பார்கள். ஒருவன் புண்ணியத்தில் இன்னொருவன் எப்படி நன்றாக இருக்க முடியும். அண்டி பிழைப்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக எதற்கெல்லாமோ பணிந்து போகட்டும்; ஆனால், மக்கள் நலன்களை கூட அடகு வைப்பதா? இது எவ்வளவு பெரிய துரோகம் என்பது எதிர்காலம் அவர்களுக்கு உணர்த்தும். தொடர்ந்து இந்த தவறை ஆளும் அரசு செய்து வருகிறது. மத்தியில் என்ன சொன்னாலும், தலையாட்டுவது என்பது வெட்கி தலைகுனிய வைக்கும் நிலை.
மத்தியில் உள்ளளவர்கள் தொடர்ந்து தமிழை புறக்கணித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. திட்டமிட்டு தான் அவர்கள் இந்தியை எந்த வழியாக இருந்தாலும் திணிக்க முயற்சிக்கின்றனர். மோடி நிதி தராவிட்டால் தமிழ் நாகரிகம் இல்லாமல் போய் விடுமா. பொறியியல் கல்லூரியில் பகவத் கீதையை கற்பித்தால் என்ன தவறு என்று கேட்கிறார் அமைச்சர் பாண்டியராஜன். அவர், ஒரிஜினல் அக்மார்க் பாரதீய ஜனதா கட்சிக்காரர். எப்படி நிதிக்காக ஒரு பேச்சு பேசினாரோ, அப்படி பதவிக்காக பாஜவில் இருந்து தேமுதிக வழியாக அதிமுகவுக்கு வந்து அமைச்சரானவர். எந்த ஒன்றிலும் பயன்கருதி செயல்படுபவர் அமைச்சர் பாண்டியராஜன். கடமையை செய் பயனை எதிர்பார்க்காதே என்கிற கீதையை இவர் பரிந்துரைக்கிறார். இவருக்கு கீதை என்பது தத்துவ நூல் இல்லை. மோடியை வளைப்பதற்கு பயன்படுகிற கருவி. ஒரு கொள்கையும் இல்லாத பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராகி இருப்பதை பார்க்கும் போது எப்படி தமிழ் வளரும். அவர் வேறு துறைக்கு அமைச்சராகி இருக்கலாம். அவர் தமிழ் வளர்ச்சித்துறைக்கு அமைச்சராகி இருப்பது தமிழுக்கு ஆக்கமானது இல்லை. தமிழின் பெருமையை குறைக்கிறது. 4 ஆயிரம் ஆண்டு நாகரிகம் பாண்டியராஜன், மோடி தயவில்லாமலேயே வளர்ந்து இருக்கிறது.
ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில இளைஞர்களுக்கு தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்றியுள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். அவரவர் மாநிலத்தில் அவரவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும், அந்தெந்த மாநிலத்தில் உள்ளவர்கள் வேலை செய்தால் தான் ெமாழி பிரச்னை வராது. மற்ற மாநிலத்தில் உள்ளவர்கள் தமிழகத்தில் வேலை செய்யும் போது சில நேரங்களில் இங்குள்ளவர்களுடன் மொழி கலந்துரையாடலால் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. ரயில்வே துறையில் தமிழில் தேர்வு இருக்கிறது என்று கூறியுள்ளனர். அதே போன்று டிஎன்பிஎஸ்சியில் முன்பை விட தமிழுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்று அதன் நிர்வாகம் கூறியுள்ளது. எனவே, தேர்வு நடைபெறும் போது தான் நிறை, குறை என்ன என்பது தெரியும்.ஆந்திரா போன்ற மாநிலங்களில் மாநில இளைஞர்களுக்கு தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்றியுள்ளனர். அதே போன்று தமிழகத்தில் சட்டம் கொண்டு வர வேண்டும். அவரவர் மாநிலத்தில் அவரவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழ் மெல்ல சாகடிக்கப்படுகிறதா?: ஒவ்வொரு தேர்வுகளிலும் புறக்கணிப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.