தடம் மாறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நிலை மாறவேண்டும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 21, 2019

Comments:0

தடம் மாறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நிலை மாறவேண்டும்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கல்வியின் அவசியத்தை உணராமல் நடந்துகொள்ளும் அலட்சியப் போக்கு பல மாணவர்களிடையே காணப்படுகிறது. மன ரீதியான பல மாற்றங்கள் மாணவ சமூகத்தில் ஏற்பட்டுள்ளது கவலையளிக்கிறது. பல ஊர்களில் நீலத்திமிங்கல விளையாட்டுக்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள், உயிரை விட்டவர்கள் சென்னையில் தொடர்வண்டியில் பட்டாக்கத்தியுடன் விபரீத விளையாட்டில் ஈடுபட்டவர்கள், பப்ஜி விளையாட்டுக்காக பெற்றோரையே வெறுத்து வீட்டை விட்டே வெளியேறியவர்கள் எனக் கேள்விப்படும் செய்திகள் எல்லாம் நம் கவலையை மேலும் அதிகரிக்கச்செய்கின்றன. நம் கல்வியும் சமூகமும் தற்கால மாணவ சமூகத்திற்குக் கற்றுத்தந்ததுதான் என்ன? என்கிற மிகப்பெரிய கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ளவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் இத்தகைய போக்கு சமூக ஆர்வலர்களையும் கல்வியாளர்களையும் கவலைகொள்ளச் செய்துள்ளது. டிஜிட்டல் உலகம் நம் இளைஞர்களுக்கு அளித்த பரிசு இதுதானா? சென்ற நூற்றாண்டின் இறுதியில் இளைஞர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை நினைவுபடுத்துவது இன்றைய இளைஞர்களுக்கு தேவைப்படலாம். இணையமோ கணினியோ கைபேசியோ கேபிள் தொலைக்காட்சிகளோ இல்லாத காலம் அது. இளைஞர்கள் பெற்றோர்களோடும், உறவுகளோடும் நண்பர்களோடும் நேருக்குநேர் அளவளாவிய காலம் அது. தனக்கு ஒரு பிரச்னை என்றால் மேற்கண்ட அனைவரிடமும் பகிர்ந்துகொண்டனர். பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து வீடு திரும்பியவர்கள் பெற்றோர்களுக்கு அவர்களின் பணிகளில் உதவி செய்வார்கள். அந்தி சாயும் நேரத்தில் நண்பர்களோடு வீதிகளில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வீடு திரும்புவர். அந்த விளையாட்டுகள் அனைத்தும் அவர்கள் சமூகவயமாவதற்கு ஆயத்தப்படுத்தின.
விடுமுறை நாட்களில் உறவினர் வீடுகளுக்குச் செல்வதன் மூலம் அந்த ஊர் பண்பாடு பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொண்டனர். எப்போதாவது நண்பர்களுடனோ பெற்றோர்களுடனோ திரைஅரங்குகளுக்குச் சென்று சினிமா பார்த்தனர். இவை ஒவ்வொன்றும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்தை மறைமுகமாகக் கற்றுத்தந்தன. கூடி வாழும் மனப்பக்குவத்தை, சமூகக் கடமைகளை அவர்கள் அவற்றின் வாயிலாக அறிந்து செயல்பட்டனர். அப்படியென்றால் அக்கால மாணவர்களிடையே எந்த சிக்கல்களும் இல்லை என்று கூறிவிட இயலாது. ஒன்றிரண்டு என்று பிரச்னைகள் இருந்திருக்கலாம். இப்படி நாம் கவலை கொள்ளும் அளவுக்கு இல்லை என்பது உறுதி. பாதை மாறி தவறான பாதையில் பயணிக்கும் மாணவ சமுதாயத்தை நிச்சயம் மீட்டெடுக்க வேண்டும். தடம் மாறாமல் தலைநிமிர்ந்து வெற்றிப்படிகளில் செல்லும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களின் செயல்பாடுதான் நம்மை கவனம் பெற செய்கிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்படுவதன் மூலமே தற்கால மாணவ சமூகத்தை பயனுள்ள சக்தியாக வளர்த்தெடுக்க முடியும். அதே சமயம் அக்கால ஆசிரியர்களைப்போல் தற்கால ஆசிரியர்கள் செயல்பட இயாலாதபடி சில கட்டுப்பாடுகள் முட்டுக்கட்டைகளாக உள்ளன என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆசிரியர்கள் பங்கு மாணவர்களை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களுக்குப் பெரும்பங்கு உள்ளது. பாடத்தைத் தாண்டி தன்னிடம் பயிலும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் தானே முன்மாதிரியாக நடந்துகொள்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு மாணவனின் குடும்பச்சூழலை அவர்களோடு உரையாடி அறிந்துகொண்டு அவர்களின் தேவைகளை நம்மால் இயன்ற அளவு நிறைவு செய்வதோடு நல்ல நண்பராக அவனோடு பழகினால் நமக்கு ஒரு பிரச்னை என்றால் நம் ஆசிரியரிடம் கூறலாம் என்னும் மனநிலையை ஏற்படுத்திவிட வேண்டும். அதன்மூலம் அந்த மாணவன் நம்மைப் பின்பற்றத் தொடங்குவான்.
பெற்றோர் பங்கு தன் குழந்தையின் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதைப் பெற்றோர்கள் தவிர்க்கவேண்டும். தன் குழந்தைகளைப்பற்றி முதலில் நன்கு புரிந்துகொண்டு அவர்களிடம் நட்போடு பழகி அவர்களின் நன்மதிப்பைப் பெற்றோர்கள் பெறுவது அவசியம். பிறகு தாத்தா, பாட்டி, அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா போன்ற உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களோடு நெருங்கிப் பழகி அவர்களின் நல்ல பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வழிவகை செய்திடல் அவசியம். அளவோடு செல்லம் கொடுப்பது அவசியம். தேவைப்படும் நேரத்தில் கண்டிக்க வேண்டும். ஒரே பிள்ளையாக இருக்கிறதே ஏதாவது செய்து கொள்ளுமோ என்ற அச்சத்தைக் கைவிடவேண்டும். நட்பும் கண்டிப்பும் இரு கண்களைப்போன்றது என்பதை அவர்களுக்கு நம் செயல்பாடுகள் மூலம் உணர்த்தவேண்டும். உங்கள் மகன் படிக்கும் பள்ளி/கல்லூரிக்கு அவ்வப்போது சென்று பார்த்து வருவதோடு ஆசிரியர்களைச் சந்தித்து தன் மகன்/மகளைப் பற்றி உரையாடவேண்டும். நல்ல நூல்கள், திரைப்படங்களைப்பற்றி தங்களின் குழந்தைகளோடு உரையாடி அவர்களின் ரசனையை மேம்படடுத்தவேண்டும். மரபுவழி விளையாட்டுகளை விளையாடப் பழக்கவேண்டும். அந்த விளையாட்டுகள் அவர்களுக்கு விட்டுக்கொடுத்தல், கூடிவாழ்தல், தலைமைப்பண்பு ஆகியவற்றை மறைமுகமாகக் கற்றுத்தரும் வல்லமை உடையவை.
மாணவர் பங்கு பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் மனம்விட்டுப் பழகவேண்டும். நம் முன்னோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது. எப்போதும் கணினி, கைபேசி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களின் பிடியிலேயே சிக்கிக்கிடக்காமல் நண்பர்களோடு விளையாடப் பழகுதல் நலம். பெரியோர்களை மதித்து நடந்துகொள்வதை ஆசிரியர் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். அறிவுரைகள் வேப்பங்காயைப் போலக் கசக்கும். ஆனால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பெற்றோரோ பெரியவர்களோ எது சொன்னாலும் அது நம் எதிர்கால வாழ்க்கை நலன் சார்ந்ததாகவே இருக்கும் என்ற புரிதல் வேண்டும். ஆகவே ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகிய மூவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே நனி சிறந்த நற்பண்புகள் நிறைந்த இளைஞர் சமூகத்தை உருவாக்கமுடியும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews